Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அகதிகள் மறுவாழ்வு நிதி மறுப்பு: ஐ.நா.வின் மீதான கோபமே காரணம்?

அகதிகள் மறுவாழ்வு நிதி மறுப்பு: ஐ.நா.வின் மீதான கோபமே காரணம்?
, வெள்ளி, 2 ஏப்ரல் 2010 (19:46 IST)
வன்னி முகாமில் இருந்து அவர்கள் வாழ்ந்த பகுதிகளுக்கு மீள் குடியமர்த்தம் செய்யப்படும் ஈழத் தமிழர்களுக்கு உதவிவரும் ஐ.நா. தலைமையிலான அமைப்புகளுக்கு அயல் நாடுகளில் இருந்து வரும் நிதியுதவிக்கு சிறிலங்க அரசு அனுமதி மறுத்ததற்குக் காரணம், போரின் போது நடந்த குற்றங்கள் குறித்து ஐ.நா. முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளே என்று கூறப்படுகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான போர் முடிந்து சற்றேறக்குறைய ஓராண்டுக்காலம் ஓடிவிட்ட நிலையில், இன்னமும் வன்னி முகாமில் 84,152 பேர் உள்ளனர். முகாமில் இருந்து வெளியேற்றப்பட்ட 1,96,000 பேரில் பாதிக்கும் மேலானோர் அவர்களின் உறவினர்களின் வீடுகளில்தான் தங்கியுள்ளனர். சற்றேறக்குறைய ஒரு இலட்சம் தமிழர்கள்தான் அவர்கள் வாழ்ந்த பகுதிகளில் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தேவையான அத்யாவசியப் பொருட்கள் உள்ளிட்ட மறுவாழ்விற்கான நிவாரண உதவிகளை ஐ.நா.வின் தலைமையிலான பொது மனிதாபிமான நடவடிக்கைத் திட்டக் (Common Humanitarian Action Plan - CHAP) குழுதான் செய்து வருகிறது.

இக்குழுவிடம் மார்ச் 25ஆம் தேதி நிலவரப்படி வெறும் 15 மில்லியன் டாலர்கள் மட்டுமே நிதியிருப்பு உள்ளது. இது அகதிகளின் குறைந்தபட்ச மறுவாழ்வை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு தேவைப்படும் நிதியளவில் வெறும் 4 விழுக்காடு மட்டுமே. ஐ.நா. தலைமையிலான ‘சாப்’ அமைப்பிற்கு அயல் நாடுகளில் இருந்து வரும் நிதியுதவிகளுக்கு சிறிலங்க அரசு அனுமதி மறுத்துவிட்டதால் இந்த நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
‘சாப்’ நிதியுதவி பெறுவதை சிறிலங்க அரசு அனுமதிக்காகததற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுவதாக இது குறித்து ஆய்வு செய்த எக்னாமிஸ்ட் இதழ் கூறியுள்ளது.

ஒன்று, தங்களுடைய மீள்குடியமர்த்தம் மற்றும் மறுவாழ்வுப் பணிகள் அனைத்தும் ஐ.நா.தான் பொறுப்பேற்றுச் செய்து வருகிறது என்று தமிழ் மக்கள் நினைப்பதை - அதுவே உண்மையென்றாலும் - சிறிலங்க அரசால் ஜீரணிக்க முடியவில்லை. இரண்டாவது, தமிழர்களுக்கு எதிரான போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து ஐ.நா.வின் அமைப்புகள் சிறிலங்க அரசிற்கு எதிராக கூறிவரும் குற்றச்சாற்றுகள். இது சிறிலங்க அரசை கோபமடையச் செய்துள்ளது என்று அந்நாட்டு மனித உரிமை அமைச்சகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ரஜீவா விஜேசின்ஹா கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி, போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க மனித உரிமை நிபுணர்களை நியமிப்பது என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் எடுத்த முடிவிற்குப் பிறகு ஐ.நா. அமைப்புகளை முற்றிலுமாக சிறிலங்க அரசு புறக்கணித்து வருகிறது என்று எக்னாமிஸ்ட் கூறிவருகிறது.
இதனால் தமிழர்களின் மீள் குடியமர்த்தம் மட்டுமின்றி, வன்னி மாணிக்கம் பண்ணை முகாம்களில் உள்ள 85,000 தமிழர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றுவதிலும் முடக்கம் ஏற்பட்டுள்ளது. மிக நெருக்கடியான இந்நிலையை சமாளிக்க ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் (UN’s Office of Co-ordination for Humanitarian Affairs - OCHA) 3 மாத காலத்திற்கான உயிர் காக்கும் அவசர நடவடிக்கைக்கான நிதியை பெற்று அதனைக் கொண்டு உணவு, குடிநீர், தற்காலிக கூடாரங்கள், கழிவு நீர் அகற்றல் ஆகிய முக்கியத் தேவைகளை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது.

ஆனால் இந்த நிதி போதுமானதல்ல என்று தொண்டு அமைப்புகள் கூறிவருகின்றன. அயல் நிதியுதவிகளை பெறுவதற்கு சிறிலங்க அரசு அனுமதி மறுத்துவிட்ட நிலையில், மேலும் பல குறைந்த கால நிதியுதவிகள் அவசியமாகிறது என்று அந்த அமைப்புகள் கூறுகின்றன.

இதற்குக் காரணம், மீள் குடியமர்த்தப்படும் மக்கள், தங்கள் வாழ்வை தாங்களே பார்த்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லை, காரணம், அவர்கள் வாழ்விடங்களில் எந்த பணி வாய்ப்பும் இல்லாமை. எனவே, நிரந்தர வீடு கட்டித்தரும் பணிகளை துவக்குவதற்கு முன்னர், அவர்களின் இடைக்கால நிவாரணங்களை ஐ.நா. உள்ளிட்ட தொண்டு அமைப்புகளே பார்த்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.

ஈழத் தமிழர்களின் மறுவாழ்வில் அக்கறை கொண்டுள்ளதாகக் கூறி இந்திய அரசு அளித்த ரூ.500 + 500 கோடி நிதியுதவி எந்த விதத்தில் தமிழர்களின் மறுவாழ்விற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil