Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத் திருநங்கை

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராகத் திருநங்கை
, திங்கள், 22 செப்டம்பர் 2014 (17:28 IST)
மூன்றாம் பாலினமான திருநங்கைகள் சமூகத்தின் பல்வேறு தரப்பினராலும் ஒதுக்கப்படும் நிலையில், தமிழகத்திலிருந்து ஒளிபரப்பாகும் லோட்டஸ் டிவி என்ற தொலைக்காட்சியில் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.
 
31 வயதாகும் பத்மினி பிரகாஷ் என்ற இந்தத் திருநங்கை, கடந்த ஒரு மாதமாக இந்தத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றி வருகிறார்.
 
தமிழ்த் தொலைக்காட்சிகளைப் பொறுத்தவரை, திருநங்கைகள் திரையில் வருவது என்பது புதிதல்ல. ஏற்கனவே ரோஸ் என்ற திருநங்கை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் செய்தித் தொலைக்காட்சியில் ஒருவர் தோற்றமளிப்பது மிக அரிதான நிகழ்வாகவே இருக்கிறது.
 
தமிழகத்தின் மேற்கு மாவட்டமான கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்மினி பிரகாஷ், கல்லூரியில் வணிகவியல் துறையில் சேர்ந்து முதலாம் ஆண்டோடு படிப்பை நிறுத்தியவர். இதற்கு முன்பாகப் பல்வேறு வேலைகளைச் செய்து வந்தவர்.
 
'ஊடகங்கள் மூலம் செய்திகள் மட்டும் போய்ச் சேர்வதில்லை. செய்திகளைக் கொண்டு சேர்ப்பவர்களும் மக்களை எட்டுகிறார்கள். ஆகவே தான் ஊடகத் துறையை விரும்பினேன்' என்றார் பத்மினி.
 
தன் நண்பர் ஒருவர் தன் வீட்டிலிருந்த திருநங்கை ஒருவரை ஒதுக்காமல் தாங்களே திருமணம் செய்து வைத்ததைப் பார்த்த லோட்டஸ் டிவியின் இயக்குநர் ஜி.கே.எஸ். செல்வகுமார், தம்முடைய தொலைக்காட்சியிலும் திருநங்கை ஒருவரைப் பணியில் அமர்த்தலாம் என்ற முடிவுக்கு வந்ததாகச் சொல்கிறார்.
 
'கடந்துவந்த பாதை கொடுமையானது'
 
பத்மினி தேர்வு செய்யப்பட்ட பின்னர் அவருக்குப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
 
தினமும் 7 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்தச் செய்தித் தொகுப்புக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் கிடைத்திருக்கின்றன. உள்ளூர் ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் எனத் தற்போது ஊடக வெளிச்சத்தில் திளைக்கிறார் பத்மினி. இருந்தாலும் தான் கடந்து வந்த பாதை மிகக் கொடுமையானது என்கிறார் அவர்.
 
இந்த வலிகளை எல்லாம் மறந்துவிட்டு, வாழ்வில் உயர நினைக்கிறார் பத்மினி. செய்தி வாசிப்பாளராக மட்டுமில்லாமல், செய்தி தவிர்த்த வேறு நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்க விரும்புகிறார் பத்மினி பிரகாஷ்.
 
திருநங்கைகளின் நலனைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பல நல்வாழ்வுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப் பிரிவினருக்கென நல வாரியம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் வழங்கப்படும் உணவுப் பொருள் விநியோக அட்டைகளில் மூன்றாம் பாலினமாக இவர்கள் குறிக்கப்படுகிறார்கள். கல்லூரிகளிலும் தனிப் பிரிவினராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்து உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil