Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளக விசாரணை முன்னேற்றத்தை ஐநா கவுன்சிலில் வைப்பது அவசியம்

உள்ளக விசாரணை முன்னேற்றத்தை ஐநா கவுன்சிலில் வைப்பது அவசியம்
, வியாழன், 26 மார்ச் 2015 (11:05 IST)
இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்நாட்டில் விசாரணை நடத்தி அதன் முன்னேற்றத்தை வரும் செப்டெம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அறிவிப்பது முக்கியம் என்று இலங்கையின் இராஜாங்க நிதி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு காணாமல் போனோரை கண்டறிவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை தற்போது தயாராகியுள்ள நிலையில், அதனை மக்கள் பார்வைக்காக வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
அமைச்சர் மஹிந்த சமரசிங்க இராஜங்க நிதி அமைச்சராக, அமைச்சரவை பொறுப்புக்களை ஏற்கும் முதல் நாளான இன்று ஊடகவியலாளர்களிடம் பேசியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
முன்னைய மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின்போது, மனித உரிமைகள் அமைச்சுக்கு பொறுப்பாக இருந்த மஹிந்த சமரசிங்க, ஐக்கிய நாடுகள் சபை கூட்டங்கள் பலவற்றில் இலங்கையின் பிரதிநிதியாக பங்கேற்று வந்தார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் இலங்கைத் தொடர்பில் மார்ச் மாதம் வெளியிடப்படவிருந்த பிரேரணை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்கு பிற்போடப்பட்டமையானது மைத்திரிபால அரசுக்கு கிடைத்துள்ள மிகப் பெரிய வெற்றி என அவர் சுட்டிக்காட்டினார்.
 
இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டிருந்தால் இலங்கைக்கு எதிராக பொருளாதா தடை கொண்டுவரவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
 
குறிப்பாக , இன்று இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக பலர் குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், ஒருவேளை பிரேரணைக் கொண்டுவரப்பட்டு பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தால் இலங்கையின் பொருளாதாரம் முற்றாக இல்லாமல் போயிருக்கும் எனவும் கூறினார்.
 
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் சர்வதேசத்திடமிருந்து கிடைத்துள்ள வாய்ப்புக்கள் இலங்ககைக்கு முக்கியமானதாக இருக்கிறது என கூறிய அவர் ஒரு தரப்பினர் மட்டுமல்லாது அனைவரும் தங்களது ஒத்துழைப்பை இலங்கைக்கு தர முன்வந்துள்ளமை தற்போதைய அரசாங்கத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil