Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாத் ஸ்டூடியோ: காணாமல் போன இளையராஜாவின் கூடம் - வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட ஒரே அரங்கு

Webdunia
திங்கள், 28 டிசம்பர் 2020 (23:59 IST)
இசை அமைப்பாளர் இளையராஜா பிரசாத் ஸ்டூடியோவில் தியானம் செய்வது தொடர்பாகவும், அங்கு இருந்த அவரது இசைக்குறிப்புகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை பெறவும் அந்த ஸ்டூடியோவுக்கு சென்ற இளையராஜா தரப்புக்கு திங்கட்கிழமை ஏமாற்றமே மிஞ்சியது. காரணம், அந்த ஸ்டூடியோவுக்குள் இளையராஜா முன்பு பயன்படுத்திய இசை அரங்கு மற்றும் தியான அறை இரண்டுமே அங்கு இல்லை. அந்த இடம் மாற்றப்பட்டிருப்பதாக இளையராஜா தரப்பு கூறுகிறது.
 
இந்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின்படி இளையராஜா தரப்பு, அவரது பொருட்களை திரும்பப்பெறுவது தொடர்பாக பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்றது. இளையராஜா சார்பில் அவரது வழக்கறிஞர் சரவணன் சென்றிருந்தார். இந்த நிலையில், இளையராஜாவின் தியான அறையே அங்கு இல்லை என்று பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரவணன் தெரிவித்தார்.
 
"இளையராஜா தியானம் செய்த அறையே அங்கு இல்லை. அரங்கின் சாவி இளையராஜாவிடமே இருந்தது. ஆனால், அதனுள்ளே இருந்த அவரது பொருட்கள் அனைத்தும் காலி செய்யப்பட்டு வேறு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி இளையராஜாவிடம் தெரிவித்தபோது மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளார். நான் தியானம் செய்த அறையே அங்கு இல்லாதபோது அங்கு நான் வந்து என்ன செய்ய? இந்த தகவலை நீதிமன்றம் நியமித்த வழக்கறிஞரிடம் தெரிவிக்குமாறு இளையராஜா அறிவுறுத்தி இருக்கிறார்," என்று வழக்கறிஞர் சரவணன் கூறினார்.
 
 
தமிழ் ரசிகர்களின் இதயங்களை வென்ற இளையராஜா, அவரது தொழில்முறை வாழ்வின் 40 ஆண்டுகளில் பெரும்பகுதியை செலவிட்ட இடமாக விளங்குகிறது பிரசாத் ஸ்டூடியோ. 1956ஆம் ஆண்டு இந்த ஸ்டூடியோ நிறுவப்பட்டது.
 
அந்த காலகட்டத்தில் பாரதிராஜா உள்ளிட்ட பல இயக்குநர்கள், இளையராஜாவை பார்க்க வேண்டுமென்றால் உடனடியாக வரும் இடம் பிரசாத் ஸ்டூடியோ. ஏனென்றால் இளையராஜா தனது சொந்த வீட்டில் இருந்ததை விட அதிக நாட்களை பிரசாத் ஸ்டூடியோவில் தான் கழித்திருந்தார்.
 
1976ஆம் ஆண்டு இளையராஜா முதன்முதலில் இசையமைத்த 'அன்னக்கிளி' திரைப்படத்துக்கான பாடல் பதிவு ஏவிஎம் ஸ்டூடியோவில் நடைபெற்றது. பின்னர் அன்னக்கிளி திரைப்படத்தின் பின்னணி இசை கோர்ப்பு பணிகள் விஜயா வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தபோது இளையராஜா பல ஸ்டூடியோக்களில் மாறி, மாறி இசை அமைப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
 
பிரசாத் ஸ்டூடியோ தன் வசதிக்கு ஏற்ப இருப்பதை உணர்ந்த இளையராஜா, எல்லா திரைப்படங்களின் இசை பணிகளையும் பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து மேற்கொள்ள முடிவு செய்தார். ஸ்டூடியோ நிர்வாகமும் இளையராஜாவின் கோரிக்கையை ஏற்றது.
 
இளையராஜா புகழின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் அவரைக் காண பிரசாத் ஸ்டூடியோவின் முன்னால் ஏராளமான ரசிகர்கள் காலையில் கூடுவது வழக்கமாக இருந்து வந்தது.
 
தமிழ் சினிமாவில் எண்ணற்ற வெற்றிப் பாடல்களை இளையராஜா ஒரு கவிதையைப் போல எழுதி முடித்தது பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அவரது அந்த அறையில் தான்.
 
இளையராஜா புதிய இசைக் கருவிகள் வாங்கி அலங்கரித்து அழகு பார்த்ததும் பிரசாத் ஸ்டூடியோவில் தான். ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் இளையராஜாவிடம் இசை கற்றுக் கொண்டதும் இதே பிரசாத் ஸ்டூடியோவில் தான். இளையராஜா கொடுக்கும் இசை துணுக்குகளை கம்ப்யூட்டரில் ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்து பல பாடல்களை உருவாக்கியதும் இங்குதான்.
 
 
இளையராஜாவின் இசைக் கூடத்தால்தான் பிரசாத் ஸ்டூடியோவுக்கே பெருமை. அவர் இங்கே வந்த பிறகுதான் ஸ்டூடியோவுக்கும் பெரிய அளவில் வருமானமும் வரத் தொடங்கியது.
 
எல்லா காலகட்டத்திலும் நிர்வாகத்துடன் இணக்கமாக இருந்து வாடகை உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் சரியாகவே செய்து வந்திருக்கிறார் இளையராஜா. தற்போது எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத் நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பிறகும் கூட, எப்போதும் போலவே இளையராஜா செயல்பட்டிருக்கிறார்.
 
ஆனாலும், நிர்வாகத்தினரை கேட்காமல் இசைக்கூடத்தின் வடிவமைப்பை மாற்றுவது, இசை உபகரணங்களை மாற்றுவது என தனது சொந்த இடத்தைப் போல அவர் நிர்வகித்தது சாய் பிரசாத்துக்குப் பிடிக்கவில்லை. இது தொடர்பாக இளையராஜாவிடம் பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத்தினர் முன்வந்தபோதும் அவர் பேச முன்வரவில்லை என கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கும், பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும் இடையே பனிப்போர் மூண்டது.
 
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இசைக்கூடம் இருந்த இடத்தில் வேறொரு கட்டடம் கட்ட திட்டமிட்டிருப்பதாகக் கூறி, அந்த இடத்தை காலி செய்ய கால அவகாசம் அளித்துள்ளனர். இதற்கு இளையராஜா தரப்பிலிருந்து சரியான பதில் இல்லையாம். இதுதான் பிரசாத் ஸ்டூடியோவின் தற்போதைய நிர்வாகத்துக்கு கோபம் அதிகரிக்க காரணம்'' என்கின்றனர் இந்த ஸ்டூடியோவின் நிர்வாகப் பிரிவில் பணிபுரிவோர். இளையராஜாவை இங்கிருந்து எப்படி வெளியேற்றுவது என நேரடியாக அவரை கட்டாயப்படுத்த முடியாத சூழலில், அவர் இல்லாத நேரத்தில் ஸ்டூடியோவுக்குள் இருந்த அவரது இசைப் பொருட்களை வெளியில் எடுத்து வைத்ததாகவும் தகவல்கள் வந்தன.
 
இதனால் தனது இசை வேலைகளுக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி காவல் துறையினரிடம் இளையராஜா தரப்பு புகார் அளித்துள்ளது. அந்தப் புகார் தற்போது வழக்கு வரை நீண்டுள்ளது.
 
இளையராஜா சென்டிமென்ட் ஆக கருதும் இடம் அது. இறுதியாக மிஷ்கின் இயக்கத்தில் உருவான 'சைக்கோ' படத்துக்கு இசைப் பணிகளை மேற்கொண்ட பிறகு, இளையராஜா பிரசாத் இசைக்கூடத்துக்கு செல்லவே இல்லை.
 
இந்த காலகட்டத்தில் இளையராஜாவின் இசை அரங்க வளாகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் பிரசாத் நிர்வாகம் கொண்டு வந்து விட்டது.
 
இளையராஜா
 
ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா வழக்கு
இந்த நிலையில்தான், பிரசாத் ஸ்டூடியோவை விட்டு தன்னை வெளியேற்றியதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி ஸ்டூடியோ அதிபர்கள் மீது இளையராஜா சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
இந்த வழக்கை விரைவுபடுத்தி விசாரிக்க உத்தரவிடுமாறும் தன்னை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்க உத்தரவிடுமாறும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஸ்டூடியோவில் இருந்த தனக்குச் சொந்தமான பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்காமல் தன்னை வெளியேற்றியது நியாயமற்றது என்றும், தன் வசமுள்ள ஒலிப்பதிவு அரங்கில் தலையிட பிரசாத் ஸ்டூடியோவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் இளையராஜா கேட்டுக் கொண்டிருந்தார்.
 
 
இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோநிபந்தனை
 
இதையடுத்து, சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இந்த வழக்கை திரும்பப் பெற்றால் இளையராஜாவை பிரசாத் ஸ்டூடியோவுக்குள் அனுமதிக்கத் தயார் என்று பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்த நிலையில், சென்னை நீதிமன்றத்தில் இளையராஜா புது மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இசைக்கூடத்தில் தனது இசை கருவிகள், இசை கோப்புகள், விருதுகள் உள்ளதாகவும், அவற்றை எடுத்துச் செல்ல தன்னை அனுமதிக்க நிர்வாகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்" என்று அவர் குறிப்பிட்டார்.
 
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, "இளையராஜாவை ஸ்டூடியோவுக்குள் அனுமதித்தால் ரசிகர்கள் அதிகளவு கூடுவார்கள். பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்பதால், அவரின் பிரதிநிதிகள் பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்," என்றும் பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
 
ஸ்டூடியோவுக்குள் உள்ள பொருட்களை எடுக்க வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிப்பதாகவும், அவருடன் இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர்கள், இரு தரப்பு வழக்கறிஞர்கள் ஆகியோர் செல்லலாம் என்றும் நீதிமன்றம் யோசனை தெரிவித்தது.
 
இதையடுத்து, இசைக்கருவிகள் அப்படியே பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருந்தால் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரான இழப்பீட்டு வழக்கை கைவிடுகிறோம் என்று இளையராஜா தரப்பு வழக்கறிஞர் சென்னை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
 
இந்த நிலையில், பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து தன்னை வெளியேற்றியதை எதிர்த்தும் தியானம் செய்ய ஒரு நாள் அனுமதிக்கக் கோரியும் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பாக கடந்த 4 நாட்களாக விசாரணை நடைபெற்று வந்தன.
 
அப்போது பிரசாத் ஸ்டூடியோ தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதாவது தங்களுக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றால் இளையராஜாவையும் அவரது உதவியாளர்களையும் ஸ்டூடியோவிற்குள் அனுமதிக்கத் தயார் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் அவர் இசையமைத்த பகுதியின் இடத்துக்கு அவர் உரிமைகோரக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற இளையராஜா தனது வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.
 
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, பிரசாத் ஸ்டூடியோவுக்கு செல்ல இளையராஜாவுக்கு ஒரு நாள் மட்டும் அனுமதி வழங்கினார். பிரசாத் ஸ்டூடியோவுக்கு சென்று இசைக்கருவிகளை எடுக்கும் தேதியை இரு தரப்பும் பேசி முடிவு செய்யலாம் எனவும் நேரத்தை பொறுத்தவரை, காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்குள் அதாவது அந்த 7 மணி நேரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.
 
அதே நேரத்தில் இளையராஜா தியானம் மேற்கொள்வது குறித்து இரு தரப்பும் பேசி முடிவெடுத்துக்கொள்ளலாம் எனவும் நீதிபதி அறிவுறுத்தினார். இளையராஜா பிரசாத் ஸ்டூடியோ செல்லும்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments