Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு கட்சி சார்பாக செயல்படவில்லை - விக்னேஸ்வரன்

ஒரு கட்சி சார்பாக செயல்படவில்லை - விக்னேஸ்வரன்
, வியாழன், 9 அக்டோபர் 2014 (16:10 IST)
தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகளின் ஒத்துழைப்புடன் தேர்தலில் போட்டியிட்டு, வடமாகாண முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த போதிலும், ஒரு கட்சி சார்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் செயற்படுவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கின்றது.
மாகாண சபையின் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சருக்கும், வட மாகாணத்தைச் சேர்ந்த கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து, இந்தச் சந்திப்பில் இடம்பெற்ற கருத்துப் பரிமாற்றங்கள் கூட்டமைப்பினுள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
 
இந்த விடயம் குறித்து பிபிசி தமிழோசையிடம் கருத்து வெளியிட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன், தமிழரசுக் கட்சியின் சார்பாக தான் நடந்து கொள்வதாக தன்னிடம் கேட்கப்பட்டதாகவும், அதற்குப் பதிலளிக்கையில், தான் கொள்கை ரீதியாக தமிழரசுக் கட்சியுடன் மட்டுந்தான் இணந்திருக்க முடியுமேயொழிய, வன்முறையோடு சம்பந்தப்பட்ட ஈபிஆர்எல்எப், டெலோ, புளொட் ஆகிய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நான் இருக்க முடியாதென்று தெரிவித்தேன். ‘ஆனால் அந்தக் கட்சிகளை நான் எந்தவிதமான பேதத்துடனும் நடத்தவில்லை. அவர்களுடன் மனிதாபிமானத்துடனும், சகோதரத்துவத்துடன் தான் நடந்து வருகின்றேன். அவ்வாறு பேதம் காட்டி நான் நடந்து கொள்வதாக இருந்தால் ஈபிஆர்எல்எப் கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்க மாட்டேன். அந்த மாநாட்டில் நான் கலந்து கொண்டு செயற்பட்டதை அவர்கள் போற்றி மகிழ்ந்திருக்கின்றார்கள்.’
 
‘இந்தச் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் வெளியில் இருப்பவர்கள் நடைமுறைக்கு அப்பாற்பட்ட வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்கள். இது துரதிஷ்டவசமானது. நான் எவரையும் வேற்றுமையுடன் நடத்தவில்லை. எனவே இது சம்பந்தமாக அவர்கள் எந்தவிதமான அய்யப்பாட்டையும் கொள்ளத் வேண்டியதில்லை.’ ‘ஒரு சில்லறை விடயத்தை வெளியில் இருப்பவர்கள் பெரிதுபடுத்தியிருப்பது மன வருத்தத்தை அளிக்கின்றது’ என்றும் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
'முதலமைச்சர் ஒரு கட்சி சார்பாக செயல்படக்கூடாது' - சுரேஷ் பிரேமசந்திரன்
 
அடுத்தபக்கம்..

'முதலமைச்சர் ஒரு கட்சி சார்பாக செயல்படக்கூடாது' - சுரேஷ் பிரேமசந்திரன்
 
இதுபற்றி பிபிசி தமிழோசையிடம் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமாகிய சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பின் ஊடாக முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்கி முதலமைச்சராகியுள்ள, வடமாகாண முதலமைச்சர், நடுநிலை நின்று அனைவரையும் வழிநடத்திச் செயற்பட வேண்டும், ஒரு கட்சியின் சார்பாகச் செயற்படக் கூடாது என்று அவரைக் கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.
 
முதலமைச்சர் தமிழரசுக் கட்சியின் சார்பாக நடந்து கொள்கின்றார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சர், ‘இதற்கு நான் கூறுகின்ற பதிலையிட்டு நீங்கள் யாரும் கோபிக்கக் கூடாது. நான் ஈபிஆர்எல்ப் கட்சியுடனோ, டெலோவுடனோ, புளொட் கட்சியுடனோ சேர முடியாது. நான் தமிழரசுக் கட்சியின் சார்பாக இருக்கின்றேன் என தெரிவித்ததாகக் கூறினார்.
 
முதலமைச்சருக்குப் பதிலளிக்கும் வகையில், நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள எல்லா கட்சிகளும் உங்களிடம் வேண்டிக்கொண்டதையடுத்து, தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வந்த நீங்கள் எல்லோருக்கும் பொதுவாக நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிடுகின்ற இந்தக் கட்சிகள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து தங்களை தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்து நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பதவியையும் வகிக்கின்றார்கள்.
 
 
'விக்னேஸ்வரன் பதில் திருப்தியானதாக இல்லை'
 
அரசாங்கத்துடனும், எதிர்க்கட்சிகளுடனும், வெளிநாடுகளுடனும் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் பேச்சுக்கள் நடத்தி வருகின்றார்கள். ஆயுதப் போரட்டத்தை மேற்கொண்டிருந்தவர்கள் என்று, நீங்கள் சுட்டிக்காட்டுவது இல்லாத ஒரு விடயத்தைப் புதிதாக உருவாக்குவதாகவே இருக்கின்றது.
அத்துடன் தமிழரசுக் கட்சி உங்களை அவர்களுடன் சேருமாறு கேட்டிருக்கலாம், ஈபிஆர்எல்எப் கட்சியியோ, டெலோ மற்றும் புளொட் கட்சிகளோ உங்களைத் தங்களுடன் சேருமாறு கேட்கவுமில்லை. இந்த நிலையில் நீங்கள் குறிப்பிடுவது ஆயுதப் போராட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவும் அமைந்துள்ளது என அவரிடம் தெரிவித்தேன். அவருடைய பதில் எங்களுக்கு அதிருப்தி தரும் வகையிலேயே அமைந்திருந்தது என்பதையும் அவருக்கு எடுத்துக் கூறினேன் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil