Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இபோலா: மக்களை வீட்டில் அடைக்க சியர்ரா லியோன் முடிவு

இபோலா: மக்களை வீட்டில் அடைக்க சியர்ரா லியோன் முடிவு
, திங்கள், 8 செப்டம்பர் 2014 (17:15 IST)
இபோலா நோய்ப் பரவியதால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சியர்ரா லியோன், கிருமிப் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக குறைந்தது மூன்று நாட்களுக்கு மக்களை வீடுகளை வெளியில் வர விடாமல் தடுப்பது என அறிவித்துள்ளனர்.
 
செப்டம்பர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அந்நாட்டின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
 
புதிதாக கிருமித் தொற்று வந்தவர்களை சுகாதாரப் பணியாளர்கள் அடையாளம் கண்டு தனியாக ஒதுக்கி வைக்க வழியேற்படுத்தித் தருவது என்பது இந்த நடவடிக்கையின் நோக்கம் என அவர் தெரிவித்தார்.

 
அவ்வாறாக மக்களை வெளியில் வரவிடாமல் தடுத்துவைத்து நடவடிக்கை எடுப்பது இபோலா கிருமி சியர்ரா லியோனில் பரவுவதை முழுமையான அளவில் தடுக்க உதவும் என அந்நாட்டின் அதிபருடைய ஆலோசகர் ஒருவர் கூறினார்.
 
மக்கள் தத்தமது வீடுகளை விட்டு வெளியில் வராமல் இருப்பது உறுதி செய்யும் பணியில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் நாடெங்கிலுமாக ஈடுபடுத்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார்.
 
அரசாங்கம் சொல்வதைக் கேட்டு மக்கள் எந்த அளவுக்கு வீடுகளை விட்டு வெளியில் இருக்கிறார்களோ, அந்த அளவில்தான் இந்த முயற்சி வெற்றி அடைவதற்கான வாய்ப்பு உள்ளது என பிபிசியின் மேற்கு ஆப்பிரிக்க செய்தியாளர் கூறுகிறார்.
 
ஆனால் மக்களை வீடுகளை விட்டு வெளியே வர விடாமல் கட்டாயப்படுத்தி தடுத்தால், அது மனித உரிமை விவகாரமாக உருவெடுக்கும் என்றும், வன்முறைமிக்க ஆர்ப்பாட்டங்கள் வெடிக்கவும் வாய்ப்பு உண்டு எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
 
ஆனால் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்ற அரசின் நிபந்தனையை மக்கள் மறுக்க மாட்டார்கள் என சியர்ரா லியோன் சுகாதார அமைச்சின் மக்கட் தொடர்பு அதிகாரி சித்தி யஹ்யா டுனிஸ் கூறினார்.
 
இந்த நிபந்தனையை கடைப்பிடிக்கத் தவறினால் அது சட்டத்தை மீறுவதாக, அதிபர் பேச்சை அவமதிப்பதாக ஆகிவிடும் என அவர் தெரிவித்தார்.
 
உயிரிழப்புகள்
 
சென்ற மாதம் லைபீரியாவிலும், இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக தலைநகர் மன்ரோவியாவிலுள்ள பெரிய சேரிப் பகுதி ஒன்றை அந்நாட்டின் அதிகாரிகள் அடைத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நைஜீரியாவில் வரும் 22ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க நைஜீரிய அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
 
இபோலா பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கையாக பள்ளிக்கூடங்களை அவர்கள் மூடி வைத்திருந்தனர்.
 
மேற்கு ஆப்பிரிக்காவில் இபோலா பரவியதன் விளைவாக இதுவரை உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 2100ஆக உள்ளது.
 
இதில் லிபீரியாவில் ஆயிரத்துக்கு அதிகமானவர்களும், கினீயிலும் சியர்ரா லியோனிலும் சுமார் ஐநூறு பேரும் நைஜீரியாவில் பத்து பேரும் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார நிறுவன புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
 
தடுப்பு மருந்து
 
உலக சுகாதார நிறுவனம் புதிய மருந்துகள் பற்றி அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
 
இந்நிலையில் இபோலா பரவலைக் கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் முதல் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பு ஊசிகள் போடப்படும் என உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது.
 
புதிய மருந்துகளின் பாதுகாப்பு குறித்து முதலில் பரிசோதிக்க வேண்டியுள்ளது என்பதால் இந்த ஒரு மாத தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
இபோலா நோய் வந்து பின்னர் அதிலிருந்து குணமடைந்தவர்களின் இரத்தத்தை எடுத்து மற்ற இபோலா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் யோசனை தெரிவித்திருந்தது.
 
குணமடைந்தவர்களது இரத்தத்தில் இபோலா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என்பதால் அதனை மற்ற நோயாளிகளுக்கு செலுத்தும்போது அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி ஊக்கம் பெறும் என அது தெரிவித்துள்ளது.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil