Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'சர்வதேச சதிவலையில் மைத்திரிபால': ஆளுங்கட்சியினர்

'சர்வதேச சதிவலையில் மைத்திரிபால': ஆளுங்கட்சியினர்
, ஞாயிறு, 23 நவம்பர் 2014 (16:37 IST)
இலங்கையில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.


 
மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிரணியின் பொது வேட்பாளராக போட்டியிடுவதற்காக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகியுள்ள நிலையிலேயே அவரது கட்சிப் பதவிக்கு அனுர பிரியதர்ஷன யாப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
கொழும்பில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ள சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா, 30 ஆண்டுகால யுத்தத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முடிவுக்கு கொண்டுவந்ததை தற்போது பலர் மறந்துவி்ட்டதாகக் கூறினார்.
 
அவ்வாறே முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன சர்வதேச சதியில் சிக்கியுள்ளதாகவும், இதுதொடர்பில் தான் வருத்தப்படுவதாகவும் இங்கு பேசிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.
 
சர்வதேச நாடுகள் இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாகக் கூறிய அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை தோக்கடிக்க அனைவரும் முன்வரவேண்டும் என்று கூறினார்.
 
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஆளுங்கட்சி தரப்பில் அமைச்சர்களான நிமல் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அலகப்பெரும, ஏ.எச்.எம் பௌசி ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
 
இதனிடையே, மைத்திரிபால சிறிசேனவுடன் விலகிச் சென்றுள்ள ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ். குணவர்தன ஆகியோரையும் கட்சி அங்கத்துவங்களிலிருந்தும் அமைச்சுப் பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு நேற்றிரவு தீர்மானிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
 
நீக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் சுகாதார அமைச்சுப் பதவிக்கு துணை சுகாதார அமைச்சராக இருந்த லலித் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அவ்வாறே, அமைச்சர் ராஜித சேனாரத்ன வகித்து வந்த மீன்பிடித்துறை அமைச்சுக்காக மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் சரத் குமார குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
 
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன வகித்து வந்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட பிரதான அமைப்பாளர் பதவிக்காக துணை அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப் பட்டுள்ளதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil