Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு

Webdunia
திங்கள், 4 ஜூலை 2022 (13:39 IST)
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன.


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றன.

சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது.

இதனால், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் வசமுள்ள எரிபொருள் தொகை குறித்து, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்தார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் கொலன்னாவை களஞ்சியசாலையில் 5274 மெட்ரிக் டன் டீசல் காணப்படுகின்றது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 7500 மெட்ரிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் 11 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, 12,774 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிடுகின்றார்.

அதேபோன்று, 92 ரக பெட்ரோல் 1414 மெட்ரிக் டன்னும் 95 ரக பெட்ரோல் 2647 மெட்ரிக் டன்னும் காணப்படுகின்றது.

அத்துடன், சூப்பர் டீசல் 233 மெட்ரிக் டன்னும், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் 500 மெட்ரிக் டன்னும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார்.

இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத அளவிற்கான எரிபொருள்தான் இலங்கை வசம் காணப்படுகின்றது.

இதனால், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்த, ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகம் தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எனினும், இலங்கையில் செயற்பட்டு வரும் இந்தியாவிற்கு சொந்தமான லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை குறிப்பிட்டளவு மேற்கொண்டு வருவதை காண முடிகின்றது.

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம்

இலங்கை முழுவதும் சுமார் 211 எரிபொருள் நிரப்பு நிலையங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது.

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முழுமையாக இடைநிறுத்தியுள்ள இந்த தருணத்தில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருள் விநியோகத்தை விஸ்தரித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்றைய தினம் ஒரு மில்லியன் லிட்டர் எரிபொருளை விநியோகித்துள்ளதாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை பகுதியிலுள்ள ஐ.ஓ.சி நிறுவனத்தின் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள் விநியோகம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது.

நேற்றைய தினம் விடுமுறை தினம் என்ற போதிலும், திருகோணமலை களஞ்சியசாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் கொள்கலன்கள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டு, எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொது போக்குவரத்து முழுமையாக முடங்கும் அபாயம்

இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளுக்கும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

10 வீதத்திற்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார்.

நாடு முழுவதும் சுமார் 1000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதன் சேவைகளும் உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகள் விடுமுறை

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச நேற்று அறிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 8ம் தேதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments