Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசியக் கோப்பை இறுதி: பாகிஸ்தான் 236 ரன்கள்!

ஆசியக் கோப்பை இறுதி: பாகிஸ்தான் 236 ரன்கள்!
, வியாழன், 22 மார்ச் 2012 (17:48 IST)
FILE
டாக்காவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வங்கதேசத்தினால் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்ட பாகிஸ்தான் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஓவரில் 19 ரன்களை சஹாதத் ஹொசைன் விட்டுக் கொடுத்தார். சர்பராஸ் அகமட் 52 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார்.

துவக்கத்திலிருந்தே மிகவும் நெருக்கடி கொடுத்து வந்தது வங்கதேசம், நாசிர் ஹுசைன் என்ற அபாரமான ஜாண்டி ரோட்ஸ் போன்ற மின்னல் வேக பீல்டர் பல்வேறு இடங்களிலும் கைகொடுக்க பாகிஸ்தான் ரன் எடுப்பது மந்தமாகவே இருந்தது.

70/4 என்று 22வது ஓவரில் பாகிஸ்தான் இருந்தபோது மிகவும் குறைவாகவே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 12 ஓவர்களில் உமர் அக்மலும், ஹம்மத் ஆஸமும் இணைந்து 60 ரன்களை சேர்த்தனர். ஹம்மத் ஆஸம் 30 ரன்கள் எடுத்து ஷாகிப் பந்தில் அனாவசியமாக ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு உமர் அக்மலும் 30 ரன்களில் ஆட்டமிழக்க 35வது ஓவர் முடிவில் 133/6 என்று மேலும் சரிவடையும் அபாயத்தைச் சந்தித்தது. உமர் அக்மல் பேடில் பட்டுச் சென்ற பந்திற்கு அவுட் கொடுத்து நடுவர் இயன் கோல்டு சொதப்பிவிட்டார், கடுமையாக திட்டியபடியே அவர் பெவிலியன் சென்றார். யூனிஸ் கான், உமர் அக்மல் மோசடித் தீர்ப்பிற்கு ஆளாயினர்.

ஆனால் பவர் பிளே எடுக்கப்பட்டபோது அதிரடி மன்னன் ஷாகித் அப்ரீடி நீண்ட நாட்களுக்குப் பிறகு பொறுப்புடன் ஆடி விளாசல் செய்தார். அவர் 22 பந்துகளில் 4 பவுண்டரிகள் ஒரு சிக்சர் சகிதம் 32 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலாக இருந்தபோது ஷாகிப் வீசிய ஆபத்தேயில்லாத, என்ஙு வேண்டுமானாலும் அடிக்க வேண்டிய புல்டாஸை கன்னாபின்னாவென்று அடித்து பந்து மிட் ஆப் திசையில் மேலே உயர அதனை மின்னல் ஃபீல்டர் நாசிர் ஹ்ஸைன் அபாரமாக முன்னால் டைவ் அடித்துப் பிடித்தார்.

அதன் பிறகே சர்பராஸ் அகமட் நிதானத்துடன் சாதுரியமாகவும் ஆடி 46 ரன்களை எடுத்தார். அதுவும் கடைசி ஓவரில் 19 ரன்களை விளாசியதால் ரன் எண்ணிக்கை சற்றே பலமான நிலைக்கு வந்துள்ளது.

வங்கதேச அணியில் அப்துர் ரசாக் 10 ஓவர்களி 26 ரன்களை விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சிறப்பான வீச்சாளராகத் திகழ்ந்தார். ஷாகிப் அல் ஹசனும் 39 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

237 ரன்கள் வெற்றி இலக்குடன் முதல் ஆசியக் கோப்பை சாம்பியன் கனவுகளுடன் வங்கதேசம் இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்கவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil