Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்

1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பின் 50ஆம் ஆண்டு நினைவுகள்
, திங்கள், 26 ஜனவரி 2015 (13:29 IST)
1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டம் துவங்கிய நாள் மொழிப்போர் தியாகிகள் தினமாக தமிழகத்தின் பல பகுதிகளில் நேற்று (25.01.2015) நினைவுகூறப்பட்டது. திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மொழிப் போர் தியாகிகள் தினத்தையொட்டி மாலையில் பொதுக்கூட்டங்களையும் நடத்தினர்.
சென்னையில் மொழிப்போர் கூட்டியக்கத்தின் சார்பில் மெரீனா கடற்கரையில் தமிழ் உணர்வாளர்கள் ஒன்றுகூடி, அங்கிருக்கும் வள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதற்குப் பிறகு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களையும் எழுப்பினர்.
 
1937-38ஆம் ஆண்டுகளிலேயே பள்ளிக்கல்வியில் இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. போராட்டத்தின் காரணமாக அந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டாலும், அதற்குப் பிறகும், இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து தொடர்ந்து அவ்வப்போது போராட்டங்கள் நடந்துவந்தன.
 
இந்த நிலையில், 1965ஆம் ஆண்டின் குடியரசு தினம் முதல் இந்திய யூனியனின் அலுவல் மொழியாக இந்தியே இருக்கும் என்ற சட்டம் நிறைவேற்றப்படவிருந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டதில் மாணவர் தலைவராகத் தீவிரமாக ஈடுபட்டவரான பா.செயப்பிரகாசம், சின்னச்சாமி என்பவர்கள் 1964ல் தீக்குளித்து உயிரிழந்ததை நினைவுகூறும் வகையில்தான் ஜனவரி 25ஆம் தேதி இந்த போராட்டம் துவங்கியது என்கிறார்.
 
பிற்காலத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட, எல்.கணேசன், கா.காளிமுத்து, பெ.சீனிவாசன், துரைமுருகன் உள்ளிட்டவர்கள், இந்த 1965ஆம் வருட இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர்.
 
மேலும் அடுத்த பக்கம்..

இந்தப் போராட்டத்தில் திமுக தலைவர்கள் தீவிர பங்களிப்பைச் செலுத்தினாலும், இது மாணவர்களாகவே முன்னெடுத்த போராட்டம் என்கிறார், மதுரையில் அப்போது கல்லூரி மாணவராக இருந்து போராட்டத்தில் பங்கெடுத்த பேராசிரியர் ராமசாமி. திமுக முன்னாள் அமைச்சரும் இந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவருமான துரைமுருகனும் இதேபோன்ற கருத்தைத் தெரிவிக்கிறார். ஆனால், தமிழுணர்வாளர்களும் திமுகவும்தான் இதற்கான களத்தை உருவாக்கி வைத்திருந்தனர் என்கிறார் செயப்பிரகாசம்.
webdunia
ஜனவரி இருபத்தி ஐந்தாம் தேதி துவங்கிய இந்தப் போராட்டம் நடுவில் சில இடைவெளிகளுடன் மார்ச் மாத மத்திவரை நடைபெற்றது. போராட்டம் துவங்கிய ஜனவரி 25ஆம் தேதியே திமுக தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். பல மாணவர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழிந்துள்ளனர் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுப்ட்டவர்கள். காஷ்மீருக்கு அடுத்தபடியாக உள்நாட்டில் ராணுவம் வரவழைக்கப்பட்டது இந்தப் போராட்டத்திற்குத்தான் என்கிறார் துரைமுருகன்.
 
பிப்ரவரி 11ஆம் தேதி வானொலியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அலுவல் மொழியாக ஆங்கிலம் தொடரும் என்று தெரிவித்தார். பிப்ரவரி 12ஆம் தேதி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைத்தனர். மார்ச் 7ஆம் தேதி மாணவர்கள் மீது போடப்பட்டிருந்த வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன. வேறு சில காரணங்களும் சேர்ந்துகொள்ள போராட்டம் முடிவுக்கு வந்தது என்கிறார் ராமசாமி.
 
65ஆம் வருடப் போராட்டம் துவங்கி ஐம்பதாண்டுகள் கழிந்திருக்கின்றன. தங்களுடைய போராட்டம் தமிழர்களுக்கு பல நன்மைகளைச் செய்திருக்கிறது என்கிறார் ராமசாமி. ஆங்கலம் வலியுறுத்தப்பட்டதால்தான், தற்போது தமிழகத்தில் பலர் நல்ல கல்வியுடன் வெளிநாடுகளில் குடியேற முடிந்தது என்கிறார் அவர்.
 
துரைமுருகன் போன்ற அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இந்தி தேவை என்று எந்த அரசியல் கட்சியும் இனி கேட்க முடியாது. அதுதான் இந்தப் போராட்டத்தின் நீண்ட கால சாதனை என்கிறார்கள். ஆனால், தற்போது உருவெடுத்திருக்கும் தமிழ் மொழியுரிமை கூட்டியக்கத்தைச் சேர்ந்த ஆர்வலர்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது என்கிறார்கள். இந்த ஆண்டு முழுவதுமே, இது தொடர்பாக பல நிகழ்ச்சிகளை நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil