இம்மானிட குலத்தின் மீட்பராக இவ்வுலகில் தோன்றியவர் இயேசுபிரான் என்பதை அறிவோம். இவரை பின்பற்றும் கோடிக்கணக்கானோர் இன்று உலகம் முழுவதும் பரவி உள்ளனர். இயேசுநாதரின் தோற்றம், பின்னர் அவரது போதனைகளைப் பொறுக்காமல் அவர் சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்த்தெழுந்தது குறித்தும் ஏற்கனவே அறிந்தோம்.
webdunia photo
WD
இந்த கட்டுரையில் இயேசுநாதர் வாழ்ந்த காலத்தில் அவருடன் வாழ்ந்து, அவரது போதனைகளைப் பின்பற்றிய 12 சீடர்கள் பற்றியும், அதன்பின் வந்த 2 சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.
இஸ்ரேலின் பெத்லேகம் என்னும் ஊரில் சுமார் இரண்டாயிரத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் இயேசுநாதர் இவ்வுலகில் பிறந்தார். இவரின் தந்தை யோசேப்பு, தாயார் மரியாள்.
இயேசுபிரான் வாழ்ந்த முப்பத்து மூன்றரை ஆண்டுகளில் கடைசி மூன்றரை ஆண்டுகள் அவரே தேர்ந்தெடுத்த 12 சீடர்கள் அவருடன் இருந்தனர்.
இயேசுநாதரின் போதனைகளை அன்றிருந்த ரோமானிய அரசும், யூத மதவாதிகளும் சிறிதும் விரும்பவில்லை. இயேசுவை பழித் தீர்க்க வகை தேடினர். அவரைப் பிடித்து பழி சுமத்த சதி செய்தனர். இத்திட்டத்தின் படி இயேசுநாதரின் பன்னிரு சீடர்களில் ஒருவனான யூதாஸ் காரியோத்தை அணுகி 30 வெள்ளிக்காசுகளை கொடுத்தனர். இதற்கு கைமாறாக காரியோத், இயேசுநாதரைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டு அதன்படியே செய்தான். ரோமானிய அரசு, குற்றமற்ற இயேசுவின் மேல் பழி சுமத்தியது, இயேசு சிலுவையில் அறையப்பட்டார்.
இப்பாவச் செயலைக் கண்ட யூதாஸ் மனமுடைந்தான். குற்றமில்லா இரத்தத்திற்கு பழியாகிவிட்டதை எண்ணி வேதனையடைந்து தான் வாங்கிய 30 வெள்ளியை வாங்கியவர்களிடம் கொடுக்கச் சென்றான். அவர்களோ மறுத்துவிட, அப்பணத்தை தேவாலயத்தில் எறிந்துவிட்டு தூக்குக் கயிற்றில் உயிர் விட்டான். (மத். 27 : 5)