இயேசுபிரான் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்தாலும் எவருக்குமில்லாத பற்றுதலை இவ்வுலக மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறார் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்று.
இது வியப்பாக இருப்பினும், இதன் காரணத்தை, பின்னணியை அந்நாட்களில் வாழ்ந்த சில இறை அன்பர்கள் தனித்தனியே தங்கள் பாணியில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அவற்றில் சுவிசேஷங்கள் என்றழைக்கப்படும் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்றழைக்கப்படும் நான்கு புத்தகங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். இச்செய்தியை நான்கு பாகங்களாகப் பிரித்து வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
இயேசு பிறப்பின் தூது - பாகம் 1 :
பரி. மத்தேயு எழுதின சுவிசேஷம் :
பரி. மத்தேயு, இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர். இவரே விவிலிய நூலில் உள்ள புதிய ஏற்பாட்டிலிருக்கும் மத்தேயு என்னும் புத்தகத்தை எழுதியவர். இப்புத்தகம் கி.பி. 65-100க்கிடையில் முதலில் அரபிக் மொழியிலும், பின்னர் கிரேக்க மொழியிலும் வடிவம் பெற்றுள்ளதாக வரலாற்றின் மூலம் அறியலாம்.
இப்புத்தகத்தில் இயேசுவின் பூர்வீகம் தொடங்கி, பிறப்பு, அவர் வாழ்ந்த காலங்களில் நடந்த பல நிகழ்ச்சிகள், இயேசுவை சிலுவையில் அறைதல், உயிரோடெழுதல் வரை தொகுத்து எழுதியுள்ளதை காணலாம்.
இயேசு பிறப்பின் பின்னணி :
இயேசு பிறப்புக்கு ஏறக்குறைய 1500 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் நாட்டு மக்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். கர்த்தர், மோசேயை தெரிந்து கொண்டு, அம்மக்களை எகிப்து தேசத்திலிருந்து மீட்டு, அவர்களுக்கு வாக்குக் கொடுத்த கானான்தேசத்தை அடைய வழி நடத்தினார். இந்த தேசத்தின் ஒரு பகுதியில்தான் இன்று உள்ள இஸ்ரேல் நாடு அமைந்துள்ளது. இம்மக்களுக்கு கி.மு. 1100-975க்குமிடையில் சவுல், தாவீது, சாலமோன் போன்ற பேரரசர்கள் கிடைத்தனர். பின்னர் பல சிற்றரர்கள் தோன்றினர். இதன் பின் இஸ்ரேல் தேசம் முற்றிலுமாக அந்நியரின் ஆதிக்கத்தின் கீழ் வர நேர்ந்தது. இம்மக்கள் சிறைக்கைதிகளாக பிடிக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்சூழலில் இஸ்ரேல் மக்களுள் தீர்க்கதரிசிகள் சிலர் தோன்றி இவர்களுக்கு ஆதரவாகவும், வழிகாட்டிகளாகவும் இருந்து வந்தனர். இவர்களில் ஏசாயா, மீகா என்ற தீர்க்கதரிசிகள் குறிப்பிடத்தக்கவர்கள்.
இஸ்ரேல் மக்களுக்கு தாவீது ராஜாவின் வம்ச வழியில் ஒரு ராஜா - மேசியா பிறக்கப் போகிறார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தவர்கள் இவர்களே. "மேசியா" என்பது எபிரேய சொல்லாகும். இதற்கு கிரேக்க மொழியில் கிறிஸ்டோஸ் என்று பொருள். இந்த கிறிஸ்டோஸ் சொல்லே ஆங்கிலத்தில் கிறிஸ்து என்று வழங்கப்படுகிறது. இந்நிலையில் இஸ்ரேல் மக்களும், இந்த நம்பிக்கையோடு, பல நூற்றாண்டுகள், பெர்சிய, பாபிலோனிய, கிரேக்க ஆதிக்கத்தினரை எதிர்கொண்டு வாழ்ந்து வந்தனர். பின்னர் 200 ஆண்டுகள் ரோம ஆதிக்கம் இருந்தது. இந்த ரோம ஆட்சியின் கீழ் யூதர்கள் வாழ்ந்த ஒரு பகுதியை ஏரோது ஆண்டு வந்தான். அந்த நாட்களில்தான் இயேசு பிறந்தார்.
அவரின் பிறப்போ மிகச் சாதாரணமாக இருந்தது. ஆனால் அது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாக உலகிற்கு வெளிப்பட்டது. அதைக் கேள்வியுற்ற அன்றிருந்த ஆட்சியாளர்கள் மிகுந்த கலக்கமுற்றனர். அப்போதே இயேசுவை கொலை செய்யத் திட்டமிட்டனர். ஆனால் அது கைகூடாமற் போயிற்று.
இயேசு பிறப்பின் தனிச் சிறப்பு :
முன் கூறியபடி இயேசுவின் பிறப்பு சாதாரண மனிதனின் பிறப்பை விட எளிமையாக இருந்தது என்பதை யாவரும் அறிவோம். இந்த தாழ்மையின் ரூபத்தை எடுத்துக்காட்டும் பரி. மத்தேயு, இயேசுவின் பூர்வீகத்தை கூற தவறவில்லை. இயேசு என்னும் இறையரசர், அரச பரம்பரையை சார்ந்தவர் என்று சான்றுடன் கூறுகிறார். கடவுள் தெரிந்தெடுத்த ஆபிரகாம் வம்ச வழி வந்தவர் இஸ்ரேல் நாட்டை ஆண்ட தாவீது ராஜா (கி.மு. 1055). இவரின் வாரிசே இயேசு என்று பெரிய பட்டியலே போட்டு காண்பித்திருக்கிறார். (மத்தேயு 1 : 1 - 17)
அடுத்து, பல நூறு ஆண்டுகளுக்கு முன் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்த (ஏசாயா 7 : 14 மீகா 5 : 2), மேசியா, இயேசுதான் என்று மிகத் தெளிவாக இவ்வாறு கூறுகிறார் :
"இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவாயாக". இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்" (மத்தேயு 1 : 22).
மேலும் பழைய ஏற்பாட்டில் உரைக்கப்பட்டவைகளை நிறைவேற்ற வந்தவரே இயேசு என்று கூறுகிறார் (மத்தேயு 2 : 15, 17-18, 23). மனித உரிமைக்கு சாதகமான புதிய வழிமுறைகளை விளக்கியுள்ளார்.