Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரபணு குறைபாட்டால் மாறிய முகம்: சவால்களை சாதனையாக மாற்றிய யுவராஜ்

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (15:04 IST)
சென்னை கல்பாக்கத்தில் வசித்து வருபவர் யுவராஜ். குழந்தைகள் எழுத்தாளராக இருக்கிறார்.

 
குழந்தைகளுக்கான கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் என 300 க்கும் மேற்பட்ட படைப்புகளை உருவாக்கி இருக்கிறார். மரபணு குறைபாடு காரணமாக முகத்தில் சிறுசிறு கொப்பளங்கள் தோன்றி இன்று அவை நிரந்தரமாக இவரின் முகத்தில் தங்கியிருக்கிறது. ஆனால் இதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் இன்று கல்பாக்கம் காரைதிட்டு பகுதியில் உள்ள இருளர் குடும்ப குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி கற்பித்து வருகிறார் .

பிபிசி தமிழுக்காக தன்னுடைய கற்பித்தல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். சிறு வயதில் இருந்தே கதைகள் எழுதுவதில் எனக்கு ஆர்வம் உண்டு. 1 ஆம் வகுப்பு படிக்கும் போதே என் வயது குழந்தைகளிடம் கதைகளை சொல்வேன். தெருவோரங்களில் உள்ள திண்ணைகளில் உட்கார்ந்து வார இறுதி நாட்களில் பல பேருக்கு கதைகளை சொல்லிக் கொண்டே இருப்பேன்.

9 வது படிக்கும் போது மரபணு குறைபாடு காரணமாக முகத்தில் சிறு சிறு புள்ளிகள் எனக்கு தோன்ற ஆரம்பித்தது. தொடக்கத்தில் இது சரியாகிவிடும் என்று நானும் என் குடும்பத்தில் உள்ளவர்களும் நினைத்தோம். ஆனால் அது பொய்யாகி விட்டது. நாளுக்கு நாள் அது முகத்தில் பரவியதே தவீர குறையவே இல்லை. நானும் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்தேன். ஆனால் முழுமையாக அது குணமாகவில்லை. நாளடைவில் அதை அப்படியே ஏற்றுக் கொண்டேன்.

ஆரம்பத்தில் இந்த சமூகத்தில் என்னை நிலைநிறுத்திக் கொள்ள மிகவும் தயங்கினேன். அதுவும் டீன்ஏஜ் பருவத்தில் என் வயது நண்பர்கள் மகிழ்ச்சியாக அனைவரிடத்திலும் சகஜமாக பழகும் போது என்னால் மட்டும் அது முடியாமல் போனது. தாழ்வு மனப்பான்மை இருந்ததால் மனதில் குழப்பமான சிந்தனைகள் அதிகம் இருந்தன. ஆனால் வாழ்தல் என்பதே ஒவ்வொரு கட்டங்களாக கடந்து செல்வதுதானே.

பல அவமானங்களுக்குப் பிறகு என்னை நானே நம்பிக்கையோடு பார்க்க தொடங்கினேன். பெரியவர்களை விட குழந்தைகள் என்னை மிகவும் கனிவுடன் அணுகினார்கள். அவர்களுடைய அன்பு, என் மீது எனக்கிருந்த நம்பிக்கையை துளிர்க்க செய்தது. குழந்தைகளோடு குழந்தைகளாக அவர்களோடு இணைந்து பணியாற்ற தொடங்கினேன். என்னுடைய வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக வசந்தம் என்னை வருடத் தொடங்கியது.

பயிற்றுநராக மாறிய கதை

பிறகு ஒரு குழந்தைகள் பத்திரிகையில் 2008 இல் இருந்து 2019 வருடம் வரை உதவி ஆசிரியராகவும், இதழ் ஆசிரியராகவும் 12 ஆண்டுகள் பணிபுரிந்தேன். ஏற்கெனவே குழந்தைகள் இலக்கியத்தில் ஆர்வம் இருந்ததால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழந்தைகளுக்காக நேரம் செலவிடுவேன்.

அப்போதுதான் கல்பாக்கத்தை சேர்ந்த செரீனா என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் கல்பாக்கத்தில் அலை குழந்தைகள் குடில் என்ற சிறுவர்களுக்கான பள்ளியை நடத்தி வருகிறார்.

கல்பாக்கம் அருகே காரைத்திட்டு என்ற கிராமத்தில் வசிக்கும் இருளர் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் கல்வி கற்றல் குறித்த புரிதல் இல்லாமல் இருந்தனர். இவர்களுக்காக அலை குழந்தைகள் குடில் உருவாக்கப்பட்டு கல்வி கற்றல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதலில் வார விடுமுறை நாட்களில் மட்டும் வந்து இந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பது குறித்தும் நல்ல பழக்க வழக்கங்கள் குறித்தும் வகுப்புகளை எடுத்தேன்.

நாளடைவில் இந்த குழந்தைகள் என் மீது நல்ல அன்பு காட்ட தொடங்கினார்கள். மனதிற்கு அது பெரும் ஆசுவாசமாய் அமைந்தது. குழந்தைகளின் பேரன்பு காரணமாக முழு நேரமாக இங்கு வருகிறேன். வீட்டையும் கல்பாக்கத்திற்கு மாற்றிவிட்டேன்.

இருளர் குழந்தைகளுக்காக முழு நேர பணி

இங்கு என்னோடு ஹரி குமார், திவ்யா, சங்கர் என நால்வரும் இந்த குழந்தைகளோடு தினமும் நேரம் செலவழிக்கிறோம். அவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதுவதில் உதவி புரிவதில் தொடங்கி நல்ல பழக்கவழக்கங்களை சொல்லித்தருகிறோம்.

காரணம் இந்த இருளர் இன குடும்பங்களில் உள்ளவர்கள் யாரும் படித்ததில்லை. இப்போது தான் முதல்முறையாக இந்த குழந்தைகள் பள்ளியின் வாசலை மிதிக்கிறார்கள். அவர்களுக்கு கல்வியின் அவசியம் குறித்தும் படித்து முடித்தால் அவர்களுடைய தலைமுறையே நன்றாக இருக்கும் என்று எடுத்து சொல்கிறோம். இங்கு உள்ள குழந்தைகளில் 4 பேர் முதல்முதலாக 10 ஆம் வகுப்பிற்கு வந்திருக்கிறார்கள். ஏனென்றால் இவர்கள் பெரும்பாலும் 4 முதல் 5 வகுப்பு வரை மட்டுமே படித்து, பிறகு பள்ளிக்கு செல்ல மாட்டார்கள். அப்படி எதுவும் நடக்க கூடாது என கவனமாக இருக்கிறோம்.

கொரோனா காலகட்டம் எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது. பள்ளிகள் மூடிவிட்டதால் குழந்தைகளுக்கு படிப்பின் மீது இருந்த ஆர்வம் குறைந்துவிட்டது. ஆனால் தொடர்ந்து குழந்தைகளிடம் பேசி பேசி அவர்களுக்கு படிப்பின் மீது கவனம் செலுத்த வைக்க கொஞ்சம் கடினமாக இருந்ததது. ஆனால் தொடர் உழைப்பு அதை சாத்தியமாக்கி உள்ளது.
முதலில் என்னை கேலி பேசியவர்கள் எல்லாம் இப்போது என்னை முழுமையாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதைவிட இந்த குழந்தைகளுக்கு நான் இப்போது முழுவதுமாக என்னை அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பரிபூரண அன்பு எனக்கு மேலும் உத்வேகத்தை கொடுக்கிறது. 

நம்முடைய உடம்பில் எத்தனை குறைகள் இருந்ததால் அதை தாண்டி நம்முடைய மனதிற்கு பிடித்த வேலையை செய்ய தொடங்கும் போது தன்னம்பிக்கை கிடைக்கும். அது மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். அதற்கு நானே ஒரு உதாரணம் என்று சொல்லி முடித்தார் யுவராஜ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் நவம்பர் 10ஆம் தேதி வரை மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்..!

தீபாவளி தினத்தில் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சிக்கன் பிரியாணி? விசாரணைக்கு உத்தரவு..!

திருவண்ணாமலை மகா தீபத்தின் போது பக்தர்களுக்கு கட்டுப்பாடு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

சென்னையின் முக்கிய பகுதியில் மேம்பாலப் பணி: போக்குவரத்து மாற்றம்!

தமிழக முதல்வரின் ஆய்வுகள் இன்று தொடக்கம்.. கோவையில் முதல்கட்ட ஆய்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments