Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'ஹமாஸ் நடத்திய தாக்குதலை தடுக்க தவறிவிட்டோம்' - ஒப்புக்கொண்ட இஸ்ரேல்

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (21:03 IST)
கடந்த சனிக்கிழமை (அக்டோபர் 7) பாலத்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேலில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பதிலடியாக இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் இதுவரை 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கின்றனர், 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
 
இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் 450 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சனிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இஸ்ரேலிய வெடிகுண்டு தாக்குதல்களில் 447 குழந்தைகள், 248 பெண்கள் உட்பட 1,417 பேர் உயிரிழந்துள்ளதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாமல் காஸாவில் உள்ள அல்- ஷிஃபா மருத்துவமனை திணறி வருகிறது. குறைந்த எரிபொருளே இருப்பதால் உயிர் காக்கும் சிகிச்சைகள் மட்டும் வழங்கப்படுகின்றன.
 
 
தெற்கு காஸாவிலிருக்கும் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் உருவான பள்ளம்.
 
ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி, தாக்குதலை தடுக்கத் தவறிவிட்டதாகத் தெரிவித்தார்.
 
“நாட்டின் பாதுகாப்புக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் நாங்கள்தான் பொறுப்பு. சனிக்கிழமை காலை, காஸாவை சுற்றியுள்ள பகுதிகளில் நாங்கள் அதைக் கையாளவில்லை,” என்றார்.
 
காஸாவில் பணயக் கைதிகளாக உள்ளவர்கள் குறித்துப் பேசிய அவர், “போரின் விலை அதிகம் மற்றும் கடினமானது, சிறைபிடிக்கப்பட்டவர்களை மீட்டுக் கொண்டு வர நாங்கள் அனைத்தையும் செய்வோம்,” என்று கூறினார்.
 
இந்நிலையில், தற்போது தாங்கள் ஹமாஸ் அமைப்பின் நிலத்தடிச் சுரங்கப்பாதைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.
 
 
ஹமாஸ் குழுவால் அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைகள்
இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் ஜோனதன் கான்ரிகஸ், இந்தச் நிலத்தடிச் சுரங்கங்களின் வலைப்பின்னல் ஹமாஸ் ஆயுதக்குழுவினரால் கட்டப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று கூறினார்.
 
“20 வருடங்கள் முன்பு அப்பகுதி ஹமாஸின் கட்டுப்பாட்டிற்குள் வந்தபோது, அவர்கள் காசா நகரத்திலிருந்து தெற்கிலிருக்கும் கான் யூனிஸ் மற்றும் ராஃபா வரை இந்தச் நிலத்தடிச் சுரங்கப் பாதைகளை அமைத்தனர்,” என்றார் அவர்.
 
மேலும், காசா, இரண்டு அடுக்குகளால் ஆன பகுதி, ஒன்று தரைக்குமேல் பொதுமக்களுக்கானது, மற்றொன்று நலத்தடியில் ஹமாஸ் குழுவினருக்கானது, என்றார்.
 
“ஹமாஸின் அந்த நிலத்தடிச் சுரங்கங்களைத் தாக்குவதற்காகத்தான் முயற்சி செய்கிறோம்,” என்றார் கான்ரிகஸ்.
 
 
காசா மீது 6 நாட்களாக குண்டுமழை பொழிந்து வருகிறது இஸ்ரேல் ராணுவம்
 
‘பணயக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை மின்சாரம் தண்ணீர் இல்லை’
வியாழனன்று, இஸ்ரேலின் மின்சாரத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஹமாஸ் இஸ்ரேலியப் பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரமோ தண்ணீரோ, எரிபொருளோ வழங்கப்படமாட்டாது என்று எக்ஸ் சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறார்.
 
 
முன்னர், காசா மீது 5 நாட்களாக குண்டுமழை பொழிந்துவந்த இஸ்ரேல் ராணுவம், திடீரென அண்டை நாடான லெபனான் மீதும் தாக்குதல் நடத்தியது.
 
இஸ்ரேல் எல்லையை ஒட்டியுள்ள லெபனான் பகுதியில் ஹிஸ்புல்லா இயக்கத்திற்குச் சொந்தமான கண்காணிப்புச் சாவடியை தங்களது போர் விமானங்கள் குண்டுவீசி அழித்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது.
 
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.
 
 
உலகின் அரிதான தொலைபேசி அழைப்பு - முகமது பின் சல்மானுடன் இரான் அதிபர் பேசியது என்ன?
இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும் சௌதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானும் இஸ்ரேல்-காசா மோதல் குறித்து புதன்கிழமையன்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தியதாக தெஹ்ரானில் உள்ள அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
 
ஏழு ஆண்டுகால விரோதப் போக்கிற்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே சீனா பேச்சுவார்த்தை நடத்திய பிறகான முதல் தொலைபேசி அழைப்பு இதுவாகும்.
 
ரைசியும் முகமது பின் சல்மானும் "பாலத்தீனத்திற்கு எதிரான போர்க்குற்றங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்" என்று விவாதித்ததாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
 
சௌதி பட்டத்து இளவரசர் "அனைத்து சர்வதேச, பிராந்திய கட்சிகளுடனும் தொடர்புகொள்வதில் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும்" செய்து வருவதாக சவுதி அரச செய்தி நிறுவனமான எஸ்பிஏ தெரிவித்துள்ளது.
 
எந்த வகையிலும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை சௌதி அரேபியா ஏற்காது என்பது பட்டத்து இளவரசர் மீண்டும் வலியுறுத்தியதாக எஸ்.பி.ஏ. தெரிவித்துள்ளது.
 
காசா மீது தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ஆயத்தம்
காசாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் காசாவின் எல்லையில் குவித்துள்ளது. இஸ்ரேலிய ராணுவம் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது.
 
இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காசா பகுதியில் தரை வழியாகத் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருக்கிறது.
 
ஆயுதமேந்திய வீரர்கள், காலாட்படை வீரர்கள், பீரங்கிப் படைகள் ஆகியோர் தவிர சுமார் 3 லட்சம் ரிசர்வ் படைகளும் காஸா எல்லையில் குவிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
 
முன்னதாக சிரியாவில் இருந்து இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படை கூறியுள்ளது.
 
இதேபோல் லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ராக்கெட்டுகளை வீசியதாகவும் தெரிவித்துள்ளது.
 
விமானங்களை கண்காணிப்பதற்காக ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்தி வந்த இடத்தை தாக்கி அழித்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது.
 
சண்டையில் இதுவரை இஸ்ரேலிய தரப்பில் 1,200 பேரும் காசாவில் 1100 பேரும் உயிரிழந்துள்ளனர்.
 
செவ்வாய்க்கிழமையன்று இஸ்ரேலுக்கு விதித்த கெடு முடிவடைந்ததுமே ஹமாஸ் மீண்டும் தாக்குதலைத் தொடங்கியது. காசாவை ஒட்டியுள்ள அஷ்கெலான் என்ற நகரை நோக்கி ஹமாஸ் குழுவினர் மீண்டும் ராக்கெட் தாக்குதல் நடத்தினர். அதேநேரத்தில், இஸ்ரேலிய ராணுவம் காசா பகுதியில் தனது தாக்குதலை தொடர்ந்தது. இதனால், இருதரப்பிலுமே உயிரிழப்பு நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
 
ஹமாஸ் குழுவினர் திடீரென சுமார் 7 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதங்களுடன் இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கும் மேற்பட்டோரை பணயக் கைதிகளாக காசாவுக்கு பிடித்துச் சென்றுவிட்டனர். இதனால் நிலைகுலைந்து போன இஸ்ரேல் உடனே சுதாரித்துக் கொண்டு, அடுத்த சில மணி நேரத்தில் பதிலடி தாக்குதலை தொடங்கிவிட்டது.
 
அதுமுதற்கொண்டு இஸ்ரேல் ராணுவத்தினர் காசா பகுதியில் விமான தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் குழுவினர் இலக்குகளை குறி வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரத்தில் இஸ்ரேலுக்குள் பல இடங்களில் ஊடுருவி தாக்குதல் நடத்திய ஆயுதம் தாங்கிய நபர்களையும் முறியடிக்க இஸ்ரேல் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
காசா பகுதியில் இஸ்ரேல் விமானப்படையினர் இடைவிடாமல் தாக்குதல் நடத்தி வரும் வேளையில், அதற்குப் பதிலடியாக, காசாவை ஒட்டி தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலான் நகரை மீண்டும் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தப் போவதாக ஹமாஸ் எச்சரித்தது. ஆகவே, அந்நகர மக்கள் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் கெடு விதித்தது.
 
டெலிகிராமில் ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில், "காசா கரைக்கு வடக்கே அமைந்துள்ள இந்த நகரின் குடியிருப்பாளர்கள் மாலை 5 மணிக்குள் (இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3 மணி) வெளியேற வேண்டும்" என்று எச்சரித்திருந்தது. அதேநேரத்தில், காசா பகுதியில் வசிக்கும் மக்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்ததையும் ஹமாஸ் நினைவுகூர்ந்தது.
 
அஷ்கெலான் நகர மக்களுக்கு விதித்த கெடு நிறைவடைந்ததுமே, ஹமாஸ் மீண்டும் தாக்குதலை தொடங்கிவிட்டது. காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 30 விநாடிகளுக்குள் 2 சுற்றுகள் ராக்கெட்டுகளை வீசி அவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனாலும், இதனால் பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லை என்றும் கூறப்படுகிறது. மக்கள் ஏற்கனவே பாதுகாப்பான மறைவிடங்களுக்குச் சென்றுவிட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிகிறது. கண்ணாடி சிதைவுகள் பட்டதால் பெண் ஒருவர் காயமடைந்தார்.
 
அஷ்கெலான் நகர் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தினாலும், மறுபுறம் காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்கிறது. கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த ஜக்காரியா அபு மும்மர், ஜாவத் அபு ஷாமல் ஆகிய 2 மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்டுவிட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஹமாஸில் அதிகாரம் வாய்ந்த அரசியல் குழுவில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் ஆவர்.
 
இஸ்ரேலிய குண்டுவீச்சு காரணமாக ரஃபா என்ற பாதையை எகிப்து மூடியுள்ளது. காசாவிலிருந்து எகிப்துக்குச் செல்லும் ரஃபா பாதை தான் அந்த பிரதேசத்திலிருந்து வெளியேறும் ஒரே வழி. இப்பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் காரணமாக எகிப்து தற்போது இந்தக் பாதையை மூடியுள்ளது என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பாதை திறந்திருந்தாலும், அதனை கடந்து செல்ல நீண்ட காத்திருப்போர் பட்டில் இருக்கிறது. அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டுமே அந்த பாதையை கடந்து செல்ல முடியும். இஸ்ரேல் தாக்குதலால் உயிருக்கு அஞ்சி ஓடும் பாலத்தீனர்கள் அங்கிருந்து வெளியேறும் ஒரே வழியும் அடைபட்டிருப்பதால் செய்வதறியாமல் தவிக்கின்றனர்.
 
ஐ.நா.வுக்கான இஸ்ரேல் தூதர் கிலாட் எர்டன் கூறுகையில், சனிக்கிழமை இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட சுமார் 100 முதல் 150 பேர் காசாவில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய இராணுவம், கடத்தப்பட்டவர்களின் 50 குடும்பங்களுடன் பேசியுள்ளதாகவும், இராணுவம் தகவல்களை உறுதிசெய்யும்போது மேலும் கடத்தப்பட்டவர்களின் குடும்பங்களைத் தொடர்பு கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளது.
 
எச்சரிக்கை இல்லாமல் இஸ்ரேல் விமானத் தாக்குதல்களைத் தொடங்கினால் கடத்தப்பட்டவர்களைக் கொன்றுவிடுவோம் என்று நேற்று இரவு ஹமாஸ் அமைப்பு மிரட்டியது. சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று ஹமாஸ் கூறியது. ஹமாஸ் அரசியல் அலுவலகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனிய்யா, சண்டை முடிவதற்குள் கடத்தப்பட்டவர்கள் பற்றி இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்.
 
"எதிரி நாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறித்து எங்களைத் தொடர்பு கொண்ட அனைத்து தரப்பினரிடமும் இந்த கோப்பு போர் முடிவதற்கு முன்னர் திறக்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளோம்" என்று அவர் கூறினார்.
 
மேலும், "மற்றும் அது நாங்கள் ஏற்றுக்கொள்ளும் விலையில் மட்டுமே இருக்கும்." என்றார். இஸ்ரேல் சனிக்கிழமை தெற்கு இஸ்ரேலில் இருந்து கடத்தப்பட்ட 100 முதல் 150 பேர் வரை ஹமாஸ் வசம் உள்ளதாக மதிப்பிடுகிறது.
 
இரு தரப்புமே பணயக் கைதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என்று கூறினாலும், கத்தார் மத்தியஸ்தத்தின் பேரில் ரகசியமாக பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் வசம் பணயக் கைதிகளாக உள்ள இஸ்ரேலிய பெண்கள், குழந்தைகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வெளிநாட்டினரை விடுவிக்க இஸ்ரேல் கோரியிருப்பதாக தெரிகிறது. அதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன பெண்கள், குழந்தைகளை விடுதலை செய்ய இஸ்ரேல் முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேநேரத்தில், இஸ்ரேலுக்குள் புகுந்து அந்நாட்டு குடிமக்கள் 30 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறப்படும் இஸ்லாமிய ஜிஹாத் குழு இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.
 
ஏற்கெனவே இஸ்ரேலிய நிலைகள் மீது ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய சாதாரண பீரங்கி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இஸ்ரேல் மட்டுப்படுத்திய நிலையில், லெபனானின் தெற்கு எல்லையில் உள்ள நிலைமை இப்போது அமைதியாக உள்ளது.
 
ஆனால் இஸ்ரேல்-பாலத்தீன மோதலின் அச்சுறுத்தல் லெபனான் நாடு முழுவதிலும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது.
 
இரானிய ஆதரவு குழுவான ஹிஸ்புல்லா தனது இலக்கை கவனமாக தேர்ந்தெடுத்தது. சர்ச்சைக்குரிய 3 நிலைகளில் மட்டுமே அந்த அமைப்பு தாக்குதல் நடத்தியது. ஆனால், அதை விடப் பெரிய அளவில் அந்த அமைப்பு தாக்குதலை நடத்த முடியும்.
 
இரானைப் போலவே இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் குழுவினருக்கு தற்போதைய தாக்குதல் குறித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளது. ஹமாஸ் குழுவின் முன்னேற்றம் குறித்து "ஆழமாகக் கவனித்து வருவதாகவும்" அந்த அமைப்பு கூறியுள்ளது.
 
தற்போதைய தாக்குதல்கள் "பாலத்தீன மக்களின் இசைவைப் பெற்றுள்ளது" என்று அதன் அறிக்கை கூறுகிறது.
 
ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவிடம் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளன. அவை இஸ்ரேலிய எல்லைக்குள் ஆழமாகச் சென்று தாக்கக் கூடியவை.
 
ஏவுதளம் மற்றும் பிற தளங்களை குறிவைத்து உடனடியாக பதிலடி கொடுத்த இஸ்ரேல், ஏற்கனவே தனது வடக்கு எல்லைக்கு வலுவான ராணுவ குழுக்களை அனுப்பியுள்ளது. அது ஒரு நீண்ட மோதலைத் திட்டமிடுவதாகவும், காஸாவில் தரைவழித் தாக்குதலை நடத்த முடிவெடுத்திருப்பதாகவும் கூறுகிறது.
 
தற்போதைய தாக்குதல்களின் அளவு வரம்பிற்குட்பட்டது. இரு தரப்பினரும் தங்கள் தாக்குதல்களை கவனமாக அளவீடு செய்து மேற்கொள்கின்றனர். மேலும் முழு அளவிலான போரைத் தூண்டும் காரணிகளும் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆனால் ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகளில் உள்ள மறைமுகமான அச்சுறுத்தல், இதே நிலை நீடிப்பதற்குப் பதிலாக நிலைமை மோசடையும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.
 
மேலும் ஹிஸ்புல்லா அமைப்பு என்பது லெபனான் நாடு அல்ல. அந்த அமைப்பை எதிர்க்கும் பலர் நாட்டில் உள்ளனர்.
 
இன்னும் அரசியல் முடக்கத்தால் அந்த அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளது - தற்போதைய நிலையில் அந்த அமைப்புக்கு சரியான தலைமையும் இல்லை என்பதுடன் கடும் பொருளாதார நெருக்கடியில் அந்த அமைப்பு சிக்கித் தவிக்கிறது.
 
ஆகஸ்ட் 2005 - மத்திய கிழக்குப் போரில் எகிப்திடம் இருந்து காசாவைக் கைப்பற்றிய 38 ஆண்டுகளுக்கு பின் இஸ்ரேலியப் படைகள், அனைத்தையும் பாலஸ்தீனத்தின் கட்டுப்பாட்டில் விட்டுவிட்டு காசாவிலிருந்து வெளியேறின.
 
ஜன. 25, 2006 - பாலஸ்தீன தேர்தலில் ஹமாஸ் பெரும்பான்மை இடங்களை வென்றது. ஆயுத போராட்டத்தை கைவிடவும், இஸ்ரேலை அங்கீகரிக்கவும் ஹமாஸ் மறுத்ததால் பாலஸ்தீனர்களுக்கான உதவிகளை இஸ்ரேலும் அமெரிக்காவும் நிறுத்தின.
 
ஜூன் 14, 2007 - மேற்குக் கரையில் இருக்கும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு விசுவாசமான ஃபத்தா படைகளை வீழ்த்தி காசாவை ஹமாஸ் கைப்பற்றியது.
 
டிசம்பர் 27, 2008 - தெற்கு இஸ்ரேலிய நகரமான ஸ்டெரோட் மீது பாலஸ்தீனர்கள் ராக்கெட்டுகள் வீசியதை அடுத்து, காஸா மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது. 22 நாள் நடந்த தாக்குதலில் சுமார் 1,400 பாலஸ்தீனியர்கள் மற்றும் 13 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.
 
நவம்பர் 14, 2012 - ஹமாஸின் ராணுவத் தளபதி அஹ்மத் ஜபாரியை இஸ்ரேல் கொலை செய்தது.
 
ஜூலை-ஆகஸ்ட் 2014 - மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கடத்தி ஹமாஸ் கொலை செய்தது. இதைத் தொடர்ந்து ஏழு வாரங்கள் நடந்த போரில் 2,100க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் மற்றும் 73 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
 
மார்ச் 2018 - பாலஸ்தீனிய அகதிகளை தங்கள் நிலங்களில் மீண்டும் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாலஸ்தீனியர்கள் காசாவில் உள்ள இஸ்ரேல் எல்லையில் போராட்டம் நடத்தினர். பல மாதங்கள் நடந்த போராட்டத்தில் 170க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். இது ஹமாஸ் மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியது.
 
மே 2021 - ரமலான் மாதத்தில் இஸ்லாத்தின் மூன்றாவது புனிதத் தலமான ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதி வளாகத்தில் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுடன் நடந்த மோதலில் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.
 
ஆகஸ்ட் 2022 - மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தளபதி தய்சீர் அல்-ஜபரியை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி நடத்தியது. மூன்று நாட்கள் நடந்த மோதலில் 15 குழந்தைகள் உட்பட குறைந்தது 44 பேர் கொல்லப்பட்டனர்.
 
ஜனவரி 2023 - இஸ்ரேலிய படைகள் ஒரு அகதிகள் முகாமைத் தாக்கி ஏழு பாலஸ்தீன ஆதரவு தாக்குதல்தாரிகள் மற்றும் இரண்டு பொதுமக்களையும் கொன்றதை அடுத்து இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகளை வீசியது. இந்த தாக்குதலில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. இஸ்ரேல் பதில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
 
அக்டோபர் 2023 - தற்போது எல்லை தாண்டிச் சென்று மிகப்பெரிய தாக்குதலை இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியுள்ளது. தனது போராளிகளும் இந்தத் தாக்குதலில் இணைந்துள்ளதாக இசுலாமிய ஜிஹாத் அமைப்பு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கென்யாவை அடுத்து இலங்கையிலும் அதானி ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறதா?

22ஆம் தேதி ஆகியும் இன்னும் ரேசன் கடையில் துவரம் பருப்பு இல்லை: ராமதாஸ் கண்டனம்.!

இந்தியாவில் அறிமுகமானது OPPO Find X8! - சிறப்பம்சங்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments