Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர்க் குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை - மைத்திரிபால சிறிசேன

போர்க் குற்றம் குறித்து உள்நாட்டு விசாரணை - மைத்திரிபால சிறிசேன
, சனி, 20 டிசம்பர் 2014 (15:58 IST)
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற எதிரணி தரப்பிலான பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்கள், இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றை நடத்த முடியாது என்றும், ஜனவரி மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் தாம் வெற்றிபெற்றால், அதற்குப் பதிலாக உள்ளூரில் சுதந்திரமான நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்துவேன் என்றும் தெரிவித்திருக்கின்றார்.


 
அதேநேரத்தில் விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்காகப் பங்களிப்பு செய்த எவரையும், சர்வதேச விசாரணை ஒன்றின் பாதிப்புக்கு உட்படாத வகையில் பாதுகாப்பேன் என்றும் கூறியிருக்கின்றார்.
 
எதிரணியினரின் சார்பில் பொது வேட்பாளராகக் களமிறங்கியுள்ள மைத்திரிபால சிறிசேன அவர்கள் தேர்தலில் வெற்றிபெற்றதும், 100 நாள் திட்டம் ஒன்றின் மூலம் ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவுகட்டி பொறுப்பு கூறவல்ல நாடாளுமன்ற ஆட்சிமுறையை உருவாக்குவேன் என சூளுரைத்திருக்கின்றார்.
 
‘ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகார முறைமையை எவ்வாறு இல்லாதொழிப்பது, ஜனாதிபதி ஆட்சியை எப்படி இல்லாமல் செய்வது, 100 நாள் திட்டத்தின் பின்னர், நாட்டின் ஆட்சி முறை என்ன, 100 நாட்களின் பின்னர், ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ள என்னுடைய றிலைப்பாடு என்ன என்று மக்கள் மனங்களில் எழுந்துள்ள பலதரப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையில் எமது தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருக்கின்றது.
 
இந்த நாட்டில் பலமற்ற நாடாளுமன்றமே இருக்கின்றது. குடும்ப ஆட்சி நடைபெறுகின்றது. இதனால் இங்கு அரசியல் ஸ்திரமற்ற நிலைமை எற்பட்டிருக்கின்றது.
 
இவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்’ என்று பொது வேட்பாளர் தமது தேர்தல் விஞ்ஞபானம் குறித்து கருத்துரைத்த போது தெரிவித்திருக்கின்றார்.
 
சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குப் பதிலாக உள்ளுரில் விசாரணையொன்றை நடத்தப் போவதாக எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்துரைத்த சட்டத்தரணி புவிதரன், போர்க்குற்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் பாதுகாப்பேன் என கூறிக்கொண்டு, தானே ஒரு விசாரணையை அமைத்துக் கொண்டு அதனை சுயாதீனமான விசாரணையென்று கூறினால், அது எவ்வாறு ஒரு சுயாதீன விசாரணையாக முடியும் என கேள்வி எழுப்பினார்.
 
இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினரும், இராணுவத்தினரிடம் சரணடைந்தபின்னர் காணாமல் போயுள்ள விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறப்பாளராக இருந்த எழிலன் என்றழைக்கப்படும் சசிதரனின் மனைவியுமாகிய, அனந்தி சசிதரன் கருத்து வெளியிட்டபோது, எல்எல்ஆர்சி, ஜனாதிபதி ஆணைக்குழு போன்ற உள்ளுர் பொறிமுறையிலான விசாரணைகள் என்பவற்றில் எல்லாம் நம்பிக்கை இழந்த நிலையிலேயே சர்வதேச விசாரணையை நாங்கள் நாடியிருக்கின்றோம்.
 
இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறுகின்ற இந்த விசாரணையானது காலத்தை இழுத்தடிப்பதும், எங்களுக்கு நீதி கிடைக்காமல் செய்வதற்கான நடவடிக்கையுமாகும்' என்று தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil