Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை

மனோரமா: பள்ளத்தூரிலிருந்து வந்த படிக்காத மேதை
, திங்கள், 12 அக்டோபர் 2015 (15:11 IST)
தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் 1943ஆம் ஆண்டு மே மாதம் 26ஆம் தேதி பிறந்தவர் நடிகை மனோரமா. அவரது இயற்பெயர் கோபிசாந்தா. அவருடைய குடும்பம் மன்னார்குடியில் இருந்து காரைக்குடி அருகேயுள்ள பள்ளத்தூருக்கு இடம்பெயர்ந்தது.
 

 
குடும்பச்சூழல் காரணமாக 12 வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். நாடக நடிகையானபோது அவருக்கு மனோரமா என்கிற பெயர் சூட்டப்பட்டது. நடிப்பு, பாட்டு, வசன உச்சரிப்பு, நடனம் என்று அனைத்திற்காகவும் அவர் நாடக உலகில் பாராட்டப்பட்டார்.
 
வைரம் நாடக சபா உள்ளிட்ட தொழில்முறை நாடக நிறுவனங்கள் பலவற்றில் நடித்துக்கொண்டிருந்த மனோரமாவை மேடை நாடகக் கலைஞராக பெரிய அளவில் அடையாளம் காட்டியது திராவிட இயக்கத்தின் பிரச்சார நாடகங்கள்தான்.
 
திமுக நிறுவனர் அண்ணா, மு. கருணாநிதி, எஸ் எஸ் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி திராவிட இயக்கத்தலைவர்களுடன் அவர் மேடை நாடகங்களில் நடித்தார். அவரது தெளிவான வசன உச்சரிப்பும், உச்சஸ்தாயியில் அநாயாசமாக பாடும் வல்லமையும் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தன.
 
மாலையிட்ட மங்கையாக திரைப்படத்துறைக்குள் வந்தார்:
 
நாடக நடிகையாக இருந்த மனோரமாவை கவியரசு கண்ணதாசன் திரையுலகில் அறிமுகம் செய்தார். கண்ணதாசன் தயாரித்து 1958 ஆம் அண்டு வெளியான "மாலையிட்ட மங்கை" என்கிற திரைப்படத்தில் அறிமுகமானார் மனோரமா.
 
webdunia

 
மனோரமா முதன்முதலில் கதாநாயகியாக நடித்த திரைப்படம் "கொஞ்சும் குமரி". மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் தயாரித்து 1963ஆம் ஆண்டு வெளியானது இந்த திரைப்படம்.
 
அதேசமயம் மனோரமா என்ற மாபெரும் நடிகையின் நடிப்புத்திறன் பெரிதும் வெளிப்பட்ட முக்கிய திரைப்படமாக தில்லானா மோகனாம்பாள் படத்தையே திரை விமர்சகர்கள் இன்றளவும் குறிப்பிடுகிறார்கள்.
 
அந்த திரைப்படத்தின் கதாநாயகன் சிக்கல் சண்முகசுந்தரமாக நடித்த சிவாஜிக்கும், திருவாரூர் மோகனாம்பாளாக நடித்த பத்மினிக்கும் சற்றும் சளைக்காமல், ‘ஜில் ஜில் ரமாமணி’ என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துப் பாராட்டைப் பெற்றார் மனோரமா.

ஜில் ஜில் ரமாமணியாக சிரிக்கவைத்தார்:
 
ஜில் ஜில் ரமாமணி கதாபாத்திரம் நகைச்சுவை நடிகையாக மனோரமா புகழ் பதித்த பல திரையுலக பாத்திரங்களில் முக்கியமானதாக இன்றுவரை பேசப்படுகிறது.
 
அரை நூற்றாண்டுகாலம் தமிழ்த் திரையுலகின் கதாநாயகர்கள், நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் ஆகியோருக்கு ஈடுகொடுத்து நடித்து புகழ் பெற்றவர் மனோரமா.
 
webdunia

 
அவர் திரைத்துறையில் அறிமுகமானபோது தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னர்களாக திகழ்ந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் படங்களில் துவங்கி கமல், ரஜினி படங்களில் அவர்களுக்கு போட்டி போட்டு நடித்தவர், நாகேஷ், சோ, தேங்காய் சீனிவாசன், தங்கவேலு, சுருளிராஜன், கவுண்டமணி எனப் பல நகைச்சுவை நடிகர்களுடன் நடித்தவர், பாக்கியராஜ், சத்யராஜ் என்று பலதரப்பட்ட நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் மனோரமா. நகைச்சுவையாக மட்டுமல்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் மனோரமாவின் நடிப்பு முத்திரை பதித்தது. தனித்துவம் வாய்ந்தது.
மேலும் அடுத்தப் பக்கம்....

 
நகைச்சுவைக்கு மட்டுமல்ல நவரசங்களுக்கும் நாயகி என பாராட்டப்பட்டார்:
 
நகைச்சுவை நடிப்போடு அவரது தனித்துவமான குரலில் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்களும் இன்றளவும் ரசிகர்கள் நினைவில் நிற்பவை. மனோரமாவைத் திரையில் முதலில் பாட வைத்தவர் இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷ். மகளே உன் சமத்து என்ற படத்தில் ‘தாத்தா.. தாத்தா பிடிகொடு. இந்த தள்ளாத வயசிலே சடுகுடு’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா.
 
webdunia

 
பொம்மலாட்டம் படத்தில் வி.குமாரின் இசையில் ‘வா.. வாத்யாரே வூட்டாண்ட.. நீ வராங்காட்டினா வுடமாட்டேன்” என்று சென்னை வழக்கில் மனோரமா பாடிய பாடல்; கருந்தேள் கண்ணாயிரம் படத்தில், ‘பூந்தமல்லியிலே ஒரு பொண்ணு பின்னாலே.. நான் போயி வந்தேன்டி அவ பொடவ நல்லால்லே..” என்று அவர் பாடிய பாடல்; பாட்டி சொல்லைத் தட்டாதே படத்தில் சந்திரபோஸ் இசையில், ‘டெல்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே‘ என்ற பாடல்; ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மே மாதம் படத்தில், ‘மெட்ராஸை சுத்திப்பார்க்கப் போறேன்‘ என்கிற பாடல் என மனோரமாவின் கம்பீரமான குரலில் ஒலித்தபாடல்கள் இன்றளவும் பிரபலமாக இருக்கின்றன.
 
ஆயிரம் படங்களைத்தாண்டிய ஆச்சி:
 
தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், இந்தி உள்பட 1000 படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்திருப்பவர் மனோரமா. அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்திற்கு அதிகம். திரைப்படத்துறையில் முன்னணி நடிகையாக இருந்தபோதும் அவர் மேடை நாடகங்களில் தொடர்ந்து நடித்தவர். அவர் நடித்த மேடை நாடகங்களின் எண்ணிக்கை 5000 வரை இருக்கலாம் என்றும் சில புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளன.
இது தவிர பல வானொலி நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்களிலும் மனோரமா நடித்திருக்கிறார். உலகின் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நாடகங்களும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தியவர் அவர்.
 
இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ, சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது, தமிழக அரசின் கலைமாமணி விருதுகளுடன் ஏராளமான திரைத்துறைக்கான விருதுகளையும் மனோரமா பெற்றிருக்கிறார்.
 
ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர்:
 
திமுக நிறுவனர் சி என் அண்ணாதுரை, மு. கருணாநிதி, அதிமுக நிறுவனர் எம் ஜி ராமச்சந்திரன், ஜெ ஜெயலலிதா, ஆந்திராவின் தெலுகு தேசம் நிறுவனர் என் டி ராமராவ் என ஐந்து முதல்வர்களுடன் நடித்தவர் மனோரமா.
 
webdunia

 
சுமார் 50 அண்டு காலம், ஆயிரம் திரைப்படங்களுக்கும் மேலாக நடித்திருக்கிறார். மிகச்சிறந்த நடிப்பாற்றல், தெளிவான வசன உச்சரிப்பு, கணீர் குரலில் பாட்டு என அவரது பன்முகத்திறமைகள் அவரை சுமார் அரை நூற்றாண்டுகாலம் திரையுலகில் அசைக்க முடியாத ஆளுமையாக வைத்திருந்தது.
 
தமிழ் திரைப்படத்துறையில் கலைவாணரில் தொடங்கி இன்றைய இளம் நகைச்சுவை நடிகர்கள் வரை ஆண் நகைச்சுவை நடிகர்களுக்கு என்றொரு தொடர்ச்சியான நெடிய பாரம்பரியம் உண்டு.
 
ஆனால், நகைச்சுவை நடிகைகளுக்கு அப்படியானதொரு தொடர்ச்சியான பாரம்பரியம் இல்லை என்கிற விமர்சனம் உண்டு. தமிழில் நகைச்சுவை நடிகைகளின் எண்ணிக்கை குறைவு என்பது மட்டுமல்ல, நகைச்சுவை நடிகைகள் நீடித்து நிலைப்பது இல்லை. நகைச்சுவைக்கென வரும் நடிகைகள் குறைவான காலத்தில் கிடைக்கும் வாய்ப்புகளில் பிரகாசித்து விட்டு ஒதுங்கிவிடுவார்கள்.
 
ஆனால், மனோரமா அதிலும் மாறுபட்டவர். பெருமளவு ஆண்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதொரு துறையாக வர்ணிக்கப்படும் தமிழ்த் திரைப்படத் துறையில் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக அசைக்க முடியாத நடிகையாக நிலைத்திருந்தவர் ஆச்சி என்று அன்பு கலந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட நடிகை மனோரமா. அவரின் புகழ் அடுத்த நூற்றாண்டிலும் பேசப்படும் என்கிறார்கள் திரை விமர்சகர்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil