Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனியிடம் இருந்து கோலி கற்றுக் கொள்ள வேண்டும்: ஸ்டீவ் வாக் கருத்து

தோனியிடம் இருந்து கோலி கற்றுக் கொள்ள வேண்டும்: ஸ்டீவ் வாக் கருத்து
, புதன், 15 ஏப்ரல் 2015 (20:24 IST)
ஆஸ்திரேலியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் ஸ்டீவ் வாக், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சிறந்த கேப்டனாக செயல்படுவதற்கு மகேந்திர சிங் தோனியிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
 

 
கடந்த டிசம்பரில் தோனி டெஸ்ட் போட்டியில் ஓய்வு பெற்றதை அடுத்து கேப்டன் பொறுப்பை கோலி ஏற்றார்.  ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்றபோது கேப்டனாக இருந்த ஸ்டீவ் வாக், லாரியஸ் உலக விளையாட்டு விருதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது செய்தியாளர்களிடம் கூறுகையில், இளம் வீரரான கோலி நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.  அவர் பக்குவமடைய வேண்டும்.
 
அவர் இந்த உலகக்கோப்பையில் சில விவகாரங்களில் அதிக உணர்ச்சிவசப்பட்டார்.  அதிக ஆற்றலுடன் செயல்பட்டார்.  அதிகமாக தனித்தும் இயங்கினார்.  ஒரு கேப்டனாக அதிக சக்தி மிக்கவராக அவர் இருக்க வேண்டும். தோனிக்கு அது உண்டு. அவருக்குள் எதுவும் ஊடுருவ முடியாது. எனவே, கோலிக்கு சிறந்த முன்மாதிரியாக தோனி இருப்பார்.
 
கோலி தன் வழியில் சென்றாலும், தோனியிடம் இருந்தும் சில விசயங்களை கற்றுக் கொள்ள வேண்டும்.  மக்கள் கூறுவது குறித்து தோனி கருத்தில் கொள்வதில்லை. வெளிப்புற விசயங்கள் அவரை பாதிப்பதில்லை. அதனை சாதாரணமாக எடுத்து கொண்டு, தனது பணியை சிறப்பாக முடிக்க செல்கிறார். அதனால் மைதானத்தில் அவரால் நன்றாக விளையாட முடிகிறது.
 
கோலி உணர்ச்சிமயமாக இருப்பதை நான் ரசிக்கிறேன்.  அவர் அதனை இழக்க வேண்டியதில்லை.  ஆனால், அவர் மேற்கொள்ளும் பணியின் வழியிலேயே கொஞ்சம் சிறப்பாக செயல்பட வேண்டும் என கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி வீரர் மைக்கேல் கிளார்க் காயம் காரணமாக பெரும்பாலான போட்டிகளில் விளையாடாத நிலையில், அந்த அணி இளம் வீரர் ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் விளையாடி வருகிறது.
 
கோலி மற்றும் ஸ்மித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு பேசிய அவர், அவர்கள் இருவரும் வேறுபட்ட திறமைகளை கொண்டவர்கள். ஒருவர் தனது உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்திருப்பவராகவும் மற்றொருவர் தனது உணர்ச்சிகளை எப்பொழுதும் வெளிக்காட்டுபவராகவும் இருக்கிறார். இருவரும் சிறந்த விளையாட்டு வீரர்கள். கோலி சிறந்த டெக்னிக்கை பயன்படுத்துகிறார். ஸ்மித் தனி திறனுடன் செயல்படுகிறார். இருவருக்கும் தனிப்பட்ட திறமைகள் உள்ளன.
 
அவர்கள் நிறைய ரன்களை எடுக்க உள்ளனர்.  நீண்ட நாட்களுக்கு தலைமை பொறுப்பு வகிக்க உள்ளனர்.  ஆனால் நிச்சயமாக வேறு சில பணிகளும் அவர்கள் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர் என ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.  இந்தியாவின் பயிற்சியாளர் பொறுப்பு கிடைத்தால் ஏற்று கொள்வீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து நான் சிந்திக்கவில்லை.  இதுவரை அந்த பொறுப்புக்கு தகுதியானவனாக நான் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு குறித்து நன்கு அறிந்தவனாக நான் இருக்கிறேன்.
 
ஆனால், பயிற்சியாளர் குறித்த அனுபவம் எனக்கு இல்லை. இந்தியாவுக்கு பயிற்சி அளிப்பது கடினமான பணி. இந்தியாவின் கலாசாரம் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அணியில் இருந்து அதிகமான எதிர்பார்ப்புகள் உள்ளன. எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். அதனை தவிர்த்து வர்த்தக விசயங்களிலும் ஈடுபட்டுள்ளேன். பயிற்சியாளர் என்பது பெரிய பணி. அது மரியாதைக்குரிய ஒன்று.  அதனை நான் ஏற்கலாம். ஆனால் தற்போதைக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil