Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனாவின் `கட்டாய' பிரம்மசாரிகள்!

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (19:12 IST)
வெளியே சிரிப்பு, உள்ளே வெறுப்பு
 
தனிமையிலே இனிமை காண முடியுமா?
 
என்பது தமிழ் திரைப்பட பாடல். உலகிலுள்ள எல்லாமே இரண்டு இரண்டாக வாழும்போது, இருக்கும் போது, நாம் அவ்வாறு இல்லாமல் இருந்துவிட முடியுமா? என்பதை அழுத்தமாக சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.
 
ஆனால், சீனாவின் ஆன்குய் மாகாணத்தில் லாவ்யா கிராமத்தில், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பல ஆண்கள் தங்களுடைய வாழ்க்கையை பிரம்மசாரிகளாகவே தொடரும் நிலை இன்றைய சீனாவில் கூர்மையாகி வரும் சமூகச் சிக்கல்களை எடுத்துகாட்டுகிறது.
 
என்னதான் பிரச்சனை?
 
சியோங் ஜிகன், உடனடியாக தன்னுடைய கிராமத்தின் சாலை வசதியை குறை சொல்லத் தொடங்கிவிடுகிறார்.
 
”இந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து வசதி மிகவும் மோசமாக உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
 
ஒரு குன்றின் மேற்பகுதியில் இருக்கின்ற அவருடைய வீட்டிற்கு அருகில் கோழிப் பண்ணையும், வரிசையாக நடப்பட்டுள்ள சோளமும் காணப்படுகின்றன.
 
“வெற்றுக் கிளை”:
 
சீனாவில் ‘வெற்றுக் கிளை‘ என்று அழைக்கப்படும் 43 வயதான சியோங், தனியாக வாழும் பிரம்மசாரி, திருமணமாகாத ஆடவர்.
 
வீடு இருந்தால், குடும்ப மரபை தொடர்வதற்காக தன்னுடைய 20 ஆம் வயதுகளிலேயே திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு சீனாவில் உள்ளது. மனைவியை கண்டறியாத ஆண்களுக்கு கொடுக்கப்படுகின்ற அடையாளப் பட்டம்தான் “வெற்றுக் கிளை”.
 
சீனாவின் கிழக்கு பகுதியில் அன்குய் மாகாணத்திலுள்ள உள்புற கிராமப் பகுதியான லாவ்யா-வில் சியோங் ஜிகன் வாழ்ந்து வருகிறார்.
 
அசுத்தமான சாலை வழியாக ஒரு மணிநேரம் மெதுவாக வாகனத்தில் சென்றால், அந்த சாலையானது நடந்து செல்ல வேண்டிய அசுத்தமான தடமாக மாறி செல்வதுதான், இந்தக் கிராமத்தை உடனடியாக சென்றடைய இருக்கும் ஒரே வழி.
 

தூரம் அதிகமில்லை...ஆனால், யாரும் வருவதில்லை.
 
மூங்கில் மற்றும் மரங்களால் சூழப்பட்ட இடத்தில் இருக்கும் ஏழு வீடுகளில் ஒன்று இவருடையதாகும். அங்கு சிறந்த இயற்கை காட்சியை காணலாம்.
 
`பழைய வாத்து':
 
அவருடைய கிராமத்தின் பெயர் லாவ்யா. சீன மொழியில் லாவ்யா என்றால் “பழைய வாத்து” என்று பொருள்படுகிறது. பிரம்மசாரியாக வாழ்ந்து வரும் ஆடவர்களை “பழைய வாத்து“ என்ற சொல் அடையாளப்படுத்தலாம்.
 
இந்த லாவ்யா கிராமம் உள்ளூரில் ‘பிரம்மசாரி கிரமம்‘ என்று அறியப்படுகிறது.
 
2014 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 1600 பேர் வாழ்கின்ற அந்த கிராமத்தில் 30 முதல் 55 வயது வரையானோரில் 112 பேர் திருமணமாகாமல் பிரம்மசாரி வாழ்க்கை வாழ்வதாக பதிவு செய்துள்ளனர். இது வழக்கத்திற்கு மாறான மிக உயர்ந்த பதிவாகும்.
 
இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்ற 100 –க்கும் அதிகமான உள்ளூர் ஆடவர்களை அறிந்து வைத்திருப்பதாக சியோங் தெரிவிக்கிறார்.
 
“நான் எனக்கொரு மனைவியை தேடிகொள்ள முடியவில்லை. பெண்கள் வேலைக்காக இடம்பெயர்ந்து வேறு எங்காவது சென்றுவிடுகிறார்கள். பின்னர் நான் திருமணம் செய்ய யாரையாவது எவ்வாறு கண்டுபிடிப்பது?” என்று அவர் ஆதங்கப்படுகிறார்.
 
உடனடியாக அவரது குற்றச்சாட்டு சாலை வசதியை பற்றி அமைகிறது.
 
“போக்குவரத்து வசதி இங்கு மிகவும் மோசம். மழை பெய்யும்போது, நாங்கள் நதியை தாண்டி செல்ல முடியாது. எனவே பெண்கள் இங்கு வாழ விரும்புவதில்லை” என்கிறார்.
 
அவர் இருக்கின்ற அந்த கிராமமே வெகுதொலைவு தான். அங்கு ஏற்கெனவே இருக்கின்ற சூழல்களும் சியோங் ஜிகனுக்கு பாதகமாகவே உள்ளன.
 
இந்த கிராமத்தில் ஆண்கள் பலர் பிரம்மசாரியாக வாழ்வதற்கான ஆதார அடிப்படையை நோக்கினால், பல்வேறு காரணங்களை சொல்லலாம். அதில் ஒன்று சீனாவில் காணப்படும் ஆண்-பெண் சமசீரின்மை.
 
சீனாவில் பெண்களை விட ஆண்களே அதிகம். 100 பெண்களுக்கு 115 ஆண்கள் இப்போது உள்ளனர். வரலாற்றுப்பூர்வமாகவே பெண்களுக்கு மேலாக ஆண்களுக்கு அதிக ஆதரவு அளிக்கும் கலாசாரம் சீனாவுடையது.
 
இந்நிலையில், கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த “ஒரு குழந்தை கொள்கை” திட்டமானது, கட்டாய கருச்சிதைவு மற்றும் 1980 ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த ஆண்களை அதிக எண்ணிக்கையில் உருவாக்கிவிட்டது.
 
அதன் விளைவால்தான் 21 ஆம் நூற்றாண்டில் சீனாவிலுள்ள ஆண்களுக்கு திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பதற்கு நெருக்கடி ஏற்படலாயிற்று.
 
பருமனும் அல்லாமல், ஒல்லியும் அல்லாமல்:
 
தங்களுடைய குழந்தைகளுக்கு துணைகளை உருவாக்கி கொடுப்பதில் பெற்றோர் பங்காற்றும் நிலைமை இந்த கிராமத்தில் இன்னும் உள்ளது.
 
இணைகளை ஏற்பாடு செய்து தரும் இடைத்தரகர்களும் இங்கு பொதுவாகக் காணப்படுகின்றனர். இடைத்தரகர்களையும் சியோங் மணப்பெண் பார்க்க பயன்படுத்திப் பார்த்து விட்டார்.
 
“இடைத்தரகர்கள் மூலம் இந்த கிராமத்தை சில பெண்கள் வந்து பார்த்தார்கள். இங்குள்ள மோசமான போக்குவரத்து வசதியை பார்த்து வெறுத்துப் போனார்கள். வேண்டவே வேண்டாம் என்று கிளம்பிவிட்டார்கள்” என்கிறார் அவர்.
 
காதலித்தது உண்டா?:
 
அவருடைய அலங்கரிக்கப்பட்ட படுக்கை அறைக்கு அருகில் நின்ற கொண்டு, அவர் எப்போதாவது காதல் செய்திருக்கிறாரா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
 
“முன்பு காதலித்திருக்கிறேன். ஆனால் அது சரியாக வரவில்லை. என்னுடைய கிராமம் அவளுக்கு பிடிக்கவில்லை, குறிப்பாக சாலைப் போக்குவரத்தை பற்றி குறை கூறினார்” என்று சியோங் தெரிவித்தார்.
 

உறவுகளை விட்டுச் செல்ல மனமில்லை
 
இடைத்தரகர் வழியாக முயற்சி தொடர்ந்தது. அந்த இடைத்தரகர் கொண்டு வந்த பெண்ணை பற்றி சியோங் விவரித்தார்.
 
“அவர் என்னைவிட உயரமானவராக இருந்தார். ஆனால் திறந்த மனமுடையவராக இல்லை” என்ற பதில் வந்தது.
 
சீனாவின் பிற கிராமங்களில் நடப்பதைபோலவே அங்குள்ள பெண்கள் அந்த கிராமத்தை விட்டு நகரங்களில் வேலை தேடிக் கொள்கிறார்கள்.
 
சியோங் வாழ்கின்ற அன்குய் மாகாணத்தில் உள்ளவர்களை, ஷாங்காங் மாநகரம் மிகவும் கவர்ச்சிமிக்கதாக அனைவரையும் ஈர்க்கிறது. அங்கு நல்ல ஊதியம் கிடைக்கிறது.
 
அவர்களுக்கு கணவரும் அங்கேயே கிடைத்து விடுகிறார்கள். சிலர் திரும்பி வருகின்றனர். ஆனால் தனியாக இல்லாமல், ஜோடியாகத் திரும்பி வருகிறார்கள்.
 
தங்கியிருக்கும் ஆண்களும் பெண்களும்:
 
ஆண்களும் இந்த கிராமத்தை விட்டு இடம்பெயர்ந்து செல்கிறார்கள். ஆனால் பொதுவாக ஆண்கள் செல்வது வேலைக்கு மட்டுமே.
 
சிலர் சீன பாரம்பரிய முறைப்படியான உடன்பிறப்பு மற்றும் உறவினர் முறைப்படி வயதான பெற்றோரை கவனித்து கொள்வதற்காக இந்த கிராமத்திலேயே தங்கிவிடுகின்றனர்.
 
தன்னுடைய மாமாவை பராமரித்துக் கொள்ள சியோங் ஜிகன் இந்த கிராமத்தில் தங்குவதற்கு முடிவெடுத்திருக்கிறார்.
 
“நான் போய்விட்டால் மாமாவுக்கு உணவு கிடைக்காது. அவர் செவிலியர் இல்லத்திற்கும் போக முடியாது” என்று சியோங் குறிப்பிடுகிறார்.
 
தங்களை வளர்ந்த மூத்தவர்களை பராமரிக்க வேண்டிய கடமை இளம் தலைமுறையினருக்கு இன்னும் எஞ்சியிருப்பதை சீனாவின் குடும்பங்களில் முக்கிய பகுதியாக காண முடிகிறது.
 
மிகவும் வலிமையான பாரம்பரிய குடும்பங்களை கட்டியமைப்பதற்கு குறுக்கே எதுவும் வரக் கூடாது என்று சீன அதிபர் ஷி ஜீன்பிங் பேசியிருக்கிறார்.
 
குழந்தைகள் பெற்றோரை சந்திக்காவிட்டால் தண்டனைக்கு ஆளாவார்கள் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதிய விதிமுறைகள் ஷாங்காய் மாநகரில் வந்துள்ளன.
 
சில பெண்களும் இந்த பிரம்மசாரி கிராமத்தில் தங்கிவிடுகின்றனர். சியோங்கின் பக்கத்தில் வாழ்ந்து வரும் வாங் கைய்ஃபெங் இன்னும் அங்கு தான் வாழ்ந்து வருகிறார்.
 
39 வயதாகும் அவர், கணவர் மற்றும் இரு குழந்தைகளோடு வாழ்ந்து வருகிறார். “சொந்த ஊர்தான் மிகவும் நல்லது. நான் இங்கு இருக்கவே விரும்புகிறேன்” என்கிறார்.
 
இங்கிருக்கும் அவருடைய இரு குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்று அவரிடம் கேட்டோம்.
 
குழந்தைகள் ஒரு மணிநேரத்திற்கு அதிகமாக நடந்து பள்ளிக்கூடத்திற்கு செல்கிறார்கள். அவர்கள் சற்று வயதுக்கு வந்தவுடன் இந்த கிராமத்தை விட்டு போவது நல்லதாக இருக்குமா?
 
ஆனால், அந்த குழந்தைகள் அங்கேயே தான் இருப்பார்கள் என்று வாங் நம்புகிறார்.
 
அவருடைய 14 வயது மகளிடம் சற்றே வேறுபட்ட மனநிலை காணப்படுகிறது. ஃபுஜிங், அவருடைய தந்தையை போல மருத்துவராக உருவாக வேண்டும் என்று எண்ணுகிறார்.
 
எனவே, “வெளி உலகில்” தான் அதற்கு சாத்தியம் அதிகம் என்று நினைக்கிறார். வெளி உலகம் என்பதும் வெகு தொலைவில் அல்ல. அதுவும் அவர்களின் சொந்த ஊரே.
 
அவர்கள் செயற்கைகோள் தொலைக்காட்சி வைத்திருக்கின்றனர். சியோங் மோட்டார் சைக்கிள் வைத்திருக்கிறார். சிறிய நகருக்கான முக்கிய தெரு வெகுதொலைவில் இல்லை.
 
லாவ்யா கிராமம் மிகவும் தொலைவில் உள்ளது போலவும், சில வேளைகளில் துண்டிக்கப்பட்டு போயிருப்பது போலவும் உணரப்படுகிறது.
 
மூன்றாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட சியோங்கின் வீட்டை பார்க்க வரும் பெண்கள் அவரது மனைவியாகி அங்கு தங்குவதை கருத்தில் கொள்ளக் கூடிய அளவில் அந்த வீடு போதுமானதாக இல்லை.
 
இது மட்டுமே ஒரேயொரு பிரம்மச்சாரி நகரம் என்பது அல்ல.
 
வறுமையிலிருந்து தப்புவது, நிலத்தோடு ஒன்றி வாழ்வது, பாலின விகிதாசார சமத்துவமின்மை, வயதான உறவினருக்கு ஆற்ற வேண்டிய கடமை ஆகியவற்றால், கிராமப்புற சீனாவின் வாழ்க்கையில் இருக்கும் குழப்பத்தை இந்த கிராமம் காட்டுகிறது என்றே சொல்ல வேண்டும்.
 
"மனமிருந்தால் வழி இல்லாமல் போகுமா - வெறும் மந்திரத்தால் மாங்காய் வீழ்ந்திடுமா?”
 
என்று கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் சீனர்களின் வாழ்க்கைக்கும் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை.. அரசாணை வெளியீடு!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அறிவிப்பு.. காங்கிரஸ் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments