Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!

மிஜோரம் மாநிலத்தில் சுண்டெலி வால் இரண்டு ரூபாய்!

Webdunia

webdunia photoFILE
வடகிழக்கு மாநிலமான மிஜோரமில் உள்ள காடுகளில் பல வகையான மூங்கில்கள் வளர்கின்றன. இங்கு வெட்டி எடுக்கப்படும் மூங்கில் நாட்டின் பல பாகங்களுக்கும் அனுப்பப்படுகிறது. அத்துடன் காகித தொழிற்சாலை, பிளைவுட் பலகை தயாரிக்கும் தொழிற்சாலை போன்ற தொழில் துறைகளில் கச்சாப் பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன.

மூங்கிலின் பூ பூக்கும் காலத்தில் எங்கிருந்து தான் சுண்டெலிகள் படையெடுக்குமோ தெரியாது. இந்த பூவின் வாசத்திற்கு கவரப்பட்ட சுண்டெலிகள் மூங்கில் காடுகளில் படையெடுத்து விடுகின்றன். இவைகளுக்கு மூங்கிலின் இளம் குருத்து தான் உணவு. ருசியான மூங்கில் இளம் குருத்துக்களை உண்ட சுண்டெலிகள் குடும்ப கட்டுப்பாடு போன்ற எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் பல்கிப் பெருகுகின்றன. இதன் எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போய்விடுகின்றது.

மூங்கிலில் 48 வருடத்திற்கு ஒரு முறைதான் பூ பூக்கும். இவை பெரும்பாலும் பிப்ரவரியில் இருந்து மார்ச் மாதத்திற்கு இடைப்பட்ட காலத்தில் பூ பூக்கும்.

மூங்கிலில் பூ பூக்கும் காலத்தை மூட்டம் என்று வடகிழக்கு பகுதி விவசாயிகள் அழைக்கின்றனர். இந்த மூட்டம் பருவம் ஆரம்பித்தால் விவசாயிகளும், அரசு அதிகாரிகளும் மிரண்டு போய் விடுகின்றனர். இவர்கள் கனவுகளிலும் சுண்டெலிகள் பிராண்டி எடுக்கின்றன. அந்த அளவு சுண்டெலிகள் பயமுறுத்துகின்றன. சுண்டெலிகளின் அட்டகாசத்தால் மிஜோரமின் பொருளாதாரமே பாதிக்கப்படுகின்றது.

webdunia
webdunia photoFILE
மூங்கில் காடுகளில் 48 வருடத்திற்கு ஒரு முறை தான் பூ பூக்கும். இதற்கு முந்தைய காலக்களில் மூட்டம் பருவத்தில் சுண்டெலிகளின் படையெடுபபால் உணவு தானியங்கள் அழிந்து பஞ்சம் தலைவிரித்தாடிய சோக கதையை விவசாயிகள் நினைவு படுத்துகின்றனர்.

சென்ற இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருவித மூங்கிலில் பூ பூத்தது. அப்போது அரசின் விவசாயத்துறை அதிகாரிகளும், விவசாயிகளும் முழு அளவில் களத்தில் குதித்து பாதிப்பை தடுத்தனர்.

சுண்டெலி ஒழிப்பு சிறப்புப் படை!

இந்த ஆண்டு புலுரா என்ற ரக மூங்கிலில் பூ பூக்க ஆரம்பித்துள்ளது. இதன் வாசனையால் கவரப்பட்ட சுண்டெலிகளின் படையெடுப்பும் துவங்கிவிட்டது.

இதை தடுக்க விவசாயதுறை அதிகாரிகள், முழு அளவு பூ பூக்க துவங்கும் முன்பு பலூரா வகை மூங்கிலை வெட்டிவிடும் படி விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

அத்துடன் விவசாய துறையில் பயிர் பாதுகாப்பு என்ற பெயரில் சுண்டெலி ஒழிப்பு சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் கடந்த ஜூலை மாதம் முதல் 15 நாட்கள் இரவுகளில் காடுகளில் பதுங்கியிருந்து மூட்டம் காரணமாக சுண்டெலிகளின் நடமாட்டத்தை கண்காணித்தனர்.

அத்துடன் சுண்டெலிகள் விளைந்த பயிர்களை எப்படி தாக்குகின்றன என்பதை ரகசியமாக வீடியோ படம் பிடித்தனர்.

இதன் தாக்குதல்களை பற்றி மிஜோரம் மாநில விவசாய துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அஜ்வால் மாவட்டத்தில் 22 கிராமங்களில் சுண்டெலிகள் மற்றும் பூச்சிகளின் முதல் கட்ட தாக்குதலில் 945.90 ஹெக்டேர் நிலத்தில் பயிர்கள் அழிந்து விட்டன. இதனால் 1,917 குடும்பங்கள் நஷ்டமடைந்துள்ளன.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சுண்டெலி மற்றும் பூச்சிகள் நெற்பயிர்களை தாக்கியதால் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலமே இருண்டு போயுள்ளது என்று கூறியுள்ளது.

webdunia
webdunia photoFILE
அரசின் புள்ளி விவரப்படி, அஜ்வால் மாவட்டத்தில் 66 மாவட்டங்களில் நெற் பயிர்களில் 70 முதல் 80 விழுக்காடு வரை சுண்டெலிகள் அழித்து விட்டன. இதன் காரணமாக விவசாயிகள் அடுத்த பருவத்திற்கு விதைப்பு நெல் கூட இல்லாமல் பரிதவிக்கின்றனர். இவர்கள் அடுத்த பருவத்தில் விதைப்பதற்கு விதை தாணியங்களை அரசு வழங்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதுவரை சுண்டெலிகளின் தாக்குதலுக்கு 2,210 ஹெக்டேர் பரப்பளவில் நெல் பயிர்கள் அழிந்து போயுள்ளன. இதனால் 3,403 விவசாய குடும்பங்கள் நஷ்மடைந்துள்ளனர்.

வடக்கு லுங்பூர், கிபாங், சுவாலிங் ஆகிய கிராமங்களில் நெல் பயிர்களை சுண்டெலி மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க வேலி அமைத்தும், வலைகளை கட்டிநுள்ளதாகவும் விவசாய துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வயல்வெளிகளை சுற்றி ஆங்காங்கே சுண்டெலிகளை பிடிக்க பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தினமும் பத்து எலிகளாவது உள்ளே புகுந்து சிறைபடுகின்றன.

மாநில விவசாய துறையில் உள்ள சுண்டெலி கட்டுப்பாட்டு குழு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுண்டெலிகளை கொன்று அதற்கு சாட்சியாக சுண்டெலியின் வாலை கொண்டு வருபவர்களுக்கு 1 வாலுக்கு ரூ.2 வழங்குவதாக தண்டோரா மூலம் அறிவித்தது.

இதற்கு நல்ல பலன் இருந்ததாக உதவி பயிர் பாதுகாப்பு அதிகாரி ஜேம்ஸ் லால்சியாமிலியான தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுண்டெலிகளை கொன்று அதன் வாலை கொண்டு வருபவர்களுக்கு 2 ரூபாய் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்த பின்பு விவசாயிகள் மத்தியில் சுண்டெலிகளை கொல்வதற்கு அதிக ஆர்வம் இருந்தது. தினசரி சுண்டெலியின் வால்கள் மலை போல் குவிந்தன என்று கூறினார்.

விவசாய துறை அதிகாரிகள் கூறுகையில், சுண்டெலிகளின் வால்களை செய்தியாளர்கள் முன்னிலையில் எரிப்பது அவசியம். ஏனெனில் இது ஒரே வாலிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை வாங்குவதை தவிர்க்க அவசியம்.

அஜ்வால் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு கிராமங்களில் 11,106 எலிகளின் வால் வாங்கப்பட்டுள்ளன. இதை காலையில் எரித்தோம். அதற்கு பிறகு வாங்கிய சுண்டெலி வால்களை அடுத்து எரிக்க போகின்றோம். இன்று காலையில் எரித்த சுண்டெலி வால்களில் பெரும்பான்மையானவை மிஜோரோமின் வடகிழக்கு பகுதியில் உள்ள ராடு கிராமத்தை சேர்ந்தவர்கள் கொண்டு வந்தது என்று அஜ்வால் மாவட்ட விவசாயத்துறை அதிகாரி லால்ஜரிலியான தெரிவித்தார்.

webdunia
webdunia photoFILE
சுண்டெலி வாலுக்கு பரிசு என்ற திட்டம் மற்ற மாவட்டங்களிலும் சிறப்பாக வேலை செய்கிறது. லூங்கிலி மாவட்டத்தில் 30,600 சுண்டெலிகள் கொல்லப்பட்டு, அதன் வால் எரிக்கப்பட்டுள்ளன. இதில் கொலாசிப் கிராமத்தில் ஒரு வாலுக்கு 2 ரூபாய் பரிசு என்ற திட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து வாங்கிய 10, 000 சுண்டெலி வால்களும் அடங்கும்.

செரிசிப் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 10,500 எலி வால்களையும், மமீட் மாவட்ட விவசாயிகள் 16,000 ஆயிரம் எலி வால்களையும் கொண்டு வந்து கொடுத்துள்ளனர்.

இது மட்டுமில்லாமல் விஷம் கொடுத்து ஆயிரக்கணக்கான சுண்டெலிகள் கொல்லப்பட்டுள்ளன. இதன் வால்களை வெட்டி எடுக்காத காரணத்தினால் இவைகளின் எண்ணிக்கை தெரியவில்லை என்று விவசாயத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுண்டெலி ஒழிப்புக்காக சிறப்பு படை அமைத்து எவ்வளவுதான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், அவை எஸ்கேப் ஆகி விடுகின்றன. சுண்டெலிகள் அதிகளவு பாதிப்பு உண்டாக்கி இருப்பதை விவசாயத் துறை அதிகாரிகள் ஒத்துக் கொண்டனர்.

மிஜோரம் மாநிலத்தி்ன் விவசாய துறை சுண்டெலி மற்றும் பூச்சிகளின் தாக்குதலினால் 70 முதல் 80 விழுக்காடு நெல் உற்பத்தி குறைந்துள்ளது. இதில் 80 விழுக்காடு சுண்டெலிகளாலும், 20 விழுக்காடு பூச்சிகளாலும் குறைந்துள்ளது என்று மதிப்பிட்டுள்ளது.

இந்த சுண்டெலிகள் நெல் பயிர்களை மட்டுமல்லாது கத்திரி, மிளகாய், சோயா மொச்சை, திராட்சை, மற்ற இனிப்பான பழங்கள், கரும்பு, வெண்டைக்காய், பூசனி ஆகியவற்றையும் ஆசை ஆசையாய் விரும்பு சாப்பிட்டுள்ளன. இதனால் இந்த பயிர்களும் சேதமடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil