Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தென் ஆப்பிரிக்காவின் 9 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி; இந்திய அணி அபார வெற்றி

தென் ஆப்பிரிக்காவின் 9 ஆண்டுகால சாதனைக்கு முற்றுப்புள்ளி; இந்திய அணி அபார வெற்றி
, வெள்ளி, 27 நவம்பர் 2015 (15:58 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 124 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
 

 
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 215 ரன்கள் குவித்தது.
 
இதில் அதிகப்பட்சமாக முரளி விஜய் 40 ரன்களும், ஜடேஜா 34 ரன்களும், விருத்திமான் சஹாவும் 32 ரன்களும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில், சிமோன் ஹார்மர் 4 விக்கெட்டுகளையும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 79 ரன்கள் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகப்பட்சமாக ஜேபி டுமினி 35 ரன்களும், ஹார்மர் 13 ரன்களும் எடுத்தனர்.
 
webdunia
ஜடேஜா பந்துவீச்சில் டக் அவுட் ஆகி வெளியேறும் டி வில்லியர்ஸ்
தென் ஆப்பிரிக்க அணியின் 8 வீரர்கள் ஒற்றை இலக்கத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
 
பின்பு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 173 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆகியது. ஷிகர் தவான் 39 ரன்களும், புஜாரா 31 ரன்களும், ரோஹித் சர்மா 23 ரன்களும், கேப்டன் விராட் கோலி 16 ரன்களும் எடுத்தனர்.
 
தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாஹிர் 5 விக்கெட்டுகளையும், மோர்னே மோர்கல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன் மூலம் முதல் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 310 ரன்கள் இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது.
 
webdunia
7 விக்கெட்டுகள் கைப்பற்றிய அஸ்வின்
பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. டீன் எல்கர் 10 ரன்களுடனும், ஹசிம் அம்லா 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
 
இந்நிலையில், இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடங்கிய சிறிது நேரத்தில் டீன் எல்கர் 18 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 9 ரன்களுடனும் வெளியேறினர்.
 
சிறிது நேரம் தாக்குப்பிடித்த ஹசிம் அம்லா, டு பிளஸ்ஸி ஆகியோர் தலா 39 ரன்கள் குவித்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் இந்திய சுழற்பந்து தாக்குதலை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.
 
இதனால், தென் ஆப்பிரிக்கா அணி 185 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், அமித் மிஸ்ரா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் விருது இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து 12 விக்கெட்டுகள் கைப்பற்றிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டது.
 
இதனால், இந்திய அணி 124 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
 
இந்த வெற்றி மூலம், தென் ஆப்பிரிக்க அணி 2006ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிநாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்ததில்லை என்ற சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்த பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil