Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசிய விமான விபத்து: கறுப்புப் பெட்டிகள் பிரிட்டன் வந்து சேர்ந்தன

மலேசிய விமான விபத்து: கறுப்புப் பெட்டிகள் பிரிட்டன் வந்து சேர்ந்தன
, வியாழன், 24 ஜூலை 2014 (11:21 IST)
உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச் 17 ன் கறுப்புப் பெட்டிகள் விமான விபத்து ஆய்வாளர்களால் ஆராயப்படுவதற்காக பிரிட்டன் வந்து சேர்ந்துள்ளன.

ஹாம்ப்ஷயரின் ஃபான்பரோவில் இருக்கும் தங்கள் தலைமையகத்திடம் இந்தப் பெட்டிகள் அளிக்கப்பட்டிருப்பதாக விமான விபத்துப்புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணையை நெதர்லாந்து அதிகாரிகள் மேற்கொண்டுவருகின்றனர். அவர்களது கோரிக்கையின் பேரில், பிரிட்டன் நிபுணர்கள் கறுப்புப் பெட்டிகளில் இருக்கும் தகவல்களைப் பதிவிறக்கம் செய்கின்றனர்.

ஜூலை 17ஆம் தேதியன்று நடந்த இந்த விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த பத்து பேர் உள்பட 298 பேர் பலியானார்கள்.

உக்ரைனிலிருக்கும் பிரிவினைவாத கிளர்ச்சியாளர்களுக்கு ரஷ்யாதான் ஆயுதங்களை அளிப்பதாக மேற்கு நாடுகளின் தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தரையிலிருந்து விண்ணில் ஏவக்கூடிய ஏவுகணையின் மூலம் கிளர்ச்சியாளர்கள்தான் இந்த போயிங் 777-220 ரக விமானத்தை வீழ்த்தினார்கள் என்று நம்பப்படுகிறது. ஆனால், உக்ரைன் அரசுப் படைகள்தான் இதற்குப் பொறுப்பு என ரஷ்யா கூறிவருகிறது.

உக்ரைனில் மோதல்கள் நடக்கும் நிலையிலும், ரஷ்யாவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்வதற்கு பிரிட்டன் அரசு அளித்த உரிமம் இன்னும் அமலில் இருக்கிறது என பிரிட்டனின் எம்பிக்கள் குழு ஒன்று விமர்சித்துள்ளது.

ஆனால், மார்ச் மாதத்திலிருந்தே ரஷ்யாவுக்கு ஆயுதங்கள் விற்கப்படவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் இந்தக் கறுப்புப் பெட்டிகளை மலேசிய அதிகாரிகளிடம் இந்த வாரம் அளித்தனர் அதற்குப் பிறகு இந்தப் பெட்டிகள் தற்போது பிரிட்டனுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு கருவிகளிலும் இருக்கும் தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, நெதர்லாந்து புலனாய்வாளர்களுக்கு அனுப்பப்படும் என போக்குவரத்துத் துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
webdunia
இந்தக் கறுப்புப் பெட்டிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சேதத்தைப் பொறுத்து தகவல்களை பதிவிறக்கம் செய்ய இரண்டு நாட்கள் வரை ஆகலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

காக்பிட் குரல் பதிவுக் கருவியில் பதிவானவற்றை கேட்பதற்குத் தேவையான கருவிகள் ஐரோப்பாவில் இரண்டு இடங்களில் மட்டுமே இருக்கின்றன. பிரிட்டிஷ் விமான விபத்துப் புலனாய்வுப் பிரிவு அவற்றில் ஒன்றாகும்.

பிரிட்டிஷ் விமான விபத்துப் புலனாய்வுத் தலைமையகத்தில் இருக்கும் சீலிடப்பட்ட அறைக்கு இந்தப் பெட்டிகள் எடுத்துச்செல்லப்பட்டு தகவல்கள் பதிவிறக்கம் செய்யப்படும் என பிபிசி செய்தியாளர் தெவ் லெக்கட் தெரிவித்துள்ளார்.

இந்த விமானம் ஏவுகணையால் தாக்கப்பட்டதா என்பதை விமான தகவல் பதிவுக் கருவியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் உறுதிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதும் காக்பிட் குரல் பதிவுக் கருவியில் கிடைக்கும் தகவல்கள் விபத்திற்கான காரணத்தை உறுதிசெய்வதில் குறைவான பங்களிப்பையே செலுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கறுப்புப் பெட்டிகள் என்றால் என்ன?

விமான தகவல் பதிவுக் கருவி, காக்பிட் குரல் பதிவுக் கருவி என இதில் இரண்டு பெட்டிகள் இருக்கின்றன. ஆனால், இவை கறுப்பு நிறத்தில் இருக்காது. எவ்வளவு பெரிய விபத்து நேர்ந்தாலும் உருக்குலையாத வகையில் இந்தப் பெட்டிகல் உருவாக்கப்பட்டிருக்கும்.

விமான தகவல் பதிவுக் கருவி, விமானம் இயக்கம் குறித்த தகவல்களை விமானக் கருவிகளிலிருந்து பெற்றுப் பதிவுசெய்யும். விமானம் பறக்கும் உயரம், விமானத்தின் வேகம், எஞ்ஜின் சக்தி, விமான ஓட்டி என்னென்ன கருவிகளைப் பயன்படுத்துகிறார் என்ற தகவல்கள் இதில் பதிவாகும்.

காக்பிட் குரல் பதிவுக் கருவியில், விமான ஓட்டியின் குரல் உட்பட காக்பிட்டில் எழுப்பப்படும் சத்தங்கள் பதிவாகும். விபத்திற்குள்ளாகும் விமானத்திற்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க இது மிகவும் முக்கியமானது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil