Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு

நிலம் கையகப்படுத்தப்படும் சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்பு
, செவ்வாய், 24 பிப்ரவரி 2015 (20:07 IST)
நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய நிலம் கையகப்படுத்தும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையிலிருந்து காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்புச் செய்துள்ளனர்.
தற்போது அரசு கொண்டுவந்திருக்கும் இந்த மசோதா, விவசாயிகளின் நலனைக் கடுமையாகப் பாதிக்கும் என இதன் எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 
உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக நிலத்தை எளிதாகக் கையகப்படுத்த இந்த மசோதா வழி வகுக்கிறது.
 
நிலம் இல்லாததால் நிறுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை செயல்படுத்தும் நோக்கோடு இந்த மசோதா கொண்டுவரப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே தலைமையிலும் டெல்லியில் இன்று போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.
 
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த இந்தப் போராட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், சமூகப் போராளி மேதா பட்கர் ஆகியோரும் பங்கேற்றனர்.
webdunia
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் தமிழக விவசாயிகள் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
 
இதற்கு முன்பிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய நிலம் கையகப்படுத்தும் சட்டம், நிலங்களை விவசாயிகளிடமிருந்து தொழிற்சாலைகளுக்காக கையகப்படுத்துவதை கடினமான ஒன்றாக மாற்றியிருந்தது.
 
தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கும் திட்டங்களுக்கு கையகப்படுத்தப்படும் நிலங்களின் 70 சதவீத உரிமையாளர்களின் ஒப்புதல் தேவை. தனியார் திட்டங்களுக்கு 80 சதவீத உரிமையாளர்கள் சம்மதமளிக்க வேண்டும்.
 
கடந்த டிசம்பர் மாதம் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் பாதுகாப்பு, கிராமப்புற கட்டமைப்பு, விலை குறைந்த வீடுகள், தொழிற்பேட்டைகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளை நீக்கியது.
 
இம்மாதிரியான திட்டங்கள், மக்களின் நிலம், வாழ்க்கை மீது ஏற்படுத்தும் தாக்கம், பொருளாதார, பண்பாட்டுத் தாக்கம் ஆகியவை குறித்து ஒரு சுயேச்சையான நிபுணர் குழுவின் மூலம் மதிப்பீடு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் அரசு நீக்கியது.
 
இந்த அவசரச் சட்டத்தை தற்போது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதில் கடும் சிக்கலை பாரதீய ஜனதாக் கட்சி அரசு சந்தித்துவருகிறது. நாடாளுமன்ற மேலவையில், அக்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாததால், இந்தச் சட்டத்தை நிறைவேற்ற எதிர்க்கட்சியினரின் ஒத்துழைப்பு அரசுக்குத் தேவை.
 
முக்கியமான மசோதாக்களை நாடாளுமன்றத்தை புறக்கணித்துவிட்டு, அவசரச் சட்டங்களின் மூலம் நடைமுறைப்படுத்துவதாக மக்களவையில் செவ்வாய்க்கிழமையன்று காங்கிரஸ் கட்சியின் ஆனந்த் ஷர்மா குற்றம்சாட்டினார்.
 
மக்களவையில் அதிக அளவிலான உறுப்பினர்களை கொண்ட நான்காவது பெரிய கட்சியான அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும், நிலம் கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராடி வருகிறார்கள்.
 
திங்கட்கிழமையன்று நாடாளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி, நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்களை ஆதரித்துப் பேசினார். முக்கியமான பொது நலன் சார்ந்த திட்டங்களுக்கு நிலம் கிடைப்பதில் இருக்கும் சிரமத்தை இது குறைக்கும் என்று அவர் கூறினார்.
 
இந்தச் சட்டம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் அமளியின் காரணமாக, வரவு-செலவுத் திட்டம் தாக்கல்செய்யப்படுவது உள்ளிட்ட நாடாளுமன்றத்தின் பிற பணிகளும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil