Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கர்நாடக அரசியலில் தமிழர்களின் செல்வாக்கு பூஜ்யம்': காரணம் என்ன?

Webdunia
வியாழன், 10 மே 2018 (14:04 IST)
கர்நாடக மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக இருந்தாலும், அரசியல் செல்வாக்கைப் பொறுத்தவரை பூஜ்யமாகவே இருக்கிறது. காரணம் என்ன?


கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு வந்திறங்கும் ஒரு தமிழர், தான் வேறு மொழியைப் பேசும் மாநிலத்தில் இருப்பதான உணர்வையே பெறமாட்டார். சுமார் 21 சதவீதம் பேர் இந்நகரில் தமிழர்கள். ஆனால், இந்த மாவட்டத்தில் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் இருந்து தேர்வுசெய்யப்பட்ட ஒருவர்கூட தமிழர் கிடையாது. இங்கு மட்டுமல்ல, கோலார் தங்க வயல், கொள்ளேகால், பத்ராவதி, ஷிமோகா, மைசூர், குடகு போன்ற தமிழர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளிலும் சட்டமன்ற உறுப்பினர்களில் யாரும் தமிழர்கள் அல்லர்.

"இதற்குக் காரணம், தமிழர்கள் ஒருபோதும் அரசியல் சக்தியாகத் திரளவில்லை. அவர்கள் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினார்களே தவிர, அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை" என்கிறார் பெங்களூரில் வசிக்கும் அனைத்திந்திய தமிழ்ச் சங்க அமைப்பின் தலைவரான மீனாட்சி சுந்தரம்.

10ஆம் நூற்றாண்டிலிருந்தே வேலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் குடியேறிவந்தனர். தற்போது கர்நாடக மாநிலத்தில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 லட்சத்தை எட்டும் என்கிறார்கள் இங்குள்ள தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். கர்நாடக மாநிலம் 1956ல் உருவாக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. தொடர்ச்சியாக இங்கு வேட்பாளர்களை நிறுத்திவந்திருக்கிறது. இருந்தபோதும் கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்கள் ஒருபோதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்ததில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் காந்தி நகர் எம்எல்ஏவாக இருநத் முனியப்பாவும் காங்கிரஸ் ஆட்சியில் தங்கவயலைச் சேர்ந்த பெருமாளும் குறிப்பிடத்தக்கவர்கள். இவர் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருந்தார். 1970களில் தி.மு.க. இரண்டாக உடைந்தது, காவிரி விவகாரம் பெரிதாக உருவெடுக்க ஆரம்பித்தது ஆகியவற்றால் தமிழர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவது குறைந்தது. 1991ல் நடந்த காவிரி தொடர்பான கலவரத்திற்குப் பிறகு பெரிய கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்தன.



இருந்தபோதும் பல தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் வெற்றி - தோல்வியை நிர்ணயிப்பதாகவே இருக்கின்றன. பெங்களூரில் உள்ள 28 தொகுதிகளில் 23-ல் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் தமிழர்கள்தான் இருக்கிறார்கள். இருந்தபோதும் கடந்த பல சட்டமன்றத் தேர்தல்களாகவே பெங்களூரில் எந்தக் கட்சியும் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தவில்லை. "பிரசாரத்தின்போது மட்டும் தமிழர் வசிக்கும் பகுதிகளில் தமிழில் பிரசாரம் செய்வார்கள் அவ்வளவுதான்" என்கிறார் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளர் அமுத பாண்டியன்.

இத்தனைக்கும் காவிரி போன்ற உணர்ச்சிமயமான பிரச்சனைகளில் கர்நாடகத்தையே ஆதரிக்கின்றனர். "இது அரசியல்மட்டத்தில் பேசித்தீர்க்க வேண்டிய பிரச்சனை. ஆனால், இந்த விவகாரம் அரசியலாக்கப்பட்டுவிட்டதால் இங்கு உள்ள மக்களும் இது தொடர்பாக ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்கள், எங்கு வசிக்கிறோமோ அதற்கு ஆதரவான நிலைப்பாட்டைத்தானே எடுக்க முடியும்?" என்கிறார் அமுத பாண்டியன்.

ஒவ்வொரு தேர்தல் துவங்குவதற்கும் முன்பாக பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனக் கோருவது வழக்கம். ஆனால் அதற்கு ஒருபோதும் பலன் இருந்ததில்லை. ஆனால், இந்த முறை காங்கிரஸ் பெங்களூர் சி.வி. ராமன் நகர் தொகுதியில் தமிழரான சம்பத்ராஜை நிறுத்தியிருக்கிறது. அதேபோல, மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் கோலார் தங்க வயல் தொகுதியில் தமிழரான பக்தவத்சலம் நிறுத்தப்பட்டிருக்கிறார்.



அ.தி.மு.கவும் மூன்று இடங்களில் தமிழர்களை நிறுத்தியிருக்கிறது. இந்தியக் குடியரசுக் கட்சி ஒருவரை நிறுத்தியிருக்கிறது. "தமிழர்களை நிறுத்துவது அரசியல் ரீதியாக சரியாக வராது என இங்கிருக்கும் அரசியல் கட்சிகள் நினைக்கின்றன. தவிர, அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பிரசாரத்தில் இங்குள்ள மக்களின் பிரச்சனைகளைப் பெரிதாகப் பேசுவதில்லை" என்கிறார் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான தாமோதரன்.

காவிரி விவகாரத்தில் தமிழர்கள் கர்நாடக அரசுக்கு ஆதரவாக இருந்தாலும் இங்கிருக்கும் கன்னட அமைப்புகள் தமிழர்களை விரோதிகளாகவே பார்க்கும் போக்கு தொடர்வதாகவும் அதனாலேயே தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்த கட்சிகள் தயங்குவதாகவும் கூறுகிறார் தாமோதரன்.

பா.ஜ.கவின் சார்பில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டதால் கடந்த தேர்தலில் தமிழர்கள் பெருவாரியாக பா.ஜ.கவுக்கு வாக்களித்தனர். ஆனால், இந்த முறை பா.ஜ.கவின் சார்பில் தமிழர்கள் யாரும் வேட்பாளர்களாக நிறுத்தப்படாததால், தமிழர்கள் பெருமளவில் காங்கிரசிற்கோ, ம.ஜ.தவுக்கோ வாக்களிக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

சட்டமன்றத் தேர்தல்களில் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டாலும் மாநகராட்சித் தேர்தலில் தமிழர்கள் கூடுதல் எண்ணிக்கையில் நிறுத்தப்படுகிறார்கள். தற்போது காங்கிரசின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் சம்பத் ராஜ், உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று பெங்களூரின் மேயராக இருப்பவர்தான். தற்போது சி.வி. ராமன் நகர் தொகுதியில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் சம்பத்ராஜ் தான் ஒரு தமிழர் என்பதை பிரசாரத்தில் முன்வைப்பதில்லை. "அது தேவையில்லாமல் மொழி உணர்வுகளைக் கிளறும்" என்கிறார் சம்பத்ராஜ். தமிழரா, கன்னடரா என்பது முக்கியமில்லை; மக்களுக்காக வேலை பார்க்கிறோமா என்பதுதான் முக்கியம் என்கிறார் அவர். ஆனால், தமிழர்களின் வாக்குகள் தனக்கு முழுமையாகக் கிடைக்குமென நம்புகிறார் அவர்.

காவிரி போன்ற பிரச்சனைகளின்போது தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகச் சொல்லப்படும் அமைப்புகள் தேர்தலில் போட்டியிடும்போது அவற்றுக்கு வெற்றி கிடைப்பதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. குறிப்பாக இம்மாதிரி போராட்டங்களில் முன்னணியில் உள்ள வாட்டாள் நாகராஜ், தொடர்ச்சியாக சட்டமன்றத் தேர்தலில் தோல்வியையே சந்தித்துவருகிறார். இந்த முறையும் சாம்ராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் அவர், தமிழர் வசிக்கும் பகுதிகளில் தமிழில் பேசியே வாக்குச் சேகரித்து வருகிறார்.

இந்தத் தேர்தலில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஓரிரு தமிழர்கள் வெற்றி பெறுவது தமிழர்களுக்கென இருக்கும் பிரத்யேகமாக உள்ள பிரச்சனைகளை - குறிப்பாக பள்ளிக்கூடங்களில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவது, பாடப் புத்தகங்கள் கிடைக்காதது - தீர்க்க உதவுமென நம்புகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments