Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரானில் 650 மாணவிகளுக்கு விஷம் கொடுத்த அதிர்ச்சி சம்பவம் - என்ன நடந்தது?

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2023 (15:39 IST)
இரானில் குறைந்தபட்சம் 650 பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்டதை பிபிசி கண்டறிந்துள்ளது. ஒரு மூத்த அரசு அதிகாரி சிறுமிகள் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதை இறுதியாக ஒப்புக்கொண்டார்.

எந்தவொரு பள்ளி மாணவியும் உயிரிழக்கவில்லை. ஆனால் டஜன் கணக்கானவர்கள் சுவாசப் பிரச்னைகள், குமட்டல், தலைச்சுற்றல், சோர்வு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

"அனைத்துப் பள்ளிகளும் குறிப்பாக பெண்களுக்கான பள்ளிகள் மூடப்பட வேண்டும் எனச் சிலர் விரும்புவது தெளிவாகிறது," என்று இரானின் துணை சுகாதார அமைச்சர் யூன்ஸ் பனாஹி பிபரவரி 26ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதுவரை வெளியாகியுள்ள ஒரே அதிகாரபூர்வ அறிக்கை, விஷம் வைத்தவர்கள் மீது குற்றவியல் விசாரணையை வழக்கறிஞர் ஜெனரல் தொடங்கியுள்ளதாகவும் இந்தச் செயல் 'வேண்டுமென்றே' செய்யப்பட்டதாக இருக்கலாம் எனவும் கூறுகிறது.

கடந்த மூன்று மாதங்களாக, பள்ளி மாணவிகள் நோய்வாய்ப்படுவதற்கு முன்பு டேஞ்சரின் அல்லது அழுகிய மீன் வாசனை இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

"பயன்படுத்தப்பட்ட ரசாயனங்கள் ராணுவ தரம் கொண்டவை அல்ல, அவை பொதுவிலேயே கிடைக்கின்றன. மாணவர்களுக்கு எந்தவிதத் தீவிர சிகிச்சையும் தேவையில்லை. அமைதியைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம்," என்று மருத்துவர் பனாஹி கூறினார்.

பின்னர், தனது அறிக்கை 'தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது' எனக் கூறினார். எந்தவொரு குற்றவாளியும் பகிரங்கமாகப் பெயரிடப்படாதபோது, பொதுமக்களின் கோபத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த விஷயத்தில் அதிகாரிகளுக்குள் பிளவு ஏற்பட்டதற்கான அறிகுறியாக இது உள்ளது.

மத நகரமான கோம் விஷம் வைக்கப்பட்ட இந்த நிகழ்வின் மையமாக உள்ளது. ஆனால், இரான் முழுவதும் 8 நகரங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளன. இதுகுறித்த பொதுமக்களின் அதிருப்தி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2022ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் தேதியன்று கோமில் உள்ள நூர் தொழில்நுட்பப் பள்ளியைச் சேர்ந்த 18 மாணவிகள் விஷத்தின் அறிகுறிகளோடு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதுதான் விஷம் வைக்கப்பட்டதன் முதல் சம்பவம்.
அதன் பின்னர், அந்த மாகாணத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளிகள் குறி வைக்கப்பட்டன.

பிப்ரவரி மாத நடுப்பகுதியில், கோம் நகரிலுள்ள கவர்னர் அலுவலகத்திற்கு வெளியே குறைந்தபட்சமாக 100 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர் . எனது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்! இரண்டு மகள்கள். அவர்களைப் பள்ளிக்கு அனுப்பாமல் இருப்பதுதான் நான் செய்யக்கூடிய விஷயம்," என்று ஒரு தந்தை சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட வீடியோவில் கூச்சலிட்டார்.

"இதுவொரு போர்! அவர்கள் எங்களை வீட்டில் உட்கார வைக்க கோம் நகரிலுள்ள பெண்கள் உயர்நிலைப் பள்ளிகளில் இதைச் செய்கிறார்கள். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்," என்று அதே கூட்டத்தில் இருந்த ஒரு பெண் கூறினார்.

தங்கள் பிள்ளைகள் விஷம் கொடுக்கப்பட்ட சில வாரங்களுக்கு நோய்வாய்ப்பட்டதாகச் சில பெற்றோர்கள் கூறுகிறார்கள்.

ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோ, ஒரு டீனேஜ் பெண் தனது தாயுடன் படுக்கையில் கிடப்பதைக் காட்டுகிறது.

"அன்புள்ள தாய்மார்களே! நான் ஒரு தாய். என் குழந்தை மருத்துவமனை படுக்கையில் கிடக்கிறது. அவளுடைய கை கால்கள் பலவீனமாக உள்ளன. நான் அவளைக் கிள்ளுகிறேன், ஆனால் அவள் எதையும் உணரவில்லை. தயவு செய்து குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்," என்று கலக்கத்தோடு அந்தத் தாய் கூறுகிறார்.

இரானியர்களின் அச்சம்

இஸ்லாமிய குடியரசின் முதுகெலும்பான ஷியா இஸ்லாத்தின் மதத் தலைவர்களுடைய தாயகமான கோம் நகரில் இது நடந்திருக்கிறது..

ஆனால், கடந்த செப்டம்பரில் தனது ஹிஜாபை 'சரியாக' அணியத் தவறியதாகக் கூறி போலீஸ் காவலில் வைக்கப்பட்ட இளம் குர்தீஷ் பெண் மாசா அமினி உயிரிழந்ததில் இருந்து மதத் தலைவர்களின் அதிகாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து நடந்த பெரிய அரசு எதிர்ப்பு ஆர்ப்பாடங்களில் தாங்கள் பங்கெடுத்ததற்கான எதிர்வினையாக மாணவிகள் மீதான இந்தத் தாக்குதல் இருக்குமோ என்று சில இரானியர்கள் கருதுகிறார்கள். பள்ளி மாணவிகள் தங்கள் ஹிஜாப்களை கிழித்தெறியும் படங்கள் சமூக ஊடகங்களில் நிரம்பி வழிகின்றன.

இந்தத் தாக்குதல்கள் மூலமாக தங்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்துமாறு பெற்றோரை அச்சுறுத்துவது, ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களையும் நைஜீரியாவில் உள்ள போகோ ஹராம் என்ற இஸ்லாமிய போராளிக் குழுவையும் போலச் செயல்பட விரும்பும் கடும்போக்குவாதிகளின் வேலை எனப் பலரும் ஊகிக்கிறார்கள்.

"போகோ ஹராம் இரானுக்கு வந்திருக்கிறதா?" என்று இரான் முன்னாள் துணை அதிபர் முகமது அலி அப்தாஹி இன்ஸ்டாகிராம் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார்.

"தீவிரவாதிகள் அரசையும் மதத்தின் எல்லைகளையும் தங்களுக்குச் சாதகமாக வகுத்துக் கொள்வார்கள்" என்றும் சீர்திருத்தவாதியும் அரசியல்வாதியுமான அவர் எச்சரித்தார்.

இரானிய ஆட்சி பெண்களுக்கு கட்டாய ஹிஜாப் போன்ற கட்டுப்பாடுகள் பற்றிய விமர்சனங்களை நிராகரித்ததோடு, மாறாக, பல்கலைக்கழகத்தில் சேரும் பெண்களின் எண்ணிக்கையைப் பற்றிப் பெருமையாகப் பேசுகிறது.

ஆனால், இளம் பெண்கள் பள்ளிப் படிப்பை முடிக்கவில்லை என்றால், கல்லூரி வெறும் கனவாகவே போய்விடும்.

கோம் கவர்னருடனான சந்திப்பில், தனக்கு இரண்டு முறை விஷம் கொடுக்கப்பட்டதாக ஒரு பள்ளி மாணவி கூறியது, அதிகாரிகளின் சில அறிக்கைகள் எவ்வளவு தெளிவற்றதாகவும் தவறாகவும் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகிறது.

"அவர்கள்(அதிகாரிகள்) எங்களிடம் அனைத்தும் நன்றாக இருக்கிறது, நாங்கள் விசாரணையை முடித்துவிட்டோம் என்றார்கள். ஆனால், என் தந்தை என் பள்ளியில் கேட்டபோது, அவர்கள் 'ஒரு வாரமாக சிசிடிவி செயலிழந்துள்ளது, இதை நாங்கள் விசாரிக்க முடியாது. மன்னிக்க வேண்டும்' என்று கூறினார்கள்," என்று அவர் அந்தக் கூட்டத்தில் கூறினார்.

"ஞாயிற்றுக்கிழமையன்று எனக்கு இரண்டாவது முறையாக விஷம் கொடுக்கப்பட்டபோது, பள்ளி முதல்வர், 'அவளுக்கு இதய நோய் உள்ளது. அதனால்தான் அவள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளாள்' எனக் கூறினார். ஆனால், எனக்கு இதய நோய் எதுவும் இல்லை!" என்று அந்த மாணவி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கு.! மே 31ல் விசாரணை ஆஜராகும் பிரஜ்வல் ரேவண்ணா..!

ஜூன் 4-க்கு பிறகு மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்..! அமைச்சர் அமித்ஷா..!!

தமிழகத்தில் 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்.! மழைக்கு வாய்ப்பு இருக்கா..?

ஜெயலலிதா ஆன்மிகவாதிதான்... ஆனால், மதவெறி பிடித்தவர் அல்ல: திருநாவுக்கரசர்

தமிழகத்தில் வாக்கு எண்ணும் பணியில் 38,500 பேர்.! சத்யபிரத சாஹூ தகவல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments