Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்து, சீக்கியர்கள் உதவியால் கட்டப்படும் மசூதி

Webdunia
செவ்வாய், 1 மே 2018 (17:52 IST)

சமீபத்திய ஆண்டுகளில் நடந்த வன்முறைகளால், இந்திய மதச் சமூகங்கள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கை ஒரு கிராமத்தில் இணக்கத்தை வளர்ப்பதற்கு உதவியுள்ளது.
 

 

 

கொத்தனாராகப் பணியாற்றும் ராஜா கான், பஞ்சாபில் உள்ள ஒரு கிராமத்தில் சிவன் கோயிலை கட்டும் வேலையில் பணியாற்றினார்.

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அவர், ஒரு இந்து கோயிலை கட்டினார். ஆனால், அவர் தொழுகை செய்ய அருகில் எந்த மசூதியும் இல்லை.

''நாங்கள் தொழுகை செய்ய எங்களுக்கு எந்த இடமும் இல்லை'' என்கிறார் 40 வயதான ராஜா கான்.

மசூதி இல்லாத பிரச்சனையை, தனது மூம் கிராமத்தில் வசிக்கும் முஸ்லிம் சமூகத்தினரிடம் கொண்டு சென்றார் ராஜா கான். ஆனால், இதற்காக இரு நிலத்தை வாங்கும் அளவிற்கு அவர்களிடம் வசதி இல்லை.

`எங்களுக்கு கொஞ்சம் நிலங்களைக் கொடுப்பீர்களா?`

இப்பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள், கட்டுமான பணிகள் போன்ற தினக்கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். இங்கு 400 முஸ்லிம்களும், 400 இந்துக்களும் வசிக்கின்றனர். இவர்களுடன் 4,000 சீக்கியர்களும் வசிக்கின்றனர்.

18 மாதங்களில் கோயில் கட்டுமான பணிகள் முடிவடையும் நிலைக்கு வந்தபோது, ராஜா முன்னெப்போதும் நடக்காத ஒன்றைச் செய்தார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில், சிவன் கோயில் நிர்வாகிகளை அணுகிய ராஜா,'' உங்களுக்கு ஏற்கனவே ஒரு பழைய கோயில் இருக்கும் நிலையில், விரைவில் ஒரு புதிய கோயிலும் கட்டி முடிக்கப்பட்டுவிடும். ஆனால், முஸ்லிம்களான நாங்கள் தொழுகை செய்வதற்கு இடமில்லை. நிலம் வாங்குவதற்கு பணமும் இல்லை. உங்கள் நிலத்தில் ஒரு சிறிய பகுதியை எங்களுக்குத் தருவீர்களா?" என கேட்டார்.

ஒரு வாரம் கழித்து ராஜாவுக்குப் பதில் கிடைத்தது. கோயிலுக்கு அருகில் காலியாக உள்ள தங்களது 900 சதுர அடி நிலத்தை வழங்கக் கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.

'' நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எனது நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் கிடைக்கவில்லை. '' என்கிறார் ராஜா.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Image caption
ராஜா கான் (வலது பக்கம் இருப்பவர்)

''இது மிகவும் உண்மையான தேவை. நாங்கள் மகிழ்ச்சியும், துயரத்தையும் ஒன்றாக பகிர்ந்துகொள்ளும் போது, முஸ்லிம்களுக்கு மசூதி இல்லாதது நியாயமற்றது'' என்றார் கோயில் நிர்வாக குழு உறுப்பினராக உள்ள புருஷோத்தம லால்.

இரண்டு மாதங்களில், ராஜா மற்றும் சில வேறு கொத்தனார்களும், தொழிலாளர்களும் தாங்கள் தொழுகைச் செய்ய தேவையான கட்டடத்தை மகிழ்ச்சியுடன் கட்டினர்.

தங்கள் குருத்துவாராவை ஒட்டியுள்ள இந்த மசூதியின் கட்டுமானத்திற்கு சீக்கிய சமுகத்தினர் நிதியளிக்கின்றனர். சிறுபான்மையினர் தாங்கள் அடிக்கடி தாக்கப்படுவதாக கூறப்படும் ஒரு நாட்டில், மூன்று சமூகத்தினர் இடையே மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் உதாரனமாக இந்த செயல் உள்ளது.

வரம்புகள்

தீவிர வலதுசாரி இந்து தேசியவாத அரசாக தாங்கள் கருதும் தற்போதைய மத்திய அரசை, மனித உரிமைகள் குழுக்கள் சமீப காலங்களில் விமர்சித்து வருகின்றனர்.

இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே அச்சம் மற்றும் அவநம்பிக்கையை இந்த அரசு உருவாக்கியுள்ளது என பலர் கூறுகின்றனர்.

எனினும், மூம் கிராமத்தில் மூன்று சமூகத்தினரும் அமைதியான சூழலில் வாழ்ந்து வருவது தெரிகிறது. இவர்களுக்குள் எந்த பதற்றமும் இல்லை. இந்த மூன்று சமூகத்தை சேர்ந்த மக்களும், சுதந்திரமாக எந்த வழிபாட்டுத் தளத்திற்கும் சென்றுவரலாம்.

பெரும்பாலான இந்துக்கள் குருத்துவாராவுக்கு செல்கின்றனர், அவர்களில் சிலர் சீக்கியர்கள் அணியும் டர்பன்களை அணிகின்றனர். அவர்கள் மற்ற சமுதாயத்தினரின் விழாக்களிலும், சடங்குகளிலும் கலந்துகொள்ள அவர்களது வீடுகளுக்கும் செல்கின்றனர்.

 
 
 
 
 
 

பெரும்பாலான இந்து விழாக்கள், சீக்கிய மண்டபத்தில் நடக்கும் என்கிறார் குருத்துவாரா மதகுரு கியானி சுர்ஜீத் சிங்.

''மக்கள் இந்த இடத்தை குருத்துவாராவாக மட்டும் பார்க்கவில்லை. தங்கள் சமூக விழாக்களின் போது ஒன்று கூடும் இடமாகவும் பார்க்கின்றனர்'' எனவும் அவர் கூறுகிறார்.

கோவில் விவகாரங்களில் ஆர்வமாக ஈடுபடும் ஆசிரியர் பாரத் ராம்,'' நல்லவேளையாக சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கும் அரசியல்வாதிகள் எங்களிடையே இல்லை'' என்கிறார்.

''முந்தைய காலத்தில் இருந்தே இந்த கிராம மக்களிடம் சகோதரத்துவம் இருந்து வருகிறது. இதனாலே, மசூதிக்கு நிலம் கொடுக்க விரைவாக முடிவு செய்தோம்'' எனவும் அவர் கூறுகிறார்.

அரசியல்வாதிகள் இல்லாவிட்டால் இந்திய பாகிஸ்தானிய மக்களிடேயே பகைமை இருந்திருக்காது என்கிறார் அவர்.

முஸ்லிம்களுக்கு நிலம் மற்றும் நன்கொடை வழங்கப்படுவதை யாரும் வெறுக்கவில்லை. இந்த மசூதி முஸ்லிம்களுக்கு மட்டுமானது அல்ல என பல இந்து மற்றும் சீக்கியர்கள் நம்புகின்றனர். '' இது கிராம மக்களுக்கானது'' என அவர்கள் கூறுகிறார்கள்.

இன்னும், இந்த ஒருங்கிணைப்பு வரம்புகளைக் கொண்டுள்ளது. தங்களது மகன்களும் மகள்களும் மற்ற சமூகத்தினரை திருமணம் செய்துகொள்வதை விரும்புவீர்களா என கேட்டபோது, அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
Image caption
ராஜா கான் உடன் பரத் சர்மா

``பாருங்க... சகோதரத்துவம் என்பது ஒரு விஷயம். ஆனா சீக்கியர்கள் மற்றும் முஸ்லிம்கள் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள்`` என்கிறார் கிராம பஞ்சாயத்து உறுப்பினர் சூத் சிங். '' இது போன்ற (வேற்று மதத்தவரைத் திருமணம் செய்வது) விஷயங்களை எங்கள் கிராமத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது'' எனவும் அவர் கூறுகிறார்.

இந்து கோயிலில் அலுவலக பொறுப்பில் உள்ளவரும், ஆசிரியருமான பரத் சர்மா,'' இது கடந்த காலத்தில் நடந்தது இல்லை. எதிர்காலத்திலும் நடக்காது'' என ஒப்புக்கொள்கிறார்.

மதப் பதற்றங்கள் அதிகம் உள்ள மேற்கு வங்கம் போன்ற இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட, பஞ்சாபில் உள்ள இந்த கிராமம் சொர்க்கத்தைப் போல உள்ளது.

''குருத்துவாரா, மசூதி, கோயில் என கடவுள் எல்லா இடங்களிலும் இருக்கிறார் '' என பரத் சர்மா கூறுகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments