மாற்கு சுவிசேஷ நூலை எழுதிய மார்க் என்னும் இறை அடியார் என்ன கூறுகிறார் என்பதைக் காண்போம்.
இயேசுபிரானின் நெருங்கிய சீடர்களில் ஒருவரான பரிபேதுருவுக்கு இவர் நண்பர். அக்காலத்தில் கிறித்துவர்களிடையே நன்மதிப்பு பெற்றிருந்த பர்னபாசிடத்திலும் இயேசுவின் இறைச் செய்தியை உலகிற்கு பறைசாற்றிய பரி. பவுல் அடியாரிடத்திலும் மார்க் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். ஆகையால் இவர் இயேசுவைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இவரின் இயற் பெயர் யோவான் மாற்கு என்பதாகும்.
இயேசுவைப் பற்றி :
மாற்கு அடியார் மற்ற சுவிசேஷ நூல்களான மத்தேயு, லூக்காவில் உள்ளது போல இயேசுவின் சரித்திரம், பிறப்பு குறித்து அதிகம் சொல்லாமல் இயேசுவின் வாழ்நாட்களில் நடந்த நிகழ்ச்சிகள் மூலம் அவர் யார் என்பதை எடுத்துக் கூறுகிறார். இவற்றை இப்போது காண்போம்.
இயேசு தேவனுடைய குமாரன் :
மாற்கு அடியார் இயேசு தேவனுடைய குமாரன் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார். இக்கருத்தை இவர் எழுதிய புத்தகத்தின் ஆரம்பத்திலேயே வெளிப்படுத்தியிருப்பதை இவ்வாறு காணலாம்.
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறி°துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். (மாற்கு 1 : 1)
இச் செய்தியை மேலும் உறுதிப்படுத்த அந்நாட்களில் வாழ்ந்த நூற்றுக்கு அதிபதி (ஊநவேரசiடிn) கூறியதையும் எடுத்துரைக்கிறார். இயேசு கிறி°து தம் விரோதிகளால் பிடிக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டார் என்பதை அறிவோம். இச் செய்தியினை ஏற்கனவே "உலகம் இயேசுவைக் காட்டிக் கொடுத்தல்" என்ற கட்டுரையில் விரிவாகக் கண்டோம். இயேசு சிலுவையில் அறையப்பட்டு அவர் உயிரை விடும் நேரத்தில், பூமி அதிர்ந்தது, கன்மலைகள் பிளந்தது, கல்லறைகள் திறந்தது, பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது, தேவாலயத்தின் திரைச் சீலையும் மேல் தொடங்கி கீழ் வரை இரண்டாகக் கிழிந்தது என்று அந்த வேளையின் மகிமையை குறித்து கூறப்பட்டுள்ளது. அவ்வேளையில் அப்பொழுது இயேசுவிற்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி வியந்து "மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமரன்" என்றான் (மாற்கு 15 : 39) என்பதை மாற்கு அடியார் எடுத்துக் கூறுவதிலிருந்து அவர் இயேசு தேவனுடைய குமாரன் என்ற கருத்தில் நிச்சயத்தோடு இருந்தார் என்பதை காண்கிறோம்.
பிரபஞ்ச அதிகாரி :
இயேசு இப்பிரபஞ்சத்தின் அதிகாரி என்பதை அவர் அந்நாட்களில் செய்த அற்புதங்களே சாட்சி என்பதை விவரிக்கின்றார். இதற்கு சான்றாக இயேசுவானவர் செய்த 19 அற்புதங்களை தம் நூலில் எடுத்துக் கூறுவதைக் காணலாம். இறையரசர் இப்பூமிக்கு அதிகாரி என்றும் மனிதனை எல்லாவற்றினின்றும் விடுதலையளிப்பவர் என்றும், இதில் மரணமும் விதிவிலக்கல்ல என்றும் அவர் செய்த அற்புதங்கள் மூலம் வெளிப்படுத்துகிறார். அவற்றில் சிலவற்றைக் காண்போம் :
(இயேசு புயல் காற்றை அமைதலாயிரு என்றார். காற்று நின்று அமைதல் உண்டாயிற்று). மாற்கு 4 : 39
ஒரு நாள் மாலை இயேசு கலிலேயா கடலில் படகில் ஏறி தம் சீடர்களை நோக்கி அக்கரைக்கு போகலாம் என்றார். அவர்கள் படகில் செல்லும்போது பலத்த சுழல் காற்று உண்டாகி படகு நிரம்பத்தக்கதாக அலைகள் மோதியது. அப்பொழுது இயேசு படகில் பின் பக்கம் தூங்கிக் கொண்டிருந்தார். அவருடைய சீடர்கள் அவரை எழுப்பி போதகரே நாங்கள் மடிந்து போகிறது உமக்குக் கவலை இல்லையா? என்றனர். இயேசு எழுந்து காற்றை அதட்டி கடலைப் பார்த்து "இரையாதே அமைதலாயிரு" என்றார். அப்பொழுது காற்று நின்று போய் மிகுந்த அமைதல் உண்டாயிற்று. சீடர்களை நோக்கி, ஏன் இப்படி பயப்பட்டீர்கள். ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமல் போயிற்று என்றார். அவர்கள் பயந்து இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்கு கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள். (மாற்கு 4:35-41)
(இயேசு குஷ்டரோகியை... தொட்டு சுத்தமாகு என்றார். குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று). மாற்கு : 1 : 42
ஒரு சமயம் இயேசு கலிலேயா நாட்டில் மக்களிடையே அவர்களின் துயரத்தை போக்கும் பணியில் இருந்தார். அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து இயேசுவை நோக்கி உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும் என்றான். இயேசு மனதுருகி கையை நீட்டி அவனைத் தொட்டு சுகமாக்கினார் (மாற்கு 1 : 42)
(பிள்ளை மரிக்கவில்லை. நித்திரையாயிருக்கிறாள்) மாற்கு 5 : 39
ஒரு முறை ஜெப ஆலயத் தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் இயேசுவினிடத்தில் வந்து அவரைக் கண்டு, அவர் பாதத்தில் விழுந்து, தன்னுடைய குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள் என்றும், அவள் ஆரோக்கியமடைய இயேசு வந்து அவள் மேல் கையை வைத்தால் போதும் என்றும் வேண்டிக் கொண்டான். இயேசு அங்கு செல்லும்போது வழியில் 12 வருடம் சுகமில்லாமல் இருந்த பெண் அவளை சுகமடைய வேண்டினாள். அவளை சுகமாக்கினார். அச்சமயத்தில் யவீருடைய வீட்டிலிருந்து சிலர் வந்து யவீரின் மகள் மரித்துப் போனாள் என்று கூறி, இனி இயேசுவானவரை வருத்தப்படுத்த வேண்டாமென்றனர். ஆனால் இயேசு யவீரின் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்தவர்களை அழ வேண்டாமென்று சொல்லி, பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அங்கிருந்தவர்கள் நகைத்தனர். பின் பிள்ளையின் கையைப் பிடித்து, "சிறு பெண்ணே எழுந்திரு" என்று கூறினார். உடனே சிறு பெண் எழுந்து நடந்தாள். அங்கிருந்தவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டார்கள். (மாற்கு 5 : 21 - 43)
மனிதகுலம் வாழ போராடியவர் :
இ°ரேல் மக்கள் எகிப்து நாட்டில் அடிமைகளாக இருந்தனர். இன்றைக்கு ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன் இயேசு பிறந்தார் என்பதை நாம் அறிவோம். இதற்கு முன், இம்மக்கள் தங்களுக்கென்று அரசர்களால் ஆளப்பட்ட காலம் 200 ஆண்டுகளே. மிஞ்சிய காலமெல்லாம் அந்நியர் ஆட்சியிலும் நாடு கடத்தப்பட்டவர்களாகவும், சிறைக் கைதிகளாகவுமே வாழ்ந்தனர். இந்த கடினமான, துயரமான நாட்களில் அவர்களுக்கு இருந்த ஒரே நம்பிக்கை அவர்களுக்கென்று ஒரு ராஜா பிறக்கப்போகிறார் என்பதே.
இந்த நீண்ட நாள் நம்பிக்கை நிறைவேற, ஒரு ராஜா பெத்லகேம் என்னும் ஊரில் பிறந்தார். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த உலகத்திற்குறிய ராஜாவாக அவர் இல்லை. இது அவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த ராஜா தான் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த இயேசு.
அந்த மாட்டுத் தொழுத்தில் தான் உலக வரலாறு மறுபடியும் உருவாக்கப்படப் போகிறது என்பதை அவர்கள் அன்று சிறிதும் நினைக்கவில்லை. இந்த மாட்டுத் தொழுவத்தில் எளிமை கோலமெடுத்த இயேசு இவ்வுலகில் எவருமே செய்திராத புரட்சியை செய்தார் என்பதை மாற்கு அடியார் அவர் எழுதிய புத்தகத்தின் முதற் பகுதியிலேயே இயேசு இவ்வாறு கூறியதை காணலாம். "காலம் நிறைவேறிற்று. தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று" (மாற்கு 1 : 15)
இது இவ்வுலக ஆட்சிக்கு விட்ட சவாலாகும். அன்றிருந்த ரோம ஆட்சிக்கும் சாத்தனின் நாட்களுக்கும் முடிவு வந்து விட்டது என்பதையும் தேவனுடைய விடுதலையின் அரசாட்சி ஆரம்பமாகும் வேளை வந்து விட்டது என்பதை வெளிப்படுத்துகிறார். அந்நாட்களில் சமூக விரோதிகள் மதவாதிகள், சந்தர்ப்பவாதிகள் மக்களை ஏமாற்றுபவர்கள், அடக்கமுறையாளர்கள் என்றெல்லா தீயசக்திகளையும் தனிமையாக எதிர்த்துப் போராடினார். இதனால் பழிவாங்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டார். இந்தத் தனிமை போராட்டத்தினால் தான் இன்று மனித குலம் - நாம் வாழ்கிறோம் என்ற செய்தியையும் மாற்கு கூறியுள்ளார்.