Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்ச்சைக்குரிய 66ஏ சட்டப் பிரிவுக்கு யார் பொறுப்பு?: ஆ.ராசா விளக்கம்

சர்ச்சைக்குரிய 66ஏ சட்டப் பிரிவுக்கு யார் பொறுப்பு?: ஆ.ராசா விளக்கம்
, வெள்ளி, 27 மார்ச் 2015 (20:55 IST)
தகவல்தொழில்நுட்பச் சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவான 66ஏ பிரிவுக்கு ஒட்டுமொத்த அமைச்சரவையுமே பொறுப்பு என்றும், தன்னை மட்டுமே பொறுப்பாக்கக்கூடாது என்றும் முன்னாள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா கூறியுள்ளார்.
இணையத்தில் தெரிவிக்கும் கருத்துகள் ஆட்சேபகரமாக இருந்தால், கருத்துத் தெரிவித்தவரை கைதுசெய்ய வழிவகுக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66ஏ பிரிவை ரத்துசெய்து சமீபத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்த நிலையில், இந்த சட்டம் குறித்து பேசிய முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ், முன்னாள் மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா தான் இந்த பிரிவை உருவாக்கியவர் என்று கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
 
இதையடுத்து, இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் ஆ.ராசா, இது போன்ற சட்டங்கள் உருவாகும்போது, அதனை ஒட்டுமொத்த அமைச்சரவையின் முடிவாகத்தான் கருத வேண்டுமே தவிர, தனிப்பட்ட ஒருவன் மீது பழி சொல்வது ஜனநாயக நெறிமுறைகளுக்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளார்.
 
அனைத்து ஆய்வு நடவடிக்கைகளுக்கும் உட்படுத்தப்பட்ட பிறகுதான் இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேறியது என்றும் ஆ.ராசா கூறியுள்ளார்.
 
ஒரு சட்டம் அப்போதைய காலகட்டத்தின் அவசியம் கருதி இயற்றப்படுவதும் பிறகு திருத்தம் கொண்டுவருவதும், ரத்து செய்யப்படுவதும் கடந்த காலத்திலும் நடந்திருக்கின்றன என்று ஆ.ராசா தன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil