Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிளார்க் அபாரம்; ஆஸ்ட்ரேலியா வெற்றி

கிளார்க் அபாரம்; ஆஸ்ட்ரேலியா வெற்றி
, வியாழன், 3 பிப்ரவரி 2011 (11:46 IST)
இங்கிலாந்துக்கு எதிரான 6-வது ஒருநாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆஸ்ட்ரேலியக் கேப்டன் கிளார்க் 69 பந்துகளில் 82 ரன்கள் விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 333 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.2 ஓவர்களில் 334 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

334 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. வாட்சன், ஹாடின் ஆகியோர் ஆட்டத்தைத் தொடங்கினர்.

வாட்சன் ஆரம்பம் முதலே இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அடித்து ஆடத் துவங்கினார். நிதானமாக ஆடிய ஹாடின் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் பெர்குசன் களமிறங்கினார். அபாரமாக ஆடிய வாட்சன் 34 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஜேம்ஸ் ஆண்டர்சனின் ஒரே ஓவரில் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களை விளாசிய போது 6 ஓவர்களில் 56 ரன்களை எட்டியது ஆஸ்ட்ரேலியா.

விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுவதைப் பார்த்த கேப்டன் மைக்கேல் கிளார்க், தான் இறங்காமல் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனை களமிறக்கினர். அவரின் மாற்றுத் திட்டத்துக்கு நல்ல பலன் கிடைத்தது.

ஜான்சனும்-பெர்குசனும் சிறப்பாக ஆடினர். அவர்களை விரைவாக வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அணியின் ஸ்கோர் 166 ரன்களை எட்டியபோது பெர்குசன் 46 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஜான்சனுடன், கிளார்க் ஜோடி சேர்ந்தார். அசத்தலாக ஆடிய ஜான்சன் 59 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 1 பவுண்டரியுடன் 57 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

பின்னர் ஒயிட் ஆடவந்தார். கேப்டன் கிளார்க் அதிரடியாக விளையாடினார். ஒயிட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் கிளார்க் 51 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். பின்னர் வந்த டேவிட் ஹசியும் அதிரடியாக ஆட ஆஸ்திரேலியா 45.3 ஓவர்களில் 300 ரன்களை எட்டியது.

ஹசி 38 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்மித் ரன் ஏதுமின்றி வெளியேறினார். சிறப்பாக ஆடி வந்த கிளார்க்கும் 82 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்தின் பக்கம் ஆட்டம் திரும்புவதுபோல் இருந்தது.

ஆனால் ஆஸ்திரேலியா 49.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கான 334 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது. டிராட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

6 ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸ்திரேலியா 5 ஆட்டங்களிலும், இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வெற்றிபெற்றுள்ளன. சமீப காலங்களாக தடுமாறி வந்த ஆஸ்திரேலிய அணி, உலகக் கோப்பை தொடங்க இன்னும் இரண்டு வார காலங்களே உள்ள நிலையில் மீண்டும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil