Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14,000 ஆண்டுகளுக்குப் பிறகு 'சூப்பர் புயல்' மீண்டும் பூமியை தாக்கினால் என்ன நடக்கும்?

Prasanth Karthick
செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (12:08 IST)

தற்போது சூரியன் தனது ‘அதிகபட்ச செயல்பாட்டு காலகட்டத்தில்’ உள்ளது. ஆனால் 14,000 ஆண்டுகளுக்கு முன்பு நமது பூமியைத் தாக்கிய ஒரு மிகப்பெரிய சூரிய நிகழ்வுடன் ஒப்பிடும் போது இது ஒன்றும் இல்லை. இன்று அத்தகைய ஒரு சூரிய நிகழ்வு ஏற்பட்டால், பூமியில் அதன் விளைவு பேரழிவை ஏற்படுத்தக் கூடும்.

 

 

பூமியில் உள்ள மிகப் பழமையான மரங்கள் 5,000 ஆண்டுகளுக்கு முந்தையவை. அனைத்து வகையான வரலாற்று நிகழ்வுகளையும் கடந்து இவை வாழ்ந்துள்ளன. ரோமானியப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, கிறித்தவத்தின் பிறப்பு, ஐரோப்பியர்கள் அமெரிக்காவை அடைந்தது மற்றும் முதன்முதலில் சந்திரனில் மனிதர்கள் தரையிறங்கியது ஆகிய நிகழ்வுகளின் சாட்சிகளாக அவை நிற்கின்றன.

 

மரங்கள் நிலத்தடி மண்ணில் கூட படிமமாக்கப்படலாம். அது கடந்த 30,000 ஆண்டுகளுடன் நமக்கு ஒரு தொடர்பை அளிக்கிறது.

 

நீண்ட காலமாக வாழும் இந்த மரங்கள் பூமியின் நிலையான பார்வையாளர்களாகத் தோன்றலாம். ஆனால் அவ்வாறு இல்லை. அவை வளரும்போது அசாதாரணமான ஒன்றைச் செய்கின்றன. நமது சூரியனின் செயல்பாட்டைப் பதிவு செய்வது.

 

‘சூரியனின் மூர்க்கமான கடந்த காலம்’

 

ஆண்டு முழுவதும் மரங்களில் ஒளிச்சேர்க்கை நடப்பதால், அவை பருவத்தைப் பொறுத்து நிறம் மாறி, வசந்த காலத்தில் இலகுவாகவும், இலையுதிர்காலத்தில் இருண்டதாகவும் தோன்றும்.

 

இதன் விளைவாக மரத்தின் வளர்ச்சி ‘வளையங்களில்’ ஆண்டுதோறும் ஏற்படும் மாற்றங்கள் பதிவாகி உள்ளன.

 

"இது எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க காலப் பெட்டகத்தை (Time Capsule) சேமிப்பகத்தை அளிக்கிறது" என்று அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக் கழகத்தின், 'மர வளையங்களை' ஆய்வு செய்யும் டென்ட்ரோக்ரோனாலஜிஸ்ட் (Dendrochronologist) சார்லோட் பியர்சன் கூறுகிறார்.

 

20ஆம் நூற்றாண்டில், டென்ட்ரோக்ரோனாலஜி நிபுணர்கள் (மரத்தின் சுற்றுப் பட்டைகள் மூலம் அதன் வயதை அறிந்து கொள்ளும் அறிவியல்) பெரும்பாலும் மர வளையங்களைப் பயன்படுத்தி வரலாற்றின் பகுதிகளை ஆய்வு செய்துள்ளனர். அதாவது பத்தாண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட கால மாற்றங்களை அவர்கள் ஆராய்ந்துள்ளனர்.

 

ஆனால் குறிப்பிட்ட சில கால கட்டங்களில், அவர்கள் ஆவணப்படுத்திய மாற்றங்கள் என்பது திடீரென நிகழக் கூடியதாகவும், பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது.

 

அவை சூரியனின் மூர்க்கமான கடந்த காலத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் மிகப்பெரிய சூரிய நிகழ்வுகள் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

சூரிய வெடிப்பு

"இப்படி ஒரு நிகழ்வு தோன்றும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை," என்று பாரிஸில் உள்ள ‘காலேஜ் டி பிரான்சின்’ காலநிலை நிபுணரான எட்வார்ட் பார்ட் கூறுகிறார்.

 

ஆனால் 2012 ஆம் ஆண்டில், பிஎச்டி மாணவராக இருந்த ஃபுசா மியாகே (இப்போது ஜப்பானில் உள்ள நகோயா பல்கலைக் கழகத்தில் காஸ்மிக் கதிர் இயற்பியலாளராக உள்ளார்), வியக்கத்தக்க ஒன்றை கண்டுபிடித்தார்.

 

ஜப்பானிய சிடார் மரங்களை ஆய்வு செய்த அவர், கிட்டத்தட்ட 1,250 ஆண்டுகளுக்கு முன்பு, (கி.பி.774 ) ஒரே வருடத்தில் கார்பன்-14 எனப்படும் ஒரு வகை கார்பனில் திடீரென மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதைக் கண்டுபிடித்தார்.

 

"அதை கண்டறிந்தவுடன் நான் மிகவும் உற்சாகமடைந்தேன்," என்கிறார் மியாகே.

 

முதலில் கிடைத்த தரவை சந்தேகித்த பிறகு, மியாகே மற்றும் அவரது சகாக்கள் ஒரு குழப்பமான முடிவுக்கு வந்தனர். வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜனை உயர் ஆற்றல் துகள்கள் தாக்கும் போது கார்பனின் இந்த கதிரியக்க ஐசோடோப்பு உற்பத்தி செய்யப்படுவதால், கார்பன்-14 இன் திடீர் அதிகரிப்பு நமது வளிமண்டலத்தில் ஏராளமான துகள்களை உட்செலுத்துவதில் இருந்து வந்திருக்க வேண்டும் என அவர்கள் முடிவு செய்தனர்.

 

இதை சூப்பர்நோவா போன்ற அண்ட நிகழ்வுகளுடன் இணைத்து ஆய்வுகள் மற்றொரு சாத்தியமான காரணத்தை பரிந்துரைத்துள்ளன, சூரியனால் வெளியேற்றப்பட்ட துகள்களின் ஒரு அசுர வெடிப்பு. இவை சூரிய வெடிப்புகளால் (Superflare) உருவாக்கப்படும். நவீன காலத்தில் நாம் காண கிடைக்கும் எல்லாவற்றையும் விட மிகப்பெரியது.

 

1859-இன் பெரும் புவி காந்த புயல்

இங்கிலாந்தில் உள்ள ரீடிங் பல்கலைக் கழகத்தின் விண்வெளி இயற்பியலாளர் மேத்யூ ஓவன்ஸ் கூறுகையில், "நாம் கவனித்த எல்லாவற்றையும் விட குறைந்தது பத்து மடங்கு பெரிய நிகழ்வு அவற்றுக்கு தேவைப்படுகிறது. பதிவுசெய்யப்பட்ட முதல் சூரிய வெடிப்பு 19ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதிக்கு முந்தையது. 1859இன் பெரும் புவி காந்த புயலுடன் தொடர்புடையது.” என்கிறார்.

 

மர வளையங்கள் பற்றிய மற்ற ஆய்வுகள் மற்றும் அண்டார்டிகா மற்றும் கிரீன்லாந்து போன்ற இடங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட பண்டைய பனித் துகள்களின் பகுப்பாய்வு மூலம் மியாகேவின் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்தப்பட்டது.

 

மியாகே நிகழ்வுகளைப் போல மேலும் பல நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில், நன்கு ஆய்வு செய்யப்பட்ட ஏழு நிகழ்வுகள் கடந்த 15,000 ஆண்டுகளில் நிகழ்ந்ததாக அறியப்படுகிறது. அதே சமயத்தில் வேறு பல கார்பன்-14 தொடர்பான நிகழ்வுகள், மியாகே நிகழ்வுகள் தானா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 

மிகச் சமீபத்திய நிகழ்வு 1,000 ஆண்டுகளுக்கு முன்பு கிபி.993-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இவை அரிதாகவே நிகழ்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆனால் ஓரளவு சீரான இடைவெளியில், அதாவது ஒவ்வொரு 400 முதல் 2,400 ஆண்டுகளுக்கும் ஒருமுறை.

 

14,300 ஆண்டுகளுக்கு முந்தைய, தெற்கு பிரான்சில் உள்ள புதைபடிவமான ‘ஸ்காட்ஸ் பைன் மரங்களில்’ கார்பன்-14 அதிகரிப்பு நிகழ்ந்ததைக் கண்டுபிடித்ததாக பார்ட் மற்றும் அவரது சகாக்கள் 2023இல் அறிவித்த போது, ​மிகவும் சக்திவாய்ந்த ஒரு மியாகே நிகழ்வு கண்டுபிடிக்கப்பட்டது .

 

விண்வெளியில் இருந்து தோன்றிய இந்த ‘சூப்பர் புயல்’ குறித்து கண்டுபிடித்த குழு, புதைபடிவ மரங்களுக்காக தெற்கு பிரெஞ்சு பகுதியில் ஆல்ப்ஸைத் தேடியது. சில புதைபடிவ மரங்கள் நதிகளால் வெளிப்பட்டதைக் கண்டறிந்தது.

 

அதிலிருந்து அவர்கள் மாதிரிகளைச் சேகரித்து அவற்றை ஒரு ஆய்வகத்தில் ஆய்வு செய்தனர். அதன் மூலம் மிகப்பெரிய அளவிலான கார்பன் -14 அதிகரிப்பிற்கான ஆதாரங்களைக் அவர்கள் கண்டுபிடித்தனர்.

 

"நாங்கள் ஒரு புதிய மியாகே நிகழ்வைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கனவு கண்டோம், அது நிறைவேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்" என்று பிரான்சில் உள்ள Aix-Marseille பல்கலைக் கழகத்தின் டென்ட்ரோக்ரோனாலஜிஸ்ட் மற்றும் ஆய்வின் இணை ஆசிரியரான சிசில் மியாமோஹ் கூறுகிறார்.

 

அப்படியொரு நிகழ்வு இன்று மீண்டும் நடந்தால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிப்புகள் ஏற்படும். "ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் அரோராவைப் (துருவ ஒளி) பார்த்திருப்பார்கள், வானத்தில் வெளிச்சங்களைப் பார்த்திருப்பார்கள்" என்கிறார் பியர்சன்.

 

புவி காந்தப்புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்தும்

நமது சூரியன் தற்போது 11 வருட சுழற்சியில், அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச செயல்பாட்டின் காலகட்டங்களை கடந்து செல்கிறது. அப்போது கரோனல் மாஸ் எஜெக்ஷன்ஸ் (CMEs- சிஎம்இ) எனப்படும் பிளாஸ்மாவின் மிகப்பெரிய வீச்சுகளையும், சூரிய வெடிப்பு எனப்படும் கதிர்வீச்சின் மிகப்பெரிய வெடிப்புகளையும் சூரியன் வெளியேற்றும்.

 

சூரியனின் சிஎம்இ- சுழற்றி பூமியைநோக்கி திரும்பினால் புவி காந்த புயல் ஏற்படும். நமது வளிமண்டலத்தில் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் பாய்வதால், வடக்கு மற்றும் தெற்கு துருவ ஒளிகள் எனப்படும் அரோரா தோன்றலாம்,

 

இந்த புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்தும். புவி காந்தப் புயல்கள் நமது வளிமண்டலத்தை விரிவடையச் செய்து, செயற்கைக்கோள்களில் ‘வளிமண்டல பின்னிழு விசையை’ அதிகரிக்கும் (உதாரணமாக, மே 2024இல் புவி காந்தப் புயல்களின் போது ஹப்பிள் தொலைநோக்கி ஒரு நாளைக்கு 40-80 மீட்டர் (141-262 அடி) கீழே சென்றது).

 

சமீபத்திய வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த சூரியப் புயல், 1859இன் கேரிங்டன் நிகழ்வு, பூமியின் இரு அரைக்கோளங்களிலும் தீவிரமான அரோரா துருவ ஒளிக் காட்சிகளைத் ஏற்படுத்தியது மற்றும் உலகெங்கிலும் உள்ள தந்திச் சேவையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

 

தற்காலத்தில், கேரிங்டன் அளவிலான நிகழ்வின் விளைவுகள் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும். செயற்கைக்கோள்கள் அதன் இடத்திலிருந்து தள்ளப்படுவதால் அல்லது அவற்றின் நுட்பமான மின்னணு சாதனங்கள் சேதமடைவதால் குளோபல் பொசிஷனிங் சிஸ்டம் (ஜிபிஎஸ்) சீர்குலையும். அதே நேரத்தில் பூமியில் உள்ள பல மின் கட்டமைப்புகள் மற்றும் இணைய சேவைகள் செயலிழக்கக் கூடும்.

 

இருப்பினும், மியாகே நிகழ்வுகள் என்பவை ஒரு வித்தியாசமான ராட்சசன் போன்றவை. அவை கேரிங்டன் நிகழ்வை விட குறைந்தது பத்து மடங்கு பெரிய துகள்களின் வெடிப்புகளை ஏற்படுத்துகின்றன.

 

உண்மையில், அதனுடன் ஒப்பிடுகையில் கேரிங்டன் நிகழ்வு மிகவும் சிறியதாக இருந்தது, அது உற்பத்தி செய்யும் கார்பன்-14 இன் அதிகரிப்புகள் மர வளையங்களில் பெரியளவில் பதிவாகவில்லை.

 

மார்ச் மாதத்தில், ஒரு ஆய்வில் கார்பன்-14 அதிகரிப்பின் மிக நுட்பமான பதிவு கேரிங்டன் நிகழ்விலிருந்து கண்டறியப்பட்டது. ஆனால் மியாகே நிகழ்வுடன் ஒப்பிடும்போது ஒன்றுமே இல்லை.

 

14,300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் நடந்த ஒரு நிகழ்வு இன்று நடந்தால், நாம் சார்ந்திருக்கும் நவீன தொழில்நுட்பத்திற்கு அது மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தக்கூடும். அதை நம்மால் தாங்க முடியாது.

 

ஸ்வீடனில் உள்ள லண்ட் பல்கலைக்கழகத்தின் சூரிய விஞ்ஞானி ரைமண்ட் மஸ்ஷலர் கூறுகையில், "கேரிங்டன் நிகழ்வே மிக மோசமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே கேள்வி என்னவென்றால், அதைவிட மோசமான ஒன்று உண்மையில் இருக்க முடியுமா?" என்கிறார்.

 

சில நட்சத்திரங்கள், குறிப்பாக நமது சூரியனை விட சிறிய மற்றும் மங்கலான சிவப்பு ‘குள்ள’ நட்சத்திரங்கள், தங்களுக்கு அருகில் சுழலும் கிரகங்களின் வளிமண்டலங்களை அழிக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த ‘சூப்பர்ஃப்ளேர்களை’ எதிர்கொள்ள வாய்ப்புள்ளது என்பதை என்பதை நாம் அறிவோம்.

 

நமது சூரியன் எனும் நட்சத்திரம், பூமிக்கு அத்தகைய ஆபத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை.

 

ஆனாலும் கூட மியாகே நிகழ்வுகளின் இருப்பு என்பது, கேரிங்டன் நிகழ்வை விட அதிக சக்தி வாய்ந்த ஆபத்தான நிகழ்வுகளுக்கான சாத்தியம் உள்ளதைக் குறிக்கிறது.

 

மியாகே நிகழ்வுகள்- புவி காந்தப் புயல்கள் இடையேயான தொடர்பு

மியாகே நிகழ்வுகளுக்கும் புவி காந்தப் புயல்களுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்த தெளிவான தகவல்கள் இல்லை. இந்த இரு நிகழ்வுகளில் உற்பத்தி செய்யப்படும் கார்பன்-14 அதிகரிப்புகள், சூரியனில் இருந்து வெளிப்படும் அதிக ஆற்றல் வாய்ந்த துகள்களின் வெடிப்பிலிருந்து வந்திருக்கலாம்.

 

ஆனால் இந்த நிகழ்வுகள் எப்போதும் பூமியில் சக்திவாய்ந்த புவி காந்த புயல்களை ஏற்படுத்தும் சிஎம்இ-களுடன் தொடர்புடையதா என்பது உறுதியாகத் தெரியவில்லை .

 

"சூரியனில் மிகப் பெரிய புயல்கள் ஏற்படும் போது, ​​நீங்கள் அடிக்கடி ஆற்றல்மிக்க துகள்கள் மற்றும் சிஎம்இ-களை எதிர்கொள்வீர்கள்," என்கிறார் சென்ட்ரல் லேன்கஷெர் பல்கலைக்கழகத்தின் சூரிய இயற்பியலாளர் சில்வியா டல்லா.

 

‘ஆனால் அந்த இணைப்பு ‘ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது இல்லை’ என்று அவர் குறிப்பிடுகிறார்.

 

உயர் ஆற்றல் துகள்கள் மற்றும் கதிர்வீச்சுகளின் ஒரு சரமாரியான தாக்குதலை பூமி எதிர்கொண்டால், நமது சிறந்த கவச உபகரணங்களைத் தவிர மற்ற அனைத்தும் பாதிக்கப்படலாம்.

 

"செயற்கைக்கோள்கள் அழிந்துவிடும்," என்கிறார் முஷெலர்.

 

பூமியின் உள்கட்டமைப்பிற்கு ஆபத்து ஏற்படும். அதுமட்டுமல்லாது மியாகே நிகழ்வு பல சேதங்களை ஏற்படுத்தும். பூமியின் மின்னணுவியல் அமைப்புகள் பயன்படுத்த முடியாததாகிவிடும் அல்லது அதன் மென்மையான சுற்றுகள் அழிந்துவிடக்கூடும்.

 

"ஒரு அணுமின் நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் எரிபொருளைக் கட்டுப்படுத்தும் ஒரு மின்னணு அமைப்பில் பாதிப்பு ஏற்பட்டால், நீங்கள் உண்மையில் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும் அல்லவா" என்கிறார் ஓவன்ஸ்.

 

"விண்வெளிச் சூழலில் நாம் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி பேச முனைகிறோம். ஆனால் அணுசக்தித் துறையில் 1,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்வைப் பற்றி கவலைப்படுகிறார்கள். இது அத்தகைய ஒரு விஷயம்." என்கிறார் ஓவன்ஸ்.

 

சூரியத் துகள்களின் வெடிப்புகள் விமானப் போக்குவரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த துகள்கள் சூரியனிலிருந்து பூமியை நோக்கி ‘ஒளியின் வேகத்திற்கு’ மிக அருகில் பயணிப்பதைக் கருத்தில் கொண்டால், அதை எதிர்கொள்ள தயாராவதற்கு நமக்கு வெறும் எட்டு நிமிடங்களே இருக்கும்." என்று ஓவன்ஸ் கூறுகிறார்.

 

நிச்சயமாக, மர வளையங்கள் என்பது ஒரு மியாகே நிகழ்வு நிகழ்ந்த முழு வருடத்தின் சில குறிப்புகளை மட்டுமே நமக்குத் தருகின்றன. எனவே அந்த நிகழ்வுகள் ஒரே ஒரு சூரிய வெடிப்பின் விளைவாக இருக்குமா அல்லது ஒரு வருடத்தில் பல முறை ஏற்பட்ட வெடிப்புகளின் விளைவாக இருக்குமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

"அது ஒரே நாளில் நடந்த ஒரு நிகழ்வா அல்லது அந்த ஆண்டில் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மிகப் பெரிய துகள் புயல்கள் ஏற்பட்டதா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று ஓவன்ஸ் கூறுகிறார். இருப்பினும், அந்த புயல்கள் ஒவ்வொன்றும் இன்னும் பெரியதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும்.

 

மியாகே நிகழ்வுகள் தொடர்பான புதிய பதில்களை வழங்கும் என்ற நம்பிக்கையில் மர வளையங்கள் மற்றும் பனிக்கட்டிகள் பற்றிய கூடுதல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

 

"அதிகமான நிகழ்வுகள் மறைக்கப்பட்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்கிறார் மியாகே. கடந்த 5,000 ஆண்டுகளில் 95% மர வளைய தரவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன என்று சுவிட்சர்லாந்தில் உள்ள பொது ஆராய்ச்சி பல்கலைக்கழகமான இடிஎச் சூரிச் சூரிய விஞ்ஞானி நிக்கோலஸ் பிரெம் கூறுகிறார், அதாவது சமீபத்திய வரலாற்றில் புதிய மியாகே நிகழ்வுகள் காணப்பட வாய்ப்பில்லை.

 

இருந்தபோதிலும், மியாகே நிகழ்வுகளை கண்டுபிடிப்பதற்கான வேட்டை தொடர்கிறது. பார்ட், கடந்த ஜூன் மாதத்தில் பிரெஞ்சு ஆல்ப்ஸுக்குத் திரும்பி, புதைபடிவ மரங்களின் மாதிரிகளைச் சேகரித்தார். இந்த மாதிரிகள் ஆய்வகத்தை அடைந்தவுடன் அவர் மர வளையங்களை ஆய்வு செய்யும் ‘அலுப்பான வேலையை’ தொடுங்குவேன் என்று அவர் கூறுகிறார். அந்த ஆய்வு வேலை பல மாதங்களுக்கு நீளக்கூடும்.

 

ஒரு நாள், 14,300 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததை விட மிகப்பெரிய பெரிய மியாகே நிகழ்வு கண்டுபிடிக்கப்படலாம். நிச்சயமாக, மீண்டும் மியாகே நிகழ்வுக்கான வாய்ப்பும் உள்ளது. அதற்கு மனித இனம் தயாராக இருக்க வேண்டும்.

 

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments