55 வயதில் ஆசிரியர் ஆகிய பிச்சைக்காரர் என இந்து தமிழ் திசையில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம், பழையபட்டினம் நீதி கிராமத்தைச் சேர்ந்தவர் கேதாரேஸ்வர் ராவ் (55). இவர், கடந்த 1998-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றத்தை நாடினர். இதனால், அந்த ஆண்டு தேர்வு ஆனவர்கள் யாரும் அரசு ஆசிரியர் ஆக முடியவில்லை. இவ்வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இதையடுத்து, கேதாரேஸ்வர் ராவ் சைக்கிளில் ஊர் ஊராக சென்று துணிகளை விற்க தொடங்கினார்.
உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி மிகுந்த ஏழ்மையில் சிரமப்பட்டுள்ளார். ஒரு கட்டத்தில் பெற்றோரும் இறந்துவிட ஆதரவற்று இருந்துள்ளார்.
பேப்பர்கள், பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்கி, அதை விற்று வாழ்நாளை கழித்தார். சில நாட்கள் பிச்சை எடுத்ததாகவும் இவர் தெரிவித்தார். இந்நிலையில், 1998-ம் ஆண்டு அரசு ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் அனைவருக்கும் அரசு ஆசிரியர் பணி நியமனம் வழங்குமாறு சமீபத்தில் நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.
அதன்படி, கேதாரேஸ்வர் ராவுக்கும் பணி நியமன உத்தரவு வீடு தேடி வந்தது. இப்போது அந்த கிராமமே அவரை கொண்டாடி வருகிறது.
என்றாவது மாஸ்டர் ஆகி விடுவேன் என கேதாரேஸ்வர் ராவ் அடிக்கடி கூறியதால், அவரை அந்த கிராமத்து இளைஞர்கள் மாஸ்டர் என்றே அவரை கிண்டல் செய்துள்ளனர். தற்போது அதுவே உண்மையாகிவிட்டது என அவ்வூர் இளைஞர்கள் ஆச்சர்யத்துடன் கூறுகின்றனர்.
கிராம மக்கள் இப்போது கேதாரேஸ்வர் ராவை கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா சூழல் குறித்து டெல்லியில் அவசர ஆலோசனை
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசு இன்று நிபுணர்களைக் கூட்டி அவசர ஆலோசனை நடத்துகிறது என செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி
ஒமிக்ரான் வைரஸ் மற்றும் அதன் துணை வைரஸ்களால் தூண்டப்பட்ட கொரோனா அலை மீண்டும் எழுச்சி பெற்று வருகிறது. குறிப்பாக ஒமிக்ரான் மற்றும் அதன் துணை வைரஸ்களான பிஏ.2, பிஏ.2.38 ஆகியவைதான் இந்த எழுச்சியின் பின்னால் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது மகராஷ்டிரா, கேரளா, டெல்லி, கர்நாடகம், தமிழ்நாடு, ஹரியாணா, உத்தரப் பிரதேசம், தெலங்கானா, மேற்கு வங்காளம், குஜராத் ஆகிய 10 மாநிலங்களில் தலா ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா, இன்று டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் ஒன்றை கூட்டி உள்ளார்.
இதில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதை தடுப்பதற்கென யுக்திகள் வகுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டின் 4 மாவட்டங்கள் உள்பட நாட்டின் 43 மாவட்டங்களில் வாராந்திர கொரோனா பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் உள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய அரசு ஆலோசனைகள் வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என விவரிக்கிறது அச்செய்தி.
ஒடிசாவின் அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் தேசிய ஜனநாயக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும் ஒடிஷா மாநில முதல்வருமான நவீன் பட்நாயக் வேண்டும்கோள் விடுத்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது தினமணி.
இத்தாலிக்கு பயணம் மேற்கொண்டுள்ள பட்நாயக், கட்சி வேறுபாடுகள் இன்றி, ஒடிஷாவின் மகளான திரெளபதி முர்முவை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்க வேண்டும் என்று டிவிட்டர் பதிவின் மூலம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒடிஷாவில் மொத்தமுள்ள 147 சட்டமன்ற உறுப்பினர்களில் பிஜு தனதாதளம் எம்.எல்.ஏ.க்கள் 114 பேர். பாஜகவில் 22 எம்.எல்.ஏ.க்களும், காங்கிரசில் 9 எம்.எல்.ஏ.க்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ.வும் உள்ளனர். இது தவிர, ஒரு சுயேட்சை எம்எல்ஏ-வும் உள்ளார்.