Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடுதல் உடல்பருமன் புற்றுநோயை அதிகரிக்கும்

கூடுதல் உடல்பருமன் புற்றுநோயை அதிகரிக்கும்
, புதன், 27 மே 2015 (15:57 IST)
இளம்பருவத்தில் கூடுதல் எடை கொண்டவராக, அதிகமான உடல்பருமனுடன் இருப்பவர்கள், வளர்ந்து பெரியவர்களாகும்போது அவர்களுக்கு குதப்புற்றுநோய் தோன்றுவதற்கான சாத்தியங்கள் அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
 

 
இது தொடர்பாக ஸ்வீடனில் நடந்த ஆய்விற்காக சுமார் 2,40,000 ஆண்களை முப்பத்தி ஐந்து ஆண்டுகள் மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்தார்கள்.
 
அந்த ஆய்வின் முடிவுகள் Gut என்கிற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி இளம்பருவத்தில் அதிக உடல்பருமனோடும் கூடுதல் எடையுடனும் காணப்பட்டவர்களுக்கு, மற்றவர்களைவிட இரண்டுமடங்கு அதிகமாக குதப்புற்றுநோய் வருவதற்கான சாத்தியங்கள் இருப்பது தெரியவந்திருக்கிறது.
 
பதின்பருவத்தில் கூடுதல் எடையுடன் இருப்பவர்களுக்கு இந்த ஆபத்து மேலும் அதிகமாக இருப்பதாகவும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.
 
கூடுதல் உடல்பருமனுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பு வலுவானது என்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் தெரிவித்துள்ளது.
 
உலக அளவில் மனிதர்களைத் தாக்கும் புற்றுநோய்களில், மூன்றாவது பெரிய புற்றுநோயாக குதப்புற்றுநோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஒவ்வொரு ஆண்டும் சுமார் பதினான்கு லட்சம் பேருக்கு புதிதாக குதப்புற்றுநோய் ஏற்படுகிறது.
 
பதப்படுத்தப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிடுவதும், வயிற்றுப்பகுதியில் கொழுப்பு சேர்வதற்கு அனுமதிப்பதும் குதப்புற்றுநோயை தூண்டுவதாக முந்தைய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
 
ஸ்வீடனில் நடந்த இந்த ஆய்வுக்கு உள்ளானவர்கள் துவக்கத்தில் 16 முதல் 20 வயதுவரையில் இருந்தார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் சராசரி எடையுடையவர்கள். ஆனால் 6.5 சதவீதமானாவர்கள் எடைகூடியவர்கள். ஒரு சதவீதமானவர்கள் மிகவும் குண்டானவர்களாகவும் இருந்தார்கள்.
 
இவர்களில் 855 பேருக்கு குதப்புற்றுநோய் உருவானது. அதேசமயம் இந்த குதப்புற்றுநோய் தோன்றியவர்களின் எடையை கணக்கில்கொண்டு அவர்களை தரம்பிரித்துப் பார்த்ததில், சராசரி எடையுடையவர்களோடு ஒப்பிடும்போது கூடுதல் எடை கொண்டவர்கள் 2.38 சதவீதம் அதிகமாக குதப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
 
இளமைப்பருவத்தின் இறுதிப்பகுதியில் சிறுவனுக்கான உடலானது, முழு ஆண்மகனாக வளரும் நேரம் உடல் அவயவங்கள் அதிவேகமாக வளரும். அந்த சமயத்தில் நடக்கும் குறிப்பிட்ட மாற்றங்களில் தான் இந்த புற்றுநோயை அதிகப்படுத்தும் காரணியும் நிகழக்கூடும் என்று இந்த ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஒருவரின் உணவுப்பழக்க வழக்கங்களையொட்டியே அவரது உடல் பருமனும், எடையும் பெருமளவு அமையும் என்று கூறியிருக்கும் உலக புற்றுநோய் ஆய்வு நிதியத்தைச் சேர்ந்த ராச்சல் தாம்ப்ஸன், கூடுதல் உடல் எடை மற்றும் பருமனை கட்டுப்படுத்துவதன்மூலம் குதப்புற்றுநோய் உருவாவதையும் கட்டுப்படுத்த முடியும் என்கிற சாத்தியம் நம்பிக்கையளிப்பதாக தெரிவித்திருக்கிறார்.
 
அதேசமயம், இது குறித்த மேலதிக ஆய்வுகள் தேவை என்பதையும் அவர் வலியுறுத்தியிருக்கிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil