Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி: போர் பதற்றத்தை உருவாக்காதீர்கள் - மேற்குலக நாடுகளிடம் கூறும் யுக்ரேன் அதிபர்

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (14:35 IST)
தங்கள் நாட்டு எல்லையில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என யுக்ரேன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ரஷ்யா, யுக்ரேன் மீது உடனடியாக போர் தொடுக்கலாம் என எச்சரிப்பது யுக்ரேன் பொருளாதாரத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது என பத்திரிகையாளர்களிடம் கூறினார் அதிபர் செலென்ஸ்கி.

அடுத்த மாதம், ரஷ்யா, யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தலாம் என தான் நம்புவதாக கடந்த வியாழக்கிழமை கூறினார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

ஆனால் ரஷ்யாவோ அதை மறுத்துள்ளது. தாங்கள் போரை விரும்பவில்லை என வெள்ளிக்கிழமை ரஷ்யாவின் வெளிவிவகாரத் துறை அமைச்சர் கூறினார்.

தற்போது ரஷ்யா, யுக்ரேன் எல்லையில் கிட்டத்தட்ட 1,00,000 ரஷ்யப் படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். செலன்ஸ்கியோ அது அத்தனை பெரிய அபாயமாகத் தெரியவில்லை எனக் கூறியுள்ளார்.

"மதிப்புக்குரிய பல நாட்டுத் தலைவர்களிடமிருந்து கூட சமிக்ஞைகள் வந்து கொண்டிருக்கின்றன, நாளை போர் நடக்கும் என்று அவர்கள் போகிற போக்கில் கூறுகிறார்கள். இது அச்சத்தை ஏற்படுத்துகிறது, இது எங்கள் நாட்டை எந்த அளவுக்கு பாதிக்கிறது தெரியுமா?" என்று யுக்ரேன் தலைநகர் கிவியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் அதிபர் செலென்ஸ்கி.

நாட்டுக்குள் நிலையற்ற சூழல் நிலவுவதுதான் யுக்ரேன் நாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று அவர் கூறினார்.

விரைவில் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் நேட்டோ படைகளை வலுப்படுத்த, ஒரு சிறு எண்ணிக்கையிலான படையினரை அனுப்பவிருப்பதாக கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார். ஆனால் அவர்கள் எங்கு நிலைகொள்வார்கள், எப்போது களமிறக்கப்படுவார்கள் என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த வாரத் தொடக்கத்தில், குறுகிய காலத்தில் களமிறக்கப்பட 8,500 படையினர் போருக்குத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக, அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் கூறியது.

யுக்ரேன் நேட்டோ அமைப்பில் சேர்க்கப்படக் கூடாது என்கிற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்தது. அதற்கு பதிலாக ராஜீய ரீதியில் பிரச்சனையைப் பேசித் தீர்க்கலாம் என்று கூறியது.

ரஷ்யாவின் பாதுகாப்புப் பிரச்சனைகளை மேற்கு நாடுகள் நிராகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறினார். மேற்கொண்டு என்ன செய்யலாம் என தீர்மானிப்பதற்கு முன், அமெரிக்க தரப்பில் கொடுக்கப்பட்ட பதிலை தான் ஆராய்வதாகக் கூறியுள்ளார் புதின்.

சமீபத்தில் புதின் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மக்ரோங் இடையில் தொலைபேசி அழைப்பு மூலம் பேச்சு வார்த்தை நடந்தது.

இருநாட்டு தலைவர்களும் பிரச்சனையின் தீவிரத்தைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறினார் மக்ரோங். ரஷ்யா தன் அண்டை நாடுகளின் இறையாண்மையைப் மதிக்க வேண்டும் என்று புதினிடம் கூறினார் மக்ரோங்.

எந்த தீர்வும் இல்லை

யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தப் போதுமான படையினரை நிலைநிறுத்தியுள்ளது ரஷ்யா என அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் லாய்ட் ஆஸ்டின் வெள்ளிக்கிழமை கூறினார்.

யுக்ரேன் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள உதவுவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இதில் கூடுதலாக ஆயுதங்களை வழங்குவதும் அடக்கம்.

"போர் தவிர்க்க முடியாத ஒன்றல்ல. இப்போதும் ராஜீய ரீதியில் இப்பிரச்சனையைப் பேசித் தீர்க்க வழியுள்ளது" என்று கூறினார் லாய்ட் ஆஸ்டின்.

இதற்கிடையில், ரஷ்யா, யுக்ரேன் மீது போர் தொடுக்கத் தயாராக இருந்ததாகவும், இடத்தைத்தான் தீர்மானிக்கவில்லை என்றும் ஜெர்மனியின் வெளிநாட்டு உளவுத் துறை அமைப்பின் தலைவர் கூறினார்.

யுக்ரேன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது, கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோவின் ராணுவ நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும், ரஷ்யாவை ஒட்டி உள்ள நாடுகளில் நேட்டோ படையினர் ஏவுகணைகளைக் களமிறக்கக் கூடாது என கடந்த மாதம், மேற்கு நாடுகளிடம் வலியுறுத்தியது ரஷ்யா.

யுக்ரேன் நாட்டுக்கு, தன் கூட்டாளிகளைத் தேர்வு செய்ய முழு உரிமை உண்டு என அமெரிக்கா மற்றும் நேட்டோ தரப்பு பதிலளித்தது. ஆனால், ஏவுகணைகளை களமிறக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்காவும், நேட்டோவும் கூறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments