Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை சூப்பர் கிங்சுக்கு அரையிறுதி வாய்ப்பு உண்டா?

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2011 (17:17 IST)
FILE
நேற்று டிரினிடாட் அணியுடன் சேப்பாக்கத்தில் தோல்வி தழுவியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. நாளை அந்த அணி நியூசவுத்வேல்ஸ் அணியை வீழ்த்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

சாம்பியன்ஸ் “லீக்” 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் “ஏ” பிரிவில் இடம்பெற்றுள்ளது. கேப்கோப்ராஸ், மும்பை இந்தியன்ஸ், நியூசவுத் வேல்ஸ், டிரினிடாட் டொபாக்கோ ஆகிய அணிகள் அந்த பிரிவில் இடம் பெற்றுள்ளன.

இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் கேப்கோப்ராசை 4 விக்கெட்டில் வென்றது. நேற்றைய 3-வது ஆட்டத்தில் டிரினிடாட் அணியிடம் 12 ரன்னில் தோற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் கடைசி லீக் ஆட்டத்தில் நியூசவுத் வேல்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அரை இறுதியில் நுழைய வாய்ப்பு உள்ளதா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் குறைவான வாய்ப்புகளே உள்ளது.

சென்னை அணி 3 ஆட்டத்தில் ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. நிகர ரன்ரேட் -0.181 ஆக இருப்பதால் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

கேப் கோப்ராஸ்- டிரினிடாட் இடையே நாளை நடைபெறும் ஆட்டத்தில் முதலில் கோப்ராஸ் தோற்கவேண்டும். அடுத்து சென்னை அணி நியூசவுத் வேல்சை வீழ்த்த வேண்டும்.

அப்படி நிகழ்ந்தால் மும்பை அணி 5 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து தகுதி பெறும்.சென்னை, நியூசவுத் வேல்ஸ், டிரினிடாட் ஆகிய 3 அணிகளும் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தேர்வாகும். நியூசவுத் வேல்ஸ் அணியின் ரன்ரேட் +0.44 ஆகும். டிரினிடாட் ரன்ரேட் +0.18 ஆகும். இதனால் சென்னை அணி அதிகமான ரன்னில் வெல்ல வேண்டும்.

FILE
மாலை 4 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேப்கோப்ராஸ் அணி டிரினிடாட்டை வீழ்த்தினால் சென்னை அணி விளையாடுவதற்கு முன்பே வாய்ப்பை இழந்துவிடும். நியூசவுத் வேல்சை வீழ்த்தினாலும் அதில் பலன் இருக்காது. இதனால் நாளைய ஆட்டத்தில் கோப்ராஸ் அணி டிரினிடாட்டிடம் தோற்க வேண்டும்.

சென்னை அணி மிகப்பெரிய ரன்னில் நியூசவுத் வேல்சை வெல்ல வேண்டும். அப்படி நிகழ்ந்தால் மட்டுமே சென்னை அணி வாய்ப்பை பெறும். சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் கோப்ராஸ், நியூசவுத் வேல்ஸ் அணிகள் வெற்றி பெற்றால் நியூசவுத் வேல்ஸ் 6 புள்ளிகளுடன் தகுதி பெறும். மும்பை, கோப்ராஸ் 5 புள்ளியை பெற்று சம நிலையில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

நாளைய ஆட்டத்தில் டிரினிடாட் மற்றும் நியூசவுத் வேல்ஸ் அணிகள் வெற்றி பெற்றால் நியூசவுத் வேல்ஸ், மும்பை அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

“பி” பிரிவில் வாரியர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தலா 4 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன. வாரியர்ஸ் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் சோமர்செட் அணியை 5-ந்தேதி சந்திக்கிறது.

கொல்கத்தாவுக்கு அனைத்து ஆட்டமும் முடிந்துவிட்டன. சோமர்செட், சவுத் ஆஸ்திரேலியா அணிகள் தலா 3 புள்ளிகளுடன் உள்ளன. இதில் சோமர்செட் அணிக்கு இன்னும் 2 ஆட்டம் உள்ளது. பெங்களூர், வாரியர்சுடன் மோத வேண்டும். சவுத் ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் ஒரு ஆட்டம் உள்ளது. அந்த அணி கடைசி “லீக்” ஆட்டத்தில் பெங்களூர் அணியை 5-ந்தேதி சந்திக்கிறது.

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் தான் மோதிய 2 ஆட்டத்திலும் தோற்றது. 3-வது “லீக்” ஆட்டத்தில் அந்த அணி இன்று சோமர்செட்டை சந்திக்கிறது. இதில் பெங்களூர் தோற்றால் வாய்ப்பை இழந்து வெளியேற்றப்படும்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments