Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”கிரிக்கெட் வீரர்கள் 40 நாட்களில் 10 கோடி சம்பாதிக்க முடியும்” - கபில்தேவ்

”கிரிக்கெட் வீரர்கள் 40 நாட்களில் 10 கோடி சம்பாதிக்க முடியும்” - கபில்தேவ்

”கிரிக்கெட் வீரர்கள் 40 நாட்களில் 10 கோடி சம்பாதிக்க முடியும்” - கபில்தேவ்
, திங்கள், 22 பிப்ரவரி 2016 (17:00 IST)
இன்றைய நிலைமையில், கிரிக்கெட் வீரர்கள் 40 நாட்களில் 10 கோடி சம்பாதிக்க முடியும் என்று முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியுள்ளார்.
 

 
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற, உலகளாவிய விளையாட்டு உச்சிமாநாட்டில் முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் பங்குகொண்டார்.
 
அப்போது பேசிய அவர், ”இன்றைய நிலைமையில், கிரிக்கெட்  வீரர்கள் 40 நாட்கள் விளையாடி [ஐ.பி.எல்.] 10 கோடி சம்பாதிக்க முடியும். இது பிரமாதமான விஷயம்தான். கிரிக்கெட் இப்போது எதிர்கால வாழ்க்கையின் விருப்பமாக இருக்கிறது.
 
காலம் மாறிவிட்டது. மேலும், சிந்தனை செயல்முறையும் மாறிவிட்டது. தற்போது பெற்றோர்கள் தங்களது குழந்தைகளிடம், ’உனக்கு படிக்க விருப்பமில்லை என்றால் குறைந்தபட்சம் கிரிக்கெட் விளையாட கற்றுக்கொள். சச்சினைப் போலவே, ராகுல் டிராவிட்டை போலவோ வரவேண்டும்’ என்று கூறுகின்றனர்.
 
தனியார் நிறுவனங்கள் ஸ்பான்ச்ர்ஷிப் செய்வதன் மூலமாக தங்களது பங்களிப்பை செய்ய வேண்டும். ஊடகங்களும் விளையாட்டுக்கு குறிப்பாக கிரிக்கெட்டிற்கு தேவையான பங்காற்ற வேண்டும். அரசாங்கம் இந்தியாவில் சாம்பியன்களை உருவாக்க விளையாட்டு உள்கட்டமைப்புகளை செய்ய வேண்டும்.
 
அரசாங்கம் விளையாட்டிற்கு தேவையான உள்கட்டமைப்புகளையும், மைதானங்களையும் வழங்க வேண்டும். விளையாட்டுப் பொருட்கள் மற்றும் சாதனங்கள் மீதான வரியை தளர்த்த வேண்டும்.
 
திறமையானவர்கள் வளரும் இடமான பள்ளிகளில் போதுமான இடவசதி இருக்க வேண்டும். அங்கே போதுமான விளையாட்டு மைதானங்கள் இல்லையென்றால் உலக சாம்பியன்களை தேசம் எப்படி உருவாக்க முடியும். பள்ளிகளின் மொத்த இடப்பகுதியில் 40 சதவீதம் விளையாட்டு மைதானங்களுக்கு ஒதுக்க வேண்டும்.
 
2015-16 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் விளையாட்டிற்கு 835 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. அது 6000 கோடி அளவாக மாறவேண்டும். ஸ்மார்ட் சிட்டிகளில் விளையாட்டு வளாகம் கட்டுவதற்கு குறைந்தபட்சம் 500 கோடி தேவைப்படுகிறது.
 
அதுவே, மாவட்ட தலைநகரமாக இருந்தால் குறைந்தபட்சம் 150 கோடி தேவைப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil