Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமாவளவன்: "இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?"

Webdunia
வெள்ளி, 22 ஏப்ரல் 2022 (14:33 IST)
"இளையராஜாவை மற்றவர்கள் இசைஞானியாக புரிந்து கொண்டிருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களின் சொந்தமாக புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் எங்களில் ஒருவர் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் பாஜக அங்கே கை வைக்கிறது," என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் உருவச் சிலை திறப்பு விழா நேற்று இரவு நடைபெற்றது. விழாவில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பங்கேற்று சிலையைத் திறந்து வைத்தார். பின்னர் அம்பேத்கர் - மோதி இருவரை ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியது குறித்து அவர் பேசினார்.

"அம்பேத்கரையும் மோதியையும் ஒப்பிட முடியுமா? நரேந்திர மோதி சமத்துவத்துக்கான தலைவரா? சகோதரத்துவத்திற்கான தலைவரா? சாதி ஒழிப்புக்கான தலைவரா? பெண்கள் படிக்க வேண்டும், உயர வேண்டும் என்று விரும்புகின்ற தலைவரா? எப்படி அம்பேத்கரை மோதியுடன்‌ ஒப்பிட முடியும்?" என்று திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

"இருவரும் இரு‌ துருவம். ஒட்டவே ஒட்டாது, பொருந்தவே பொருந்தாது. அம்பேத்கருடன் புத்தர், மார்க்ஸ், ஜோதிராவ் புலே, திருவள்ளுவர் உள்ளிட்டோரை ஒப்பிடலாம். இவர்கள் எல்லாம் ஒரே சிந்தனைகளைக் கொண்டு, ஒரே நேர்கோட்டில் பயணித்தவர்கள்,'' என்றார் அவர்.

இளையராஜாவிற்கு என்ன நெருக்கடியோ?

தொடர்ந்து அவர் பேசுகையில், "மோதி அம்பேத்கருடன்‌ ஒப்பிடுபவர் அல்ல என்று நாம் வாதிடுகிறோம். ஆனால், பாவம் இசைஞானி இளையராஜாவிற்கு என்ன நெருக்கடியோ? அவர் அம்பேத்கரைப் படித்திருக்கக்கூடும். ஆனால் இதுவரை எனக்குத் தெரிந்து நாற்பது ஆண்டுகளாக, பொது வாழ்வில் இருக்கிறேன். ஒரே ஒரு நாள் கூட இசைஞானி இளையராஜா அம்பேத்கரின் பெயரை உச்சரித்ததில்லை.


அம்பேத்கர் பிறந்த நாளிலோ, நினைவு நாளிலோ அவருடைய படத்திற்கு மலர் தூவி நான் பார்த்ததில்லை. அம்பேத்கர் என்கிற அரசியலுக்கும் தொடர்பு இருப்பதாக அவர் இதுவரை அவர் காட்டிக் கொண்டதே இல்லை. திடீரென்று அவர்‌ மோதியின் செயலை அம்பேத்கர் உயிருடன் இருந்தால் பாராட்டுவார் என்று சொல்லுவது அதிர்ச்சியாக இருக்கிறது," என்றார் திருமாவளவன்.

தலித் இயக்கங்களை சிதைக்கும் ஆர்எஸ்எஸ

இந்தியாவில் எல்லா தலித் இயக்கங்களையும் ஆர்எஸ்எஸ் சிதறடித்து விட்டது, நீர்த்துப்போகச் செய்துவிட்டது. ஆனால் தமிழ்நாட்டில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சிதைக்க முடியாது. அதற்கான வேலையைத் தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த சமூகத்தைச் சிதைக்க, இந்த சமூகத்திலிருந்தே ஆட்களைத் தேடுவார்கள், ஆட்களை உருவாக்குவார்கள்,'' என்றார் திருமாவளவன்.

"ஆதிதிராவிடர் சமூகத்திற்கு மாற்றாக யாரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துவார்கள். எப்படி வேண்டுமானாலும் சதித் திட்டங்களைக் கூர் தீட்டுவார்கள். அதில் முதல் படிதான் இசைஞானி இளையராஜாவை முன்னுரை எழுத வைத்தது."

இளையராஜாவை மற்றவர்கள் இசைஞானியாக புரிந்து கொண்டிருந்தாலும், இந்த ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களின் சொந்தமாக புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் எங்களில் ஒருவர் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் அங்கே பாஜக கை வைக்கிறது.'' என்றார் திருமாவளவன்.

மோதியை வாழ்த்தட்டும். ஆனால்...

முன்னுரை எழுத எவ்வளவோ அறிவாற்றல் மிகுந்த அரசியல் பிரபலங்கள் இருக்கும் போது ஏன் இசைஞானியைப் பிடித்தார்கள்? அவர் மோதியை வாழ்த்தட்டும், பாராட்டட்டும், மாற்றுக் கருத்தில்லை. தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடட்டும் அது அவருக்கான சுதந்திரம்.

அவர் அந்த கட்சியில் கூட சேரட்டும். அது அவருடைய விருப்பம். ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பியதை மோதி செய்கிறார் என்று சொல்வது ஏற்புடையதல்ல," என்கிறார் திருமாவளவன்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் திரும்பிய சத்குருவிற்கு பிரம்மாண்ட வரவேற்பு! - கோவை விமான நிலையம் முதல் ஈஷா வரை குவிந்த மக்கள்

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments