Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எப்படி இருக்கிறது பிரபாஸின் ராதே ஷ்யாம்? – திரை விமர்சனம்!

Webdunia
ஞாயிறு, 13 மார்ச் 2022 (13:47 IST)
நடிகர்கள்: பிரபாஸ், பூஜா ஹெக்டே, பாக்ய ஸ்ரீ, சத்யராஜ், ஜெகபதிபாபு, சச்சின் கேடேகர், ஜெயராம், சத்யன்; பின்னணி இசை: எஸ். தமன்; பாடல்களுக்கு இசை: ஜஸ்டின் பிரபாகரன்; இயக்கம்: ராதா கிருஷ்ண குமார்.

'பாகுபலி' படத்திற்குப் பிறகு பிரபாஸ் இந்திய அளவில் அறியப்பட்ட நடிகராகி விட்டதால், அவரை வைத்து அதற்குப் பிறகு எடுக்கும் படங்களை தேசிய அளவிலான சந்தையை மனதில் வைத்தே எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு முன்பாக வெளிவந்த 'சஹோ' அப்படி ஒரு முயற்சிதான். ஆனால், கதையில் சொதப்பியதால் படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது. இப்போது, 'ராதே ஷ்யாம்'.

ஜோதிடம், கைரேகை போன்ற கணிப்புகளில் 100 சதவீதம் நடக்குமா அல்லது 99 சதவீதமே நடக்கும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியை மையமாக வைத்து, உருவாக்கப்பட்ட காதல் கதை இது.

விக்ரமாதித்யா (பிரபாஸ்) ஒரு கைரேகை நிபுணர். கை ரேகையைப் பார்த்து அவர் சொல்லும் கணிப்புகள் தப்பவே தப்பாது. அவர் இந்தியாவிலிருந்து வெளியேறி ஐரோப்பிய நாடு ஒன்றில் வசித்து வருகிறார். அங்கே ப்ரேரனா (பூஜா ஹெக்டே) என்ற இளம் மருத்துவரைச் சந்திக்கிறார். இருவரும் பழக ஆரம்பித்த பிறகு, ப்ரேரனா விக்ரமாதித்யாவை காதலிப்பதாகச் சொல்கிறாள். ஆனால், தனக்கு காதலிக்கும் யோகம் இல்லை என மறுக்கிறான் விக்ரமாதித்யா.

இதற்கிடையில் ஒருவரின் ஆயுள் விரைவில் முடியுமென மருத்துவம் சொல்கிறது. மற்றொருவரின் ஆயுள் விரைவில் முடியுமென கைரேகை சொல்கிறது. இந்தத் தடைகளைத் தாண்டி காதலர்கள் இணைகிறார்களா என்பது மீதிக் கதை.

பிரமாண்டமான ஒரு காவியக் காதல் திரைப்படத்தை உருவாக்க நினைத்திருக்கிறார் இயக்குநர். இதில் பிரமாண்டத்தை உருவாக்குவது எளிது. ஆனால், காவியங்களை படைப்பது அவ்வளவு சாதாரணமல்ல. ஆகவே, முடிவில் பிரம்மாண்டமான காட்சிகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன.

கதாநாயகனுக்கும் நாயகிக்கும் இடையிலான காதல் படம் நெடுகவே படு செயற்கையாக அமைந்திருக்கிறது.

நாயகன் நாயகியை ஈர்க்க செய்யும் காட்சிகள் எல்லாம் பிரமாண்டமான பின்னணியில், அமெச்சூர்த்தனமாக அமைந்திருக்கின்றன. காதலர்கள் வரும் காட்சிகள் மட்டுமல்லாமல், படத்தில் வரும் எல்லா பாத்திரங்களுமே செயற்கையாக, உயிரற்றதாக அமைந்திருப்பதால் படத்தோடு ஒன்றவே முடியவில்லை.

இந்தக் காரணத்தால், கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் உயிருக்கு ஆபத்து என்று தெரியவரும்போது, "அப்படியா? அப்ப படம் சீக்கிரம் முடிஞ்சிருமா?" என்ற விடுதலை உணர்வுதான் தோன்றுகிறது.

இம்மாதிரி காவிய திரைப்படங்களில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருக்க வேண்டுமென்பது எழுதப்படாத விதி. அதனால், மனதில் பதியாத பல கேரக்டர்கள் படத்தில் வந்து போகிறார்கள். குறிப்பாக, கதாநாயகன் வீட்டில் ஒரு கேரக்டர் சரியாக சாப்பிடும் நேரத்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டுப் போகிறார். கதைக்குத் தேவையில்லாத அவர் வருவதுகூட பரவாயில்லை. நகைச்சுவை என்று கருதி அவர் பேசும் வசனங்களைத்தான் தாங்க முடியவில்லை.

நாயகனாக வரும் பிரபாசும் நாயகியாக வரும் பூஜா ஹெக்டேவும் இந்தக் கதையில் என்ன செய்ய முடியுமோ அதைச் செய்திருக்கிறார்கள். மற்ற பாத்திரங்களைப் பொறுத்தவரை, பல மொழிகளிலும் தெரிந்த முகங்கள் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக வெவ்வேறு மொழி திரையுலகில் பிரபல நடிகர்களை தேர்வுசெய்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.

பின்னணி இசையும் பாடல்களும் பரவாயில்லை ரகம். இது ஒரு 'பீரியட்' திரைப்படம் என்பதால், கலை இயக்குநர் ரொம்பவுமே மெனக்கெட்டிருக்கிறார். ஒளிப்பதிவும் சிறப்பாக இருக்கிறது.

ஆனால், திரைக்கதை மிகச் சுமாராக இருப்பதால், ஆன்மாவே இல்லாத ஒரு சினிமாவாக கடந்து போகிறது இந்த 'ராதே ஷ்யாம்'.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 43-வது முறையாக நீட்டிப்பு.!

ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்.. ஆளுநர் அழைப்பு..!

பிரதமர் மோடி ரஷ்யா, ஆஸ்திரியா நாடுகளுக்கு பயணம் பயணம்.. புதின் உடன் முக்கிய பேச்சுவார்த்தை..!

அடுத்த கட்டுரையில்
Show comments