Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிரியா அகதிகள்: ஆன்லைனில் யாசகம் கேட்பவர்களை சுரண்டுகிறதா டிக்டாக்? பிபிசி புலனாய்வு

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (23:01 IST)
சிரியா நாட்டில் முகாம்களில் அகதிகளாக வசிக்கும் குடும்பங்கள் தங்களது அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டிக்டாக் சமூக வலைதளத்தின் மூலம் பண உதவி கோரி வருகின்றனர். இந்த நிலையில், அவர்களுக்கு உதவியாகக் கிடைக்கும் தொகையில் 70 சதவிகிதம் வரை டிக்டாக் நிறுவனம் எடுத்துக் கொள்வது பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.
 
அங்குள்ள குழந்தைகள் டிக்டாக் நேரலையில் தோன்றி பண மதிப்புடன் கூடிய டிஜிட்டல் பரிசுகளை வழங்குமாறு கெஞ்சுகிறார்கள்.
 
நேரலையில் உதவி கோருபவர்களுக்கு ஒரு மணி நேரத்திலேயே ஆயிரக்கணக்கில் அமெரிக்க டாலர்கள் வரை உதவி கிடைக்கும் நிலையில், அதில் சிறு பகுதி மட்டுமே முகாம்களில் இருக்கும் குடும்பங்களுக்குச் செல்வது தெரிய வந்துள்ளது.
 
நேரலையில் பண உதவி கேட்பதை 'சுரண்டல் பிச்சை' எனக் குறிப்பிட்டுள்ள டிக்டாக் நிறுவனம், இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
டிக்டாக் தளத்தில் இது மாதிரியான உள்ளடக்கங்களுக்கு அனுமதி கிடையாது என அந்நிறுவனம் கூறுகிறது. மேலும், டிஜிட்டல் பரிசுகளில் கமிஷனாக பெறும் தொகை 70 சதவிகிதத்திற்கும் குறைவு என்று டிக்டாக் கூறுகிறது. ஆனால், சரியான தொகையை உறுதிப்படுத்த டிக்டாக் மறுத்துவிட்டது.
 
இந்த ஆண்டின் தொடக்கத்தில் சிரியா முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் டிக்டாக் நேரலை மூலம் உதவிகள் கேட்டு கெஞ்சிய நிலையில், பலர் நிதியுதவி செய்தனர். சிலர் மோசடிகள் குறித்து கவலையும் தெரிவித்தனர்.
 
 
வடமேற்கு சிரியாவில் உள்ள முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு சில டிக்டாக் இடைத்தரகர்கள் இதற்காக தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களை வழங்கியது பிபிசியின் புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
 
டிக்டாக் நிறுவனத்தோடு தொடர்புடைய ஏஜென்சிகளுடன் இணைந்து தாங்கள் செயல்படுவதாக இடைத்தரகர்கள் கூறுகின்றனர். அவர்கள் மூலமாக இந்தக் குடும்பங்களுக்கு டிக்டாக் செயலிக்கான அணுகல் கிடைத்துள்ளது. இந்த ஏஜென்சிகள், லைவ்ஸ்ட்ரீமர்களை ஆட்சேர்ப்பு செய்ய மற்றும் அதிக நேரம் செலவிட பயனர்களை ஊக்குவிப்பதற்கான டிக்டாக் செயலியின் உலகளாவிய உத்தியின் ஒரு பகுதி.

 
டிக்டாக் அல்காரிதம் பயனரின் தொலைபேசி எண்ணை அடிப்படையாகக் கொண்டு உள்ளடக்கத்தைப் பரிந்துரைப்பதால், இடைத்தரகர்கள் பிரிட்டிஷ் சிம் கார்டுகளை அதிகம் பயன்படுத்தியுள்ளனர். பிரிட்டனில் இருந்து அதிகப் பரிசுப்பொருட்கள் கிடைப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள்.
 
டிக்டாக் தளத்தில் நேரலை செய்யும் பல குடும்பங்களில் மோனா அலி அல்-கரீம் மற்றும் அவரது ஆறு மகள்களும் அடங்கும். தங்களுடைய கூடாரத்திற்கு முன்பு மணிக்கணக்காக அமர்ந்துகொண்டு, தங்களுக்குத் தெரிந்த ஒரு சில ஆங்கில வார்த்தைகள் மூலம் அவர்கள் உதவி கோருகின்றனர்.

 
மோனாவின் கணவர் விமான தாக்குதலில் கொல்லப்பட்டார். பார்வையற்ற தனது மகள் ஷரிஃபாவின் அறுவை சிகிச்சைக்கு பணம் திரட்ட இந்த நேரலையை அவர் பயன்படுத்துகிறார்.
 
 
பிற டிக்டாக் பயனர்கள் அளிக்கும் டிஜிட்டல் பரிசுகளை, இவர்களால் பணமாக மாற்றிக்கொள்ள முடியும்.
 
 
சிரியா முகாம்களில் இருந்து நேரலை செய்யப்படும் 30 கணக்குகளை கடந்த ஐந்து மாதங்களாக பிபிசி கண்காணித்தது. அந்த கணக்கு ஒவ்வொன்றுக்கும் பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்தில் ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பரிசுகள் அடிக்கடி வழங்குவதைப் பார்க்க முடிகிறது.
 
ஆனால், முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் தங்களுக்கு சிறிய அளவிலான தொகையே பரிசாகக் கிடைப்பதாகக் கூறுகின்றனர்.
 
டிஜிட்டல் பரிசுகளில் இருந்து கமிஷனாக எவ்வளவு தொகை எடுத்துக்கொள்ளப்படும் என்ற விவரத்தை டிக்டாக் கூற மறுத்துவிட்டதால், அது குறித்து அறிய பிபிசி ஒரு பரிசோதனை நடத்தியது.
 
 
சிரியாவைச் சேர்ந்த பிபிசி செய்தியாளர், டிக்டாக் நிறுவனத்தோடு தொடர்புடைய முகமையை அழைத்து தான் முகாம்களில் வசிப்பதாகத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, டிக்டாக் கணக்கு கிடைத்ததும் அவர் நேரலையில் உதவி கோரினார்.

 
லண்டனில் இருக்கும் பிபிசி ஊழியர் 106 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான டிஜிட்டல் பரிசை அவருக்கு நன்கொடையாக வழங்கினார். அந்த நேரலையின் முடிவில், 33 அமெரிக்க டாலர் மட்டுமே உதவி கோரிய பிபிசி செய்தியாளரின் கணக்குக்கு வந்தது. டிஜிட்டல் பரிசின் மொத்த தொகையில் 69 சதவிகிதத்தை டிக்டாக் எடுத்துக்கொண்டது.
 
எப்படி சுரண்டுகிறது டிக்டாக்?
 
முன்னாள் தொழில்முறை ரக்பி விளையாட்டு வீரரும் டிக்டாக் பிரபலமுமான கீத் மேசன் ஒரு குடும்பத்தின் நேரலையின்போது 330 அமெரிக்க டாலர்கள் நன்கொடையாக அளித்ததோடு, தன்னுடைய ஒரு மில்லியன் பின் தொடர்பாளர்களையும் உதவி செய்ய ஊக்குவித்தார்.
 
இந்த நிதியில் பெரும்பாலானவை டிக்டாக் நிறுவனத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்ற தகவலை பிபிசி அவரிடம் தெரிவித்தபோது, "இது அந்தக் குடும்பங்களுக்கு இழைக்கப்படும் அநீதி," என்றார்.

 
"டிக்டாக் கொஞ்சம் வெளிப்படைத்தன்மை கொண்டிருக்க வேண்டும்," எனக் கூறிய அவர், "டிக்டாக்கின் இந்தச் செயலை பேராசை," என குறிப்பிட்டார்.

 
எஞ்சிய 33 அமெரிக்க டாலர் டிஜிட்டல் பரிசை பணமாக மாற்றியபோது, உள்ளூர் பணப்பரிமாற்றக் கடை 10 சதவிகிதம் பிடித்தம் செய்தது. மீதமுள்ள பணத்தில் டிக்டாக் இடைத்தரகர் 35 சதவிகிதம் கமிஷனாக எடுத்துக்கொள்ள வெறும் 19 அமெரிக்க டாலர்கள் மட்டுமே அவருக்கு கிடைத்தது.
 
முகாம்களில் உள்ள டிக்டாக் இடைத்தரகர்களில் ஒருவரான ஹமீத் பிபிசியிடம் பேசுகையில், இந்த வேலைக்காக தன்னுடைய கால்நடைகளை விற்று மொபைல் ஃபோன், சிம்கார்டு மற்றும் வைஃபை இணைப்பு வாங்கியதாகத் தெரிவித்தார்.
 
 
குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக டிக்டாக்கை பயன்படுத்துவதாகக் கூறும் ஹமீத், தனக்கான கட்டணத்தை எடுத்துக்கொண்டு பெருந்தொகையை அவர்களிடமே கொடுத்துவிடுவதாகவும் கூறுகிறார்.
 
 
டிக்டாக் நிறுவனத்தோடு நேரடித் தொடர்பில் இருக்கும் ஏஜென்ஸிகளிடம் இருந்து தனக்கு உதவிகள் கிடைப்பதாக ஹமீத் கூறுகிறார்.

 
"செயலியில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள். முடக்கப்பட்ட கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவருவார்கள். நாங்கள் பெயர், சுயவிவரப் படத்தை அளித்தால் அவர்கள் புதிய கணக்கை உருவாக்கிக் கொடுப்பார்கள்" என்கிறார் ஹமீத்.
 
'லைவ்ஸ்ட்ரீமிங் கில்ட்ஸ்' என அழைக்கப்படும் இது போன்ற ஏஜென்சிகள், உலகம் முழுவதும் உள்ளன. உள்ளடக்கத்தை உருவாக்குபவர்களுக்கு உதவுவதற்காக இவர்களை டிக்டாக் ஒப்பந்தம் செய்துள்ளது.
 
நேரலை நேரம் மற்றும் பெறப்பட்ட பரிசுப்பொருட்களின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இவர்களுக்கு டிக்டாக் கமிஷன் வழங்குகிறது.
 
சிரியா முகாம்களில் உள்ள குழந்தைகள், ஒரே நேரத்தில் மணிக்கணக்கில் நேரலை செய்கின்றனர்.
 
சிறார்களுக்கு எதிரான ஆபத்து
 
சிறார்களுக்கு எதிரான தீங்கு, ஆபத்து அல்லது சுரண்டலைத் தடுக்கும் டிக்டாக்கின் சொந்தக் கொள்கைகளுக்கு முரணாக இந்த நேரலை இயங்குவதாக 'அக்சஸ் நவ்' எனும் டிஜிட்டல் உரிமைகள் அமைப்பைச் சேர்ந்த மர்வா ஃபடாஃப்தா கூறுகிறார்.

 
"பயனர்கள் வெளிப்படையாக பரிசுகளைப் பெற அனுமதிக்கப்படவில்லை என்று டிக்டாக் தெளிவாகக் கூறுகிறது. எனவே இது அவர்களின் சொந்த சேவை விதிமுறைகள் மற்றும் இந்த நபர்களின் உரிமைகளை மீறுவதாகும்" என்கிறார் அவர்.

 
ஆதரவு மற்றும் அனுதாபத்தைத் தேடுவதற்காக தங்கள் கதைகளை ஆன்லைனில் பகிர்ந்து கொள்ள உரிமை உண்டு என்பதை ஒப்புக்கொள்ளும் அவர், ஆனால் இந்த நேரடி ஒளிபரப்புகள் கண்ணியமற்றவை மற்றும் அவமானகரமானவை என்கிறார்.

 
நீங்கள் நேரலைக்குச் செல்வதற்கு முன், உங்களிடம் 1,000 பின்தொடர்பாளர்கள் இருக்க வேண்டும். நீங்கள் நேரடியாக பரிசுகளை கோரக்கூடாது மற்றும் சிறார்களுக்கு எதிரான தீங்கு, ஆபத்து அல்லது சுரண்டலைத் தடுக்க வேண்டும் என்று டிக்டாக் விதிகள் கூறுகிறது.

 
குழந்தைகள் உதவி கேட்டுக் கெஞ்சும் 30 டிக்டாக் கணக்குகளுக்கு எதிராக டிக்டாக் தளத்தில் இருக்கும் வசதியைப் பயன்படுத்தி பிபிசி புகாரளித்தபோது, அவற்றில் எந்த விதி மீறலும் இல்லை என்று டிக்டாக் தெரிவித்தது.

 
பின்னர், இது குறித்து கருத்துக் கேட்க டிக்டாக்கை பிபிசி நேரடியாகத் தொடர்பு கொண்டதும் அந்தக் கணக்குகள் முடக்கப்பட்டன.

 
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிபிசியால் எங்களிடம் கொண்டு வரப்பட்ட தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளால் நாங்கள் ஆழ்ந்த கவலையடைகிறோம். மேலும் விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

 
"எங்கள் தளத்தில் இந்த வகையான உள்ளடக்கம் அனுமதிக்கப்படாது. மேலும் சுரண்டல் பிச்சை தொடர்பான எங்களின் உலகளாவிய கொள்கைகளை மேலும் வலுப்படுத்துகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 
உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக செயலியான டிக்டாக், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து 6.2 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை செயலிக்குள்ளாக மட்டுமே ஈட்டியிருப்பதாக பகுப்பாய்வு நிறுவனமான சென்சார் டவர் தெரிவிக்கிறது.

 
டிக்டாக் நேரலை மூலம் பணம் சம்பாதிப்பதற்கு மாற்றாக முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆதரவாக சிரியாவில் பணிபுரியும் பல தொண்டு நிறுவனங்களை பிபிசி தொடர்புகொண்டது.

 
உள்ளூர் தொண்டு நிறுவனமான தக்காஃபுல் அல்ஷாம் அடுத்த மூன்று மாதங்களுக்கு குடும்பங்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களை வழங்குவதாகவும், குழந்தைகளின் கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதாகவும் கூறியது.

 
முகாம்களில் உள்ள பலருக்கு ஆன்லைனில் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் நேரலையில் உதவி கோருகின்றன. ஆனால், நன்கொடையளிக்கப்படும் பணத்தின் பெரும்பகுதி இன்னும் டிக்டாக் நிறுவனத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

இன்று மாலை 19 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

தீபாவளி பட்டாசு வெடிவிபத்து: இதுவரை 21 பேர் தீக்காயம்..!

வயநாடு தேர்தல் எதிரொலி: மலையாளத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்த பிரியங்கா காந்தி!

அடுத்த கட்டுரையில்
Show comments