Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு சொகுசு கப்பல், 2 விமானங்கள், 100 மரணங்கள், 2000 ஐ - ஃபோன்கள் - கடந்த 24 மணி நேரத்தில் நடந்தவை

Webdunia
திங்கள், 17 பிப்ரவரி 2020 (18:02 IST)
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள அமெரிக்கர்கள் மீட்கப்பட்டுவிட்டனர்.
டயமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள உள்ள 3,700 பேரில் 285 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அந்த கப்பல்  தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த கப்பலில் 400 அமெரிக்கர்கள் இருந்தனர். அவர்களில் குறைந்தது 40 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர்.  அவர்களை மீட்கும் பணியை நேற்று அமெரிக்க முன்னெடுத்தது.
 
இரண்டு விமானங்களில் அவர்களை அழைத்துக் கொண்டு டோக்கியோவிலிருந்து உள்ளூர் நேரப்படி இன்று (திங்கள்கிழமை) அதிகாலை அமெரிக்கா புறப்பட்டது.  ஆனால், அதே நேரம் சில அமெரிக்கர்கள் அந்த கப்பலிலிருந்து வெளியேற மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
பிப்ரவரி 19 வரை இந்த கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின் அந்த கப்பலில் பயணம் செய்தவர்கள் வெளியேறலாம். சில அமெரிக்கர்கள் 19ஆம்  தேதிக்குப் பின் அந்த கப்பலிலிருந்து வெளியேற முடிவு செய்துவிட்டதாகத் தெரிகிறது.
 
மேத்யூ ஸ்மித் எனும் ஒரு பயணி, "நான் ஒரே பேருந்தில் கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்ய விரும்பவில்லை. அதனால்,  கப்பலிலேயே இருக்க முடிவு செய்துவிட்டேன். 19ஆம் தேதிக்கு பின் நான் அமெரிக்கா செல்வேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
 
2000 ஐ-ஃபோன்கள்
 
கப்பலில் உள்ளவர்களுக்கு தகவல் தொடர்பில் உதவும் விதமாக 2000 ஐ-ஃபோன்களை ஜப்பான் அரசு அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு வழங்கி உள்ளது.
 
ஜப்பான் சுகாதார துறை ஒரு சுகாதார செயலியை உருவாக்கி உள்ளது. என்ன மருந்து எடுத்து கொள்ள வேண்டும், மனநல ஆரோக்கியத்துக்கான ஆலோசனைகள்  போன்ற தகவல்கள் அந்த செயலி மூலம் வழங்கப்படும். சீனாவுக்கு வெளியே இந்த அளவு எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் குழுமி  இருப்பது அந்த சொகுசு கப்பலில் மட்டுமே.
சீனாவின் நிலை
 
நேற்று அதாவது பிப்ரவரி 16 சீனா சுகாதார துறை வழங்கி இருக்கும் தகவலின்படி ஹூபே மாகாணத்தில் 100 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர்.  சனிக்கிழமை இந்த எண்ணிக்கை 139ஆக இருந்தது. புதிதாக 2048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹூபே மாகாணத்தில் மட்டும் 1933 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சீனா முழுவதும் 70,500 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹூபேவில் மட்டும் 58,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1692 பேர் பலியாகி உள்ளனர்.  சீனாவுக்கு வெளியே 4 பேர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், ஹாங்காங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் தலா ஒருவர் பலி. முப்பது  நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளது.
 
இந்தியாவின் நிலை
 
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹானிலிருந்து இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்ட 406 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று இறுதிக்கட்ட  பரிசோதனையில் உறுதியாகியுள்ளது என இந்திய-திபெத்திய எல்லைக் காவல் படை (ஐடிபிபி) தெரிவித்துள்ளது.
 
அதே நேரம் ஜப்பான் கடல் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள இந்தியர்களில் மேலும் இருவருக்கு அந்த வைரஸ் பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே 3 இந்தியர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி  செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் இருவருக்கு அந்த தொற்று உறுதியாகியுள்ளது.
 
தமிழகத்தின் நிலை
 
கொரோனா பாதிப்புள்ள சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 45,180 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 2,181 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரித்து வரும் இணைய குற்றம்: 6.69 லட்சம் சிம் கார்டுகளை முடக்கிய மத்திய அரசு..!

தமிழகத்தில் மழை எச்சரிக்கை வாபஸ்.. ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு..!

டெங்கு காய்ச்சலால் நர்சிங் படித்த பெண் உயிரிழப்பு.. வாலாஜாபேட்டை அருகே சோகம்..!

ஸ்பேஸ் ஒன் ராக்கெட் திட்டம் தோல்வி.. 100 கிமீ உயரம் சென்றபோது வெடிக்க வைத்த விஞ்ஞானிகள்..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா.. 31 எம்பிக்கள் கொண்ட கூட்டுக்குழு அமைப்பு.. யார் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments