Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'பிக் பாஸ் - 4' நிகழ்ச்சியின் வெற்றியாளர் - யார் இந்த ஆரி அர்ஜூனன்?

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (10:55 IST)
கடந்த 100 நாட்களாக பெரிதும் பேசப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சி நேற்றுடன் (ஜனவரி 17)நிறைவடைந்தது.
 
இந்த சீசனின் வெற்றியாளர் ஆரி என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
ஆனால் வெற்றியாளர் யார் என்பது தெரியும் முன்னே ஆரிக்கு ஒரு பெரிய ரசிகர் வட்டம் உருவாகியிருந்தது. `ஆரி ஆர்மி` என பலரும் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
 
தமிழ் திரையுலகில் சில படங்களில் நடித்த நடிகர் என்ற ஆரியின் ஒரு பக்கம் தான் பலருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி அவர் பல பரிமாணங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
 
விருது பெற்ற முதல் படம்
ஆரி என்ற நடிகரை அனைவரிடமும் கொண்டு சேர்த்த படம் 'நெடுஞ்சாலை'. அதுதான் அவரின் முதல் படம் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதற்கு முன்பே 'ஆடும் கூத்து' என்ற படத்தில்தான் அவர் அறிமுகமானார். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி அடையாவிட்டாலும், விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. சிறந்த பிராந்திய மொழிப் படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது.
 
இதனைத் தொடர்ந்து பாரதிராஜா மற்றும் பாலச்சந்தர் இணைந்து நடித்த ஒரே படமான 'ரெட்டை சுழி' என்ற படத்தில் ஆரி நாயகனாக நடித்தார். ஆனால் இந்த படம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.
 
இதனைத் தொடர்ந்து 'மாலை பொழுதின் மயக்கத்திலே' என்ற படத்தில் 2012-ஆம் ஆண்டு நடித்தார். இந்த படமும் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை.
 
இப்படி தொடர் தோல்விகளால் துவண்டு கிடந்த ஆரிக்கு 'நெடுஞ்சாலை' திரைப்படம் ஒரு திருப்புமுனையை தந்தது. இதில் அவர் நடித்த தார்ப்பாய் முருகன் கதாபாத்திரம் நல்ல பெயரை வாங்கித் தந்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக இரண்டு வருடங்கள் செலவிட்டு தனது உடல் எடையை அதிகரித்தார்.
 
இதனைத் தொடர்ந்து அடுத்து 'கதை எண் 6' என்ற படத்தில் நடித்தார். இதற்காக உடல் எடையில் 14 கிலோ குறைத்தார். பிறகு நயந்தாராவுடன் அமானுஷ்ய கதையான 'மாயா' படத்திலும், பின்னர் 'தரணி' என்ற படத்திலும் நடித்தார்.
 
பின்னர் சீரான இடைவெளியில் 'உன்னோடு கா`, முப்பரிமாணம், நாகேஷ் திரையரங்கம் போன்ற படங்களில் நடித்த ஆரி, தற்போது எல்லாம் மேல இருக்கவன் பாத்துக்குவான், அலெக்கா உள்ளிட்ட 3 படங்களில் நடித்து வந்தார்.
 
நடிகர் என்பதை தாண்டி சில முன்னணி நடிகர்களுக்கு ஆரி `பாடி ஸ்கல்ப்டிங்` எனப்படும் உடற்பயிற்சி ஆலோசகராக இருந்துள்ளார் என்பது பலரும் அறியாதது.
 
"சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சென்னை வந்தேன். வாய்ப்புகளைத் தேடிக்கொண்டே இருந்தேன். அப்போதும் ஒரு நாள் கூட தவறாமல் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்தேன். வெயிட் லிஃப்ட போன்ற பயிற்சிகளை சுலபமாக செய்தேன்'' என ஆரி தனது நினைவுகளை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
'ஆட்டோகிராப்' படத்துக்கு இயக்குநர் சேரன், 'சுப்பிரமணியபுரம்' சசிகுமார், 'யோகி' அமீர், 'மிருகம்' ஆதி, 'கற்றது தமிழ்' ஜீவா, 'ஆயிரத்தில் ஒருவன்' பார்த்திபன், 'ஈரம்' சிந்து மேனன் என இவர் உடல்பயிற்சி ஆலோசனை அளித்த நட்சத்திரங்கள் ஏராளம்.
 
இப்படி பாடி ஸ்கல்ப்டிங்கிற்காக சேரனை சந்தித்த ஆரி, அதன் மூலம் தனது முதல் பட வாய்ப்பையும் பெற்று திரையுலகில் நுழைந்தார்.
 
ஜல்லிக்கட்டு போராட்டத்தில்
தொழில் வாழ்க்கை தாண்டி, ஆரியின் சொந்த வாழ்க்கையும் திருப்புமுனைகள் நிறைந்தது. லண்டனில் வசித்து வரும் இலங்கை தமிழ் பெண்ணான நதியா என்பவரை ஆரி 2015-ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ரியா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.
 
2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதுதான் சமூக ஆர்வலர் ஆரி என்ற அவரின் மற்றொரு முகம் வெளியில் தெரிந்தது.
 
"அனைவரும் விவசாயிகளாக மாற வேண்டும். தனக்குத் தேவையான உணவை ஒவ்வொருவரும் தானே உற்பத்தி செய்து கொள்ள வேண்டும்,'' என்று கூறிய ஆரி, அதன் முதல் விதையாக, 'மாறுவோம்... மாற்றுவோம்!' என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் முதல் முனைப்பாக 'நானும் ஒரு விவசாயி' என்ற திட்டத்தை நடிகர் கமல்ஹாசனை வைத்து தொடங்கி வைத்து செயல்வடிவம் தந்துள்ளார்.
 
இளைஞர்கள் 2,700 பேருக்கும் மேல் கலந்துகொண்டு, 5,366 நாட்டு கத்தரி செடிகளை விளை நிலங்களில் பயிர் செய்து கின்னஸ் சாதனையை, ஆரி தலைமையில் செய்துள்ளனர். இதே போன்று 2,017 பேரை வைத்து சீனாவில் நடைபெற்றது. அதை முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
 
அதே போல தாய் மொழியில் கையொப்பம் இடுவோம் என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்து வருகிறார்.
 
பிக் பாஸில் வீட்டில் கிளம்பிய எதிர்ப்புகள்
 
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக் பாஸ் வீட்டில் அதிக எதிர்ப்பை சந்தித்தவர்களில் ஆரி முதன்மையானவர். இதுவரை 11 முறை அவர் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு முந்தைய சீசன்களில் கவின் 8 முறை நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார். முதல் சீசனில் டைட்டில் வென்ற ஆரவ் ஏழு முறை மட்டுமே நாமினேட் ஆகி இருந்தார்.
 
இதையெல்லாம் தாண்டி இறுதி கட்டத்திற்குள் நுழைந்த ஆரி வெற்றியையும் தனதாக்கியுள்ளார்.
 
இறுதிநாளில் நடந்தது என்ன?
பிக் பாஸ் சீஸன் 4 நிகழ்ச்சியின் வெற்றியாளராக ஆரி அர்ஜுனன் அறிவிக்கப்பட்டுள்ளார். பாலாஜி முருகதாஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
 
கடந்த மூன்று மாதங்களாக ஒளிபரப்பப்பட்டு வந்த 'பிக் பாஸ் சீசன் - 4' நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி ஜனவரி 17ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. 16 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட நிகழ்ச்சியில் 11 பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆரி அர்ஜுனன், பாலாஜி முருகதாஸ், ரியோ, ரம்யா பாண்டியன், சோம் சேகர் ஆகியோர் இறுதி வாரத்தில் இடம்பெற்றிருந்தனர்.
 
வழக்கமாக இரவில் 9.30 அளவில் துவங்கும் நிகழ்ச்சி, இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மாலை ஆறு மணிக்கே துவங்கியது. ஐந்து பேர் பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் முதலில் சோம் ஷேகர் வெளியேற்றப்பட்டார்.
 
இதற்குப் பிறகு ரம்யா பாண்டியனும் பிறகு ரியாவும் வெளியேற்றப்பட்டனர். வீட்டிற்குள் ஆரி அர்ஜுனனும் பாலாஜி முருகதாஸும் எஞ்சியிருக்கும் நிலையில், பிக் பாஸ் வீட்டிற்குள் கமல்ஹாசன் நுழைந்தார்.
 
ஆரியையும் பாலாஜியையும் வீட்டிலிருந்து மேடைக்கு அழைத்துவந்த கமல், வெற்றியாளர் 16 கோடிக்கும் அதிகமான வாக்குகளையும் அடுத்த இடத்தில் இருப்பவர் 7 கோடிக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருப்பதாகவும் கூறி, ஆரி அர்ஜுனனை வெற்றியாளராக அறிவித்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments