Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சச்சினை முந்திய கோலி… என் கப்பு என் காலு என போஸ் கொடுத்த மார்ஷ்! - 2023-ல் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்த டாப் 10 நிகழ்வுகள்!

Webdunia
செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:27 IST)
2023 ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட்டில் தாக்கம் செலுத்திய சுவாரஸ்யமான 10 நிகழ்வுகளைப் பற்றிய ஒரு பதிவு.
  1. கிளன் மேக்ஸ்வெல்லின் பேயாட்டம்
உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய லீக் போட்டியில் ஆஸி வீரர் க்ளன் மேக்ஸ்வெல் ஏழாவது வீரராகக் களமிறங்கிய இரட்டை சதம் அடித்து தோல்வியின் விளிம்பில் இருந்த ஆஸி அணியை வெற்றி பெறவைத்தார். 128 பந்துகள் சந்தித்த அவர் 21 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி 201 ரன்கள் சேர்த்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இத்தனைக்கும் இந்த இன்னிங்ஸின் இடையே அவருக்கு தொடையில் தசைபிடிப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இன்னிங்ஸை தான் கண்ட மிகச்சிறந்த ஒருநாள் இன்னிங்ஸ் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் புகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  1. சச்சினை  முந்திய விராட் கோலி
உலகக் கோப்பையில் நியுசிலாந்து அணிக்கு எதிராக நடந்த  அரையிறுதிப் போட்டியில் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்த விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சச்சினின் சாதனையான 49 சதங்களை முந்தி 50 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இந்த போட்டியை நேரில் வந்து பார்த்த சச்சின் டெண்டுல்கருக்கே அதைக் காணிக்கையாக்கினார். கடந்த சில ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி, மீண்டும் தன்னுடைய வழக்கமான ஃபார்முக்கு திரும்பி சச்சின் சாதனையை முந்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  1. கோப்பைன்னா வந்துட்டா நாங்கதாண்டி
எந்த போட்டியில்  வேண்டுமானாலும் தோற்று அசிங்கப்படுவோம், ஆனால் உலகக் கோப்பை என்று வந்துவிட்டால் அது எங்கள் ஏரியா என்று மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் முதல் இரண்டு போட்டிகளையும் தோற்றது ஆஸ்திரேலியா. அதனால் புள்ளிப் பட்டியலின் கடைசி இடத்துக்கும் தள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வீறுகொண்டு எழுந்து அரையிறுதிக்கு தகுதி பெற்ற ஆஸி, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை எளிதாக சுருட்டி வீழ்த்தி உலகக் கோப்பையை கையில் ஏந்தி 140 கோடி இந்தியர்களின் கனவை சுக்குநூறாக்கியது.  இது ஆஸி அணி வெல்லும் ஆறாவது 50 ஓவர் உலகக் கோப்பை என்பது குறிப்பிடத்தக்கது.
  1. என்னையா வெளியே உக்கார வச்சீங்க?
நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்களை வீழ்த்தினார் முகமது ஷமி. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 15விக்கெட்களையும், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 16 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் அவர் மொத்தமாக 55 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். உலகக் கோப்பை தொடரின் ஆரம்பத்தில் முதல் நான்கு போட்டிகளில் ஷமியை அணிக்குள் தேர்வு செய்யவில்லை. தாக்கூர் மற்றும் அஸ்வின் ஆகியோர் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு கட்டத்தில் பாண்ட்யா காயம் காரணமாக வெளியேற அணிக்குள் வந்த ஷமி “என்னையா பென்ச்ல உக்கார வச்சீங்க” என சீறிப் பாய்ந்து விக்கெட்களை தன் பாக்கெட்டுக்குள் அள்ளிப் போட்டுக்கொண்டார்.
  1. என் கப்பு என் காலு….
நடந்து முடிந்த ஐசிசி உலக கோப்பை இறுதி போட்டியில் இந்தியாவை ஆஸ்திரேலியா அணி வீழ்த்தியது. இதன்  மூலம் ஆறாவது முறையாக கோப்பையை தட்டி சென்றது ஆஸ்திரேலிய அணி. கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கோப்பையோடு வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றன. அதில் ஆஸி அணியின் வீரர் மிட்செல் மார்ஷ் உலக கோப்பை மேல் கால் மேல் கால் போட்டு போட்டோ எடுத்தது சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. இதையடுத்து இந்திய ரசிகர்களின் விமர்சனங்களுக்கு ஆளாகினார் மார்ஷ். அவர் மேல் வழக்கு தொடுக்கும் அளவுக்கு எல்லாம் சென்றார்கள்.  இந்த சர்ச்சை குறித்து பேசிய மார்ஷ் மிட்செல் மார்ஷ் “நான் அப்படி செய்ததில் எந்த தவறும் இல்லை. நான் யாரையும் அவமதிக்கும் நோக்கத்தில் அப்படி செய்யவில்லை” எனக் கூறினார். அப்படியென்றால் மீண்டும் அதே மாதிரி செய்வீர்களா எனக் கேட்கப்பட்டதற்கு ”நேர்மையாக சொல்வதானால் ஒருவேளை செய்யலாம்” எனக் கூறினார்.
  1. இப்படி ஒரு விக்கெட் இருக்கா?
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர். இந்த சர்ச்சை விவகாரத்தில் தான் 2 நிமிடத்துக்குள்ளாகவே களத்துக்குள் வந்துவிட்டதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தங்களிடம் இருப்பதாகவும் மேத்யூஸ் கூறினார். ஆனாலும் இந்த விக்கெட் கிரிக்கெட்டில் இப்படி ஒரு விக்கெட் இருக்கிறதா என கிரிக்கெட் ரசிகர்களை மூக்கில் விரல் வைக்க வைத்தது.
  1. இந்திய ரசிகர்களின் கனவைப் பறித்த டிராவிஸ் ஹெட்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கிரிக்கெட் உலகின் இரண்டு சமபலம் மிக்க அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் பவுலிங்கால் மட்டுமே இந்திய அணி வெல்ல முடியும் என்ற சூழலில் அதற்கேற்றார் போல ஆஸி அணி பேட் செய்த போது முதல் மூன்று விக்கெட்களை விரைவாக வீழ்த்தினர் இந்திய பவுலர்கள். இதனால் இந்திய அணியின் வெற்றிவாய்ப்பு பிரகாசமானது. ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக வந்து நின்றார் ஆஸி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட். வரலாற்று சிறப்புமிக்க ஒரு இன்னிங்ஸை அந்த போட்டியில் விளையாடிய அவர் 120 பந்துகளில் 137 ரன்கள் சேர்த்து வெற்றியை இந்திய அணியின் கைகளில் இருந்து தட்டிப்பறித்தார். இந்த உலகக் கோப்பையின் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களில் ஒன்றாக டிராவிஸ் ஹெட்டின் அந்த இன்னிங்ஸ் அமைந்தது.
  1. அனல் பறந்த மோதலில் கோலி, கம்பீர்
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் மற்றும் கோலி ஆகிஉய இருவருக்கும் எப்போதும் எட்டாம் பொருத்தம்தான். நடந்து முடிந்த 2023 ஐபிஎல் சீசனில் அவர் ஆர் சிபி அணி வீரரான விராட் கோலியிடம் வார்த்தை மோதலில் ஈடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் வீரர்களான கோலி மற்றும் நவீன் உல் ஹக் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதில் பெரிய வியப்பேதும் இல்லை. ஆனால் ஒரு அணியின் ஆலோசகரான கம்பீர் எதிரணி வீரரிடம் வம்புக்கு சென்றது கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. இதைகுறித்து பல மூத்தவீரர்கள் இருவரையும் கண்டித்தனர். அதிலும் வீரர் ஒருவரோடு ஆலோசகர் ஒருவர் மோதலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது என கம்பீரை விமர்சனம் செய்தனர்.
  1. ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தோனி
கடந்த சீசனோடு தோனி, ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஏனென்றால் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அவர் பெயர் மீண்டும் அணியில் இருந்தது கோடிக்கணக்கான சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமைந்தது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் தொடரில் அவர் மீண்டும் சென்னை அணிக்காக விளையாட உள்ளார் என்பது சி எஸ் கே ரசிகர்களுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தது போல அமைந்துள்ளது. அநேகமாக அடுத்த ஆண்டுதான் அவர் விளையாடும் கடைசி தொடராக இருக்கும் என்பதால் அவர் கோப்பையோடு விடைபெற வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
  1. ஐபிஎல் ஏலத்தில் சாதனை படைத்த ஸ்டார்க்
ஐபிஎல் மினி ஏலம் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக அதிக தொகைக்கு ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் எடுக்கப்பட்டார். இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூபாய் 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஒரு போட்டிக்கு 1.25 கோடி ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் ஸ்டார்க். அதாவது அவர் வீசும் ஒவ்வொரு பந்துக்கும் சுமார் 7 லட்சம் ரூபாய் சம்பளமாக பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் ஸ்டார்க் தொடர்ந்து ஐபிஎல் தொடர் விளையாடுபவர் கிடையாது. அவர் கடைசியாக ஐபிஎல் விளையாடி 9 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

IPL Mega Auction: சுக்கிரன் உச்சத்தில்..! அதிக விலைக்கு ஏலம் போன ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்! இதுவரையிலான ஏல பட்டியல்!

The Greatest of all time.. சச்சின் சாதனையை முறியடித்த கோலி! ஒரு வருடம் கழித்து அடித்த பவர்ஃபுல் சதம்!

ஜெய்ஸ்வால், விராத் கோஹ்லி சதம்.. இமாலய இலக்கு.. திணறும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள்..!

IPL Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் அதிக துட்டு உள்ள அணி இதுதான்.. RTM கை கொடுக்குமா?

இரட்டை சதத்தை நோக்கி ஜெய்ஸ்வால்.. 2வது இன்னிங்ஸில் இந்தியா பேட்டிங் அசத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments