Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணம் அதிகரிப்பு

இந்தியாவில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணம் அதிகரிப்பு
, வியாழன், 2 ஏப்ரல் 2015 (21:45 IST)
இந்தியாவில் வாகனங்களைப் பயன்படுத்துவோர் செலுத்த வேண்டிய மூன்றாம் நபர் காப்பீட்டுத் தொகை கட்டணத்தை கணிசமாக அதிகரிக்க இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் அனுமதித்துள்ளது.
 

 
இதனால், 1000 சிசிக்கு குறைந்த கார்களைப் பயன்படுத்துவோர் தற்போது செலுத்துவதைவிட 30 சதவீதம் அளவுக்கு அதிக தொகையை காப்பீட்டுக் கட்டணமாகச் செலுத்த வேண்டியிருக்கும். இரு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
 
இது தொடர்பில் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் வெளியிட்டிருக்கும் உத்தரவில், இழப்பீடுகளைச் செலுத்துவதற்கு தற்போதைய ப்ரீமியம் கட்டணங்கள் போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டிருக்கிறது.
 
12,000 கிலோ வரை பொருட்களைச் சுமந்து செல்லும் சரக்கு வாகனங்களுக்கு கட்டண விதிப்பில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. மற்ற சரக்கு வாகனங்களுக்கு 19-20 சதவீதம் வரை காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
இரு சக்கர வாகனங்களைப் பொருத்தவரை 14 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை காப்பீட்டுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
 
விபத்தில் சிக்கிய மூன்றாம் நபருக்கான இழப்பீட்டை நீதிமன்றங்கள் நிர்ணயிப்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இழப்பீடு தர வேண்டியிருக்கிறது. ஆகவே ப்ரீமியம் தொகை அதிகரிப்பது தவிர்க்க முடியாதது என்கிறார் இந்திய அரசின் காப்பீடு நிறுவனமான யுனைட்டட் இந்தியா இன்ஸூரன்ஸின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனராக இருந்த ஜெகனாதன்.
 
1000 சிசி வரையிலான எஞ்சின் திறன் கொண்ட கார்களுக்கு காப்பீட்டுக் கட்டணம், இழப்பீட்டுக் கோரிக்கைகள் குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையிலேயே அதிகரிக்கப்பட்டிருக்கும் என்கிறார் ஜெகன்னாதன்.
 
எந்தப் பிரிவில் இழப்பீடுகள் அதிகம் கேட்கப்படுகின்றனவோ, அந்தப் பிரிவில் ப்ரீமியம் அதிகரிக்கப்படும் என்கிறார் அவர்.
 
சரக்கு வாகனங்களுக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டுக் கட்டணம் அதிகரிக்கப்பட்டிருப்பது சிறிய அளவில் விலைவாசி உயர்வை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil