Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு - டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

Webdunia
சனி, 1 ஏப்ரல் 2023 (10:08 IST)
ஆபாசப்பட நடிகை தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுகிறது. ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு ரூ.1.07 கோடி கொடுத்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்சுடன் டிரம்ப் தொடர்பில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், அந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்.
 
ஆனால், நடிகையுடனான தனது தொடர்பை மறைக்க தனது முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் மூலமாக டிரம்ப் ரூ.1.07 கோடி பணம் கொ
டுத்தார் என்பது குற்றச்சாட்டு. மைக்கேல் கோஹனுக்கு அந்த பணத்தை டிரம்ப் எவ்வாறு கொடுத்தார் என்பதும் தற்போது விசாரணைக்கு உள்ளாகியிருக்கிறது.
 
டொனால்ட் டிரம்ப் மீது மான்ஹாட்டன் கிராண்ட் ஜூரி கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்துவதற்கு வாக்களித்துள்ளது. அதாவது அவர் மீது எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டைப் பதிவு செய்வதற்கு இது வழிவகுக்கும். இதனால் அவர் கைதாகும் சூழல் எழுந்துள்ளது. இருப்பினும் கைதாவதைத் தவிர்க்க டிரம்ப் தாமாகவே சரணடையலாம் என்றும் கூறப்படுகிறது. அடுத்த வாரம் சரணடைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
 
அமெரிக்காவில் இதற்கு முன்பு பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர்கள் யாரும் கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொண்டது இல்லை. அந்த வகையில் டிரம்ப் தான் முதல் நபர்.
 
டிரம்ப் தரப்பு கூறுவது என்ன?
ட்ரம்பின் வழக்கறிஞர் ஜோ டகோபினா, முன்னாள் அதிபர் ட்ரம்பால் "அரசியல் துன்புறுத்தல்" என்று அழைப்படுவதின் ஒரு பகுதியாக இந்தக் குற்றச்சாட்டு உள்ளது என்று கூறுகிறார்.
 
டொனால்ட் ட்ரம்பை தவிர வேறு யாராவது இருந்தால் அவர் மீது இந்தக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்காது என்று சிபிஎஸ் ஊடகத்திடம் டகோபினா கூறியுள்ளார்.
 
டொனால்ட் ட்ரம்பிடம் இருந்து மாறுபட்ட அரசியல் கருத்துகளைக் கொண்ட ஒரு வழக்கறிஞர் மூலம் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதால் இது மிகவும் சிக்கலான வழக்கு என்றும் இந்த வழக்கைப் பொறுத்தவரை குற்றம் என்று எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
 
"தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து டிரம்ப் கவலைப்படவில்லை. ஆனால், அவர் வருத்தமாகவும் கோபமாகவும் இருக்கிறார். அவர் அரசியல்ரீதியாக துன்புறுத்தப்படுகிறார் என்பது பலருக்கும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஜோ பைடன் கருத்து என்ன?
வெள்ளை மாளிகையில் கூடியிருந்த நிருபர்கள் அதிபர் ஜோ பைடனிடம் டொனால்ட் டிரம்ப் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர்.
 
அதற்கு அவர், `டிரம்ப் தொடர்பாக என்னிடம் எந்தக் கருத்தும் இல்லை` என்று பதிலளித்துச் சென்றார்.
 
2016ஆம் ஆண்டில், ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் சில ஊடகங்களைத் தொடர்புகொண்டு, 2006ஆம் ஆண்டில் ட்ரம்புடன் தனக்கு திருமண பந்தத்தைக் கடந்த தொடர்பு இருந்ததாகக் கூற முன்வந்தார்.
 
ஆனால், ட்ரம்பின் வழக்கறிஞர் மிச்செல் கோஹென் இந்த விவகாரம் தொடர்பாக வெளியே கூறாமல் இருக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த விவகாரம் சட்டத்திற்குப் புறம்பானது அல்ல. ஆனால், மைக்கேல் கோஹனுக்கு டிரம்ப் அளித்த பணம் 'வழக்கறிஞர் கட்டணம்' என்று ஆவணங்கள் கூறுகின்றன.
 
மேலும் இது ட்ரம்பின் பொய்யான வணிகப் பதிவுகளுக்குச் சமம் என்று வழக்கறிஞர்கள் கூறுகின்றனர், இது சிறிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அவர் மற்றொரு குற்றத்திற்கான கருவியாக இருந்தது நிரூபிக்கப்பட்டால் அது கிரிமினல் குற்றமாக மாறும்.
 
இது தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என்றும் வழக்கறிஞர்கள் வாதிடலாம். ஏனென்றால், டேனியல்ஸுக்கு அவர் பணத்தை கொடுத்ததாகக் கூறப்படுவது மற்றொரு பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருக்கிறது என்பதை வாக்காளர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்பதற்காக அவர் மேற்கொண்ட முயற்சியாகக் கருதப்படும்.
 
டிரம்ப் மீதான பதவி நீக்கத்தை ஆதரிப்பவர்கள் கூட இது ஒரு தெளிவான வழக்கு அல்ல என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
 
டிரம்ப் கைதாகிறாரா?
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. விசாரணையை மேற்கொண்டு வரும் மான்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் ஆல்வின் ப்ராக் அலுவலகம், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில், டிரம்ப்பின் சரணடைதல் தொடர்பாக அவரது வழக்கறிஞரைத் தொடர்புகொண்டதாக உறுதிப்படுத்தியுள்ளது. ஃப்லோரிடாவில் உள்ள டிரம்ப் திங்களன்று நியூயார்க் சென்று செவ்வாயன்று நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று இந்த சம்பவம் குறித்து நன்கு அறிந்தவர்கள் குறிப்பிட்டதாக சிபிஎஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இந்த விவகாரத்தில் டிரம்ப் ஒத்துழைப்பை வழங்குவார் என்று அவரது வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளதால், அவருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்படாது.
 
டிரம்ப்பின் கைரேகை எடுக்கப்படுமா? கைகளில் விலங்கிடப்படுவாரா?
மான்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜராகும்போது, ஊடகங்களை தவிர்க்கும் விதமாக தனிப்பட்ட நுழைவாயில் வழியாக டிரம்ப் அனுமதிக்கப்படலாம்.
 
உள்ளே நுழைந்ததும் கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற நபர்களுக்கு செய்வதுபோன்றே டிரம்ப்பின் கை ரேகையும் எடுக்கப்படலாம்.
 
பொதுவாக இதுபோன்ற சூழலில் குற்றஞ்சாட்டப்படுபவர்கள் கைவிலங்கிப்படுவது வழக்கம். ஆனால், ட்ரம்பிற்கு அவ்வாறு நடக்காமல் இருக்க அவரது வழக்கறிஞர்கள் குழு முயற்சிகளை மேற்கொள்ளும்.
 
விசாரணை எப்போது?
டிரம்ப் மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அடுத்த வாரம் செவ்வாயன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போதுதான் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு முதன்முதலாக நீதிமன்றத்தில் வாசிக்கப்படும். இதைத் தொடர்ந்து டிரம்ப் குற்றம் செய்தாரா இல்லையா என்று கேட்கப்படும்.
 
நீதிபதி அனுமதிக்கும் பட்சத்தில் விசாரணை நடைபெறும் பகுதிகளில் கேமராக்கள் இடம்பெறலாம்.
 
விசாரணைக்குப் பின்னர் அவர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்படலாம்.
 
பொதுவாக Felony(பெருங்குற்றம்), Misdemeanor(சிறிய குற்றம்) என இரண்டு வகையாக குற்றங்கள் பிரிக்கப்படுகின்றன. சிறிய குற்றச்சாட்டில் அபராதம் விதிக்கப்படும்.
 
ஒருவேளை, டிரம்ப் பெருங்குற்றத்தின் கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டால் அதிகபட்சமாக அவருக்கு 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
 
அதிபர் தேர்தலில் போட்டியிடலாமா?
தற்போதைய குற்றச்சாட்டுகள் மட்டுமல்ல, தண்டனையே விதிக்கப்பட்டாலும், அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் தொடர்வதைத் தடுக்க முடியாது.
 
என்ன நடந்தாலும், தான் பின் வாங்கப்போவதில்ல என்பதற்கான சமிக்ஞைகளை ட்ரம்பே கொடுத்துள்ளார். எனவே, அவர் தொடர்ந்து பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
உண்மையில், அமெரிக்க சட்டத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஒரு வேட்பாளரை பிரசாரம் செய்வதில் இருந்தும், அதிபராகப் பணியாற்றுவதில் இருந்தும், ஏன் கைதாவதில் இருந்தும் கூட தடுக்க முடியாது.
 
1920இல் யூஜின் டெப்ஸ் என்பவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் சிறையில் இருந்தபடியே போட்டியிட்டு 9 லட்சம் வாக்குகளையும் பெற்றிருந்தார். எனவே சிறை தண்டனை பெற்றாலும் அவர் போட்டியிட முடியும்.
 
எனினும், டிரம்ப் கைது செய்யப்பட்டால், அதிபர் தேர்தலுக்கான அவரது பிரசாரத்தில் அது சிக்கலை ஏற்படுத்தும். மேலும், அமெரிக்க அரசியல் அமைப்பிற்குள் ஏற்கெனவே உள்ள அப்பட்டமான பிளவுகளை இது ஆழமாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்