Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

20:20- ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது இலங்கை

20:20- ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியது இலங்கை
, திங்கள், 1 நவம்பர் 2010 (11:07 IST)
பெர்த் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இலங்கை அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரர்களாக வார்னரும், மைக்கேல் கிளார்க்கும் களமிறங்கினர்.

வார்னர் 2 ரன்களிலும், கிளார்க் 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த வாட்சன் 4 ரன்களிலும், மைக் ஹச்சி 7 ரன்களிலும், ஒயிட் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 43 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது தத்தளித்தது. பின்னர் வந்த ஹாடின்-ஸ்மித் ஜோடி சிறப்பாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டது.

ஹாடின் 35 ரன்களிலும், ஸ்மித் 34 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.

134 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது இலங்கை அணி. ஜெயவர்த்தனே-தில்ஷன் ஜோடி சிறப்பாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. ஜெயவர்த்தனே 24 ரன்களும், தில்ஷன் 41 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் அந்த அணி 16.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் சங்ககரா 44 ரன்களுடனும், பெரைரா 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கையின் ரனதேவ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுடன் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் ஆட்டம் நவம்பர் 3-ம் தேதி துவங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil