Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மீண்டும் அடிக்கல் நாட்டப்பட்டது

Webdunia
திங்கள், 11 ஜனவரி 2021 (13:49 IST)
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீண்டும் அமைப்பதற்காக அதே இடத்தில் இன்று (ஜனவரி 11) அதிகாலை அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக உப வேந்தரின் அனுமதிக்கு அமைய, இந்த அடிக்கல் நாட்டப்பட்டதாக பல்கலைக்கழக மாணவர்கள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவுதூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ள போதிலும், அங்கு முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கு மத்திய அரசாங்கமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ அனுமதி வழங்கியுள்ளமை தொடர்பிலான உறுதியாக தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த 8ம் தேதி இரவு, பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமளவிலானோர் அங்கு ஒன்று திரண்டிருந்தனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுதூபி, மாவீரர் நினைவுதூபி மற்றும் பொங்குத் தமிழ் நினைவு தூபி ஆகியவற்றை உடைக்க அன்று நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக மாவீரர் நினைவுதூபி மற்றும் பொங்குத்தமிழ் நினைவுதூபி ஆகியன பாதுகாக்கப்பட்டன.

இந்த நிலையில், பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு போராட்டம் சர்வதேச அளவில் வலுப் பெற்றது.

9ம் தேதி முதல் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் உணவு தவிர்ப்பு போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டது.

இந்த போராட்டம் நேற்றைய தினம் வலுப் பெற்ற நிலையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இவ்வாறான போராட்டங்களுக்கு மத்தியிலேயே, இன்று மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை அமைப்பதற்கான அடிக்கலை நாட்டுவதற்கு பல்கலைக்கழக உப வேந்தர் அனுமதி வழங்கியுள்ளார்.

தூபியை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பின்னணியில், உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

எவ்வாறாயினும், தாம் திட்டமிட்ட வகையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் முழு கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தமிழ் அரசியல்வாதிகள் பிபிசி தமிழுக்கு தெரிவித்தனர்.

நினைவுதூபி எதற்காக அமைக்கப்பட்டது?

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் எனப் பிரகடனப்படுத்தி நினைவு தூபி சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட பொங்கு தமிழ் பிரகடனத் தூபியைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.

2001ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் திகதி தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என பிரகடனப்படுத்தி சர்வதேச சமூகத்தின் கவனத்தை தமிழர் தேசத்தின் பக்கம் திரும்பிப் பார்க்கும் வகையில் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடத்தப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பொங்குதமிழ் பிரகடன நினைவுப் பலகை அமைக்கப்பட்டிருந்தது.

அந்த பிரகடனத்தை தூபியாகப் புனரமைக்கும் பணியை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.

அவ்வாறு மாணவர் ஒன்றியத்தினால் புனரமைக்கப்பட்ட தூபியே 2018ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. அந்த நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர். இதேபோல அங்கு போரில் உயிரிழந்த தமிழ் போராளிகள், மாணவர்களின் நினைவாக மாவீரர் நினைவு தூபியும் அமைக்கப்பட்டது.

இலங்கை போரின் போது உயிரிழக்க நேர்ந்த மக்களின் அடையாளமாக அந்த நினைவுதூபிகள் விளங்கி வந்த நிலையில், அவற்றை அகற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆளுநர் வெளியேற்றத்திற்கு இதுதான் காரணமா? ஓபிஎஸ் கூறிய வித்தியாசமான தகவல்..!

இன்று ஒரே நாளில் 1,258 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட மறுப்பு.. சிறையில் அடைக்கப்பட்ட பிரசாந்த் கிஷோர்..!

கர்நாடகா, குஜராத்தை அடுத்து சென்னையிலும் HMPV வைரஸ்.. 2 குழந்தைகளுக்கு பாதிப்பு..!

ஞானசேகரனின் சொத்து பட்டியல் வேண்டும்: பத்திர பதிவுத்துறைக்கு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments