Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?

குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
, வெள்ளி, 9 டிசம்பர் 2011 (11:58 IST)
சாப்பிடாமல் அடம் பிடிப்பது குழந்தைகளின் சுபாவம். அதை மாற்ற முடியாமல் திண்டாடுவது அம்மாக்களின் சுபாவம் என்றாகிவிட்டது. அடம் பிடிக்கும் குழந்தைகளை ஊட்டச்சத்து மிக்க உணவு வகைகளை சாப்பிட வைப்பது சுலபமானதல்ல.

குழந்தைகள் முடிவெடுக்கட்டும் :-

எதையாவது சமைத்துவிட்டு "இதை சாப்பிடப் போறியா இல்லையா?" என்று குழந்தைகளை மிரட்டுவதை மறந்துவிடுங்கள். நாளை அல்லது அடுத்த ஒரு வாரம் உங்கள் குழந்தைகள் எதை சாப்பிட விரும்புகிறார்கள் எனபதைக் கேட்டு சமைத்தால் அவர்கள் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்பு இருக்காது. அவர்கள் கேட்பதெல்லாம் சமைக்க நேரமில்லை என்றால் அவற்றை விடுமுறை நாட்களில் சமைப்பதாக கூறலாம்.

இந்த வம்பே வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2 அல்லது 3 உணவு வகைகளிலிருந்து ஒன்றை தேர்ந்தெடுக்கும்படி குழந்தைகளிடம் கேட்கலாம். குழந்தைகளிடையே எதை சாப்பிட வேண்டும் என்ற சண்டை ஏற்படலாம். அப்படி ஏற்படாமல் இருக்க குழந்தைகளிடையே உருவாகும் போட்டியை தடுப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

சமையலில் குழந்தைகள் உதவட்டும் :-

நீங்கள் சமைக்கும்போது உங்கள் குழந்தைகளின் உதவியை நாடுங்கள். அவர்கள் வயதிற்கேற்ப சமையலில் உங்களுக்கு உதவும்படி கேட்டு கொள்ளுங்கள். பரிமாறும் போது, குழந்தை உதவியதை மறக்காமல் அனைவரிடமும் சொல்லுங்கள். நீங்களும் மற்ற குடும்பத்தினரும் குழந்தையைப் பாராட்டுங்கள். இப்போது குழந்தை முகம் சுளிக்காமல் சாப்பிடுவதைப் பாருங்கள்!

வித்தியாசமாக சாப்பிடட்டும் :-

பெரியோர்கள் சாப்பிடுவதைப் போலவே குழந்தைகள் சாப்பிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். "சப்பாத்தியுடன் ஜாம் யாராவது சாப்பிடுவாங்களா?" "சீஸ் சாதத்துடன் சாப்பிடக் கூடாது!" இப்படி சொல்வதைவிட்டு அவர்கள் விரும்பும் வகையில் உணவை கொடுத்தால், குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

பசிக்கும் போது சாப்பிடட்டும் :-

நாம் சாப்பிடும் நேரங்களில் குழந்தைகளும் சாப்பிட வேண்டும் என்று நினைப்பதால் தான் நாம் அவர்களை வற்புறுத்துகிறோம். பசித்தால் அதைத் தாங்கிக் கொண்டு எந்தக் குழந்தையும் சாப்பிடாமல் இருக்காது! நம் வற்புறுத்தல் அவர்களுக்கு சாப்பிடும் பழக்கத்தைவிட உணவை வெறுக்கும் பழக்கத்தையே உண்டாக்கும். இதை தவிர்க்க குழந்தைகள் விரும்பி கேட்கும் போது உணவு கொடுத்தால் அவர்களுக்கு உணவைக் கண்டால் ஓட வேண்டும் என்ற நினைப்பு மாறிவிடும்.

ஷ்ஷ்ஷ்!! தெரியாமலே போகட்டும் :-

பல சமயங்களில் சத்தான உணவு வகைகள் குழந்தைகளுக்குப் பிடிக்காமல் போகலாம். அதற்காக அவற்றை ஒதுக்கிவிட வேண்டாம். மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கி / துறுவி அல்லது நன்றாக அரைத்து / மசித்து அவர்களுக்குப் பிடித்த உணவுடன் கலந்துவிடலாம். இவற்றைக் குறைவானஅளவில் சேர்ப்பது நல்லது. அதிக அளவில் கலந்து ருசி மாறிவிட்டாலும் கவலை வேண்டாம். இருக்கவே இருக்கு தக்காளி சாஸ், சீஸ் போன்றவை!

மேலே உள்ள குறிப்புகளை பின்பற்றினால் ஒரே நாளில் அல்லது வாரத்தில் குழந்தைகள் மாறிவிடுவார்கள் என்று எண்ண வேண்டாம். தொடர்ந்து பின்பற்றுங்கள். ஒரு மாதத்தில் நீங்களே மாற்றத்தைப் பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil