Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'சீனாவுடன் தைவான் இணைக்கப்படும்'' - பதற்றத்தைக் கூட்டும் ஷி ஜின்பிங்

Webdunia
சனி, 9 அக்டோபர் 2021 (23:36 IST)
சீனா மற்றும் தைவான் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் தைவான் - சீனா மறு இணைப்பு நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
 
இந்த மறு இணைப்பு அமைதியாக சாத்தியப்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள ஜின்பிங், பிரிவினைவாதத்தை எதிர்க்கும் ''பெருமைமிகு பாரம்பரியத்தை'' சீன மக்கள் கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
 
இதற்கு பதில் அளித்துள்ள தைவான் அரசு தங்களது எதிர்காலம் நாட்டு மக்களின் கையில்தான் உள்ளது என்று கூறுகிறது.
 
தைவான் இறையாண்மை மிக்க தனி நாடாக தன்னைக் கருதுகிறது. ஆனால் தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற பிராந்தியமாக சீனா தைவானைப் பார்க்கிறது.
 
இணைப்புக்காக பலப்பிரயோகம் செய்யும் சாத்தியக்கூறுகளையும் சீனா மறுக்கவில்லை .
 
சமீப நாட்களில் தைவானின் வான் பாதுகாப்பு மண்டலத்தில் சீனாவின் போர் விமானங்கள் அதிக எண்ணிக்கையில் நுழைந்துள்ளதால் தைவான் மற்றும் சீனா இடையே உரசல்கள் அதிகரித்துள்ள சூழலில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார் ஷி ஜின்பிங்.
 
ஞாயிறன்று தைவான் தேசிய தினம் அனுசரிக்கப்படவுள்ள நிலையில் தைவான் அதிபருக்கு சீனாவின் எச்சரிக்கையாகவே இந்த போர் விமானங்கள் தைவான் வான் பாதுகாப்பு எல்லைக்குள் நுழைந்தன என்று சில பகுப்பாய்வாளர்கள் பார்க்கிறார்கள்.
 
சீனா மீண்டும் சோஷியலிசத்தை நோக்கித் திரும்புவதாக தோன்றுவது ஏன்?
ஜாக் மா போன்ற தொழிலதிபர்களுக்கு பாடம் புகட்ட விரும்பும் சீனா: காரணம் என்ன?
1949ஆம் ஆண்டு சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு தைவான் சீனாவிடமிருந்து பிரிந்தது. தைவான், ஒரு சுயாதீன நாடு என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் முயற்சிகளை நோக்கி அந்நாடு நகர்வது சீனாவுக்கு ஒரு பெரும் கவலையாகவே உள்ளது என்றும் அதன் அதிபர் சார் இங்வென் அது நோக்கிய எந்த நடவடிக்கை எடுப்பதையும் சீனா தடுக்கிறது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனாவுடனான பதற்றநிலை அதிகரித்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
 
தைவானின் பாதுகாக்கப்பட்ட வான் மண்டலத்தில் சீன போர் விமானங்கள் சமீபத்தில் பெரும் எண்ணைக்கையில் நுழைந்தன.
 
தைவானின் பாதுகாக்கப்பட்ட வான் மண்டலத்தில் சீன போர் விமானங்கள் சமீபத்தில் பெரும் எண்ணைக்கையில் நுழைந்தன.
 
தைவானை முறைப்படி சுதந்திர நாடாக அறிவிக்கும் எந்த எந்த ஒரு முயற்சியும் நசுக்கப்படும் என்று கடந்த ஜூலை மாதம் ஷி ஜின்பிங் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது அமைதியாக மறு இணைப்பு நடக்கும் என்று கூறியுள்ளார்.
 
சீனாவின் கடைசி முடியாட்சி 1901ஆம் ஆண்டு அகற்றப்பட்டதன் 110வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் சீனா மற்றும் தைவான் மக்களின் ஒட்டுமொத்த நன்மையையும் கருத்தில் கொண்டு அமைதியான முறையில் இணைப்பு நடத்தப்பட வேண்டும் என்று ஜின்பிங் பேசியுள்ளார்.
 
தேசிய இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை பாதுகாப்பதில் சீனாவுக்கு இருக்கும் வல்லமை மற்றும் உறுதி ஆகியவற்றை யாரும் குறைத்து மதிப்பிட கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
 
"தாய் நாட்டுடன் முழுமையான மறு இணைப்பு எனும் வரலாற்று நடவடிக்கை நிச்சயம் நிறைவேற்றப்பட வேண்டும்; அது நிச்சயம் நிறைவேறும்" என்று ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
 
 
சீனாவில் வணிக நிறுவனங்கள் மீதான நடவடிக்கை நீண்டகாலம் தொடரும்
ஹாங்காங்கில் அமலில் இருப்பதைப் போல ''ஒரு நாடு, இரு அமைப்புகள்'' எனும் கோட்பாட்டின் கீழ் சீனா மற்றும் தைவான் இடையான ஒருங்கிணைப்பு நடக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகவும் ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
 
சீனாவின் ஓர் அங்கமாக இருந்தாலும் ஹாங்காங் தன்னாட்சி பிரதேசமாகவும் தமக்கென ஓர் அரசு நிர்வாகத்தை கொண்ட பகுதியாகவும் உள்ளது.
 
ஆனால் ''ஒரு நாடு, இரு அமைப்புகள்'' திட்டத்தை நிராகரிக்கும் பொதுமக்களின் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது என்று தைவான் அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 
"தலையீடு, அச்சுறுத்தல் மற்றும் அழிப்பு ஆகிய தூண்டுதல் நடவடிக்கைகளை சீனா கைவிட வேண்டும்," என்று தைவானின் பெருநிலப்பரப்பு (சீனா) விவகாரங்களுக்கான கவுன்சில் தெரிவித்துள்ளது.
 
ஷி ஜின்பிங் உரைக்கு சற்று முன்பு கருத்து வெளியிட்டிருந்த தைவான் பிரதமர் சு செங் சாங் சீனா தமது முஷ்டியை உயர்த்தி, பதற்றத்தை தூண்டுவதாக குற்றம்சாட்டியிருந்தார்.
 
தற்போது சீனா - தைவான் இடையே பதற்றம் இருந்தாலும் அது 1996ஆம் ஆண்டு இருந்த நிலைக்கு செல்லவில்லை.
 
1996இல் ஏவுகணை சோதனைகள் நடத்தி தைவான் அதிபர் தேர்தலை சீர்குலைக்க சீனா முயற்சித்தது. சீனாவை பின்வாங்க செய்வதற்காக அமெரிக்க அப்பொழுது விமானம் தாங்கி போர்க் கப்பல்களை தைவான் பகுதிக்கு அனுப்பி வைத்தது.
 
சீனா தமது ராணுவ வல்லமையை வெளிப்படுத்துவது குறித்து பல மேற்கத்திய நாடுகள் கவலை எழுப்பி இருந்தாலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் ''தைவான் ஒப்பந்தத்தை'' பின்பற்ற ஒப்புக் கொண்டுள்ளனர்.
 
அதாவது தைவான் தனி அரசு நிர்வாகத்தை கொண்டு இருந்தாலும் சீன அரசையே அமெரிக்கா அங்கீகரிக்கும் எனும் 'ஒரு சீனா' கொள்கையையே அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆனால், தைவானுடன் அமெரிக்கா விரிவான, அலுவல்பூர்வமற்ற உறவை பேணுவதற்கும் இதே கொள்கை வழிவகை செய்கிறது.
 
அமெரிக்க அரசின் தைவான் உறவுகள் சட்டப்படி அமெரிக்கா தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது.
 
அந்தச் சட்டத்தின்படி தைவான் தன்னை தானே தற்காத்துக் கொள்வதற்காக அமெரிக்கா உதவ வேண்டும்.
 
தைவான் நீரிணைப் பகுதியில் அமைதி மற்றும் நிலைத் தன்மையை சீர்குலைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் அமெரிக்கா எதிர்த்து குரல்கொடுக்கும் என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் சமீபத்திய பிபிசி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments