Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சுப்ரமணிய சுவாமியின் புத்தகம் மத வெறுப்பைத் தூண்டும்' - மத்திய அரசு

'சுப்ரமணிய சுவாமியின் புத்தகம் மத வெறுப்பைத் தூண்டும்' - மத்திய அரசு
, வியாழன், 5 நவம்பர் 2015 (18:25 IST)
பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்ரமணிய சுவாமியின் "டெரரிசம் இன் இந்தியா" என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் மத வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாக இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.
 

 
வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களை தண்டிக்கக் கூடிய குற்றங்களாக்கும், இந்திய தண்டனை சட்டத்தின் 153 ஏ பிரிவு மற்றும் வேறு சில பிரிவுகள், கருத்து சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றன, அவற்றை ரத்து செய்யவேண்டும் என்று சுப்ரமணியம் ஸ்வாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், மத்திய உள் துறை அமைச்சகம் சமர்ப்பித்த பதில் மனுவில், இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
 
இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதத்தில் அமைந்திருக்கின்றன. எனவே இந்தக் கருத்துக்கள் இந்திய தண்டனை சட்டத்தின் சில பிரிவுகளை மீறும் வகையில் இருக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சகம் தனது பதில் மனுவில் கூறியிருக்கிறது.
 
பல்வேறு மதக்குழுக்களிடையே அமைதியை நிலைநாட்டும் வகையிலும், பொது ஒழுங்கை நிலைநிறுத்தவும், இந்த சட்டப்பிரிவுகள் தொடர்ந்தும் நீடிக்கவேண்டும் என்று மத்திய அரசு கூறியது.
 
"மசூதி என்பது பிரார்த்தனை கூடம் தான், அதை ஒரு கட்டிடமாகவே தான் பார்க்க வேண்டும். புனித ஆலயம் போல அதை பார்ப்பது தவறு. சவுதி அரேபியாவில் கூட சாலைகள் அமைக்க மசூதிகள் இடிக்கப்பட தான் செய்யப்படுகின்றன" என சுப்ரமணியன் சுவாமி கடந்த மார்ச் மாதம் அஸ்ஸாம் மாநிலத்தில் பேசியுள்ளார்.
 
அப்போது தனது கருத்தை ஏற்காதவர்களுடன், தான் நேரடி விவாதம் செய்ய தயார் என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல்களை தான் சவுதி அரேபியா மக்களிடமிருந்து பெற்றதாகவும் சுப்ரமணியன் சுவாமி அப்போது குறிப்பிட்டிருந்தார்.
 
இந்த விவகாரம் அஸ்ஸாம் மாநிலத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கியது. பாரதிய ஜனதா கட்சியும் கூட, அதை அவரது சொந்த கருத்தாக பார்க்க வேண்டும் என கூறியது.
 
இதைத் தொடர்ந்து தான் அவர் மீது அஸ்ஸாம் மாநிலத்தின் கரிம்கஞ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 153, 153ஏ, 295, 295ஏ மற்றும் 298 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது.
 
இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், கருத்து சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் அரசியல் சாசன சட்டம் 21 கீழ், இந்த தண்டனை சட்டத்தின் வெறுப்பு பேச்சு சட்டப் பிரிவுகளை நீக்க வலியுறுத்தி சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடுத்திருந்தார்.
 
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதில் மனு குறித்து கருத்து வெளியிட்ட சுவாமி, கரிம்கஞ் நீதிமன்ற ஆணைக்கு பின்புலத்தில் செயல்பட்ட அதே கூட்டம், மீண்டும் தனக்கு எதிரான மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரமாணப் பத்திரம் தொடர்பான விவகாரத்திலும் செயல்பட்டிருக்க கூடும் என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil