Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

Prasanth Karthick
ஞாயிறு, 24 நவம்பர் 2024 (13:03 IST)

இந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாடி அதிக இடங்களை கைப்பற்றியது. அதனால், சட்டமன்ற தேர்தலிலும் இக்கூட்டணி வெற்றி பெறும் என கருதப்பட்டது.

 

 

ஆனால், இந்த கணிப்பு தவறானது என ஹரியாணாவில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. அது மகாராஷ்டிராவிலும் நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது. பாஜக இத்தேர்தலில் 132 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

 

மக்களவைத் தேர்தலின் போது மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவை தொகுதிகளில், மகா விகாஸ் அகாடி கூட்டணி 30 தொகுதிகளை கைப்பற்றியது. பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு 18 இடங்களே கிடைத்தன. அத்தேர்தலில் தான் போட்டியிட்ட 23 தொகுதிகளில் 9 தொகுதிகளை மட்டுமே வென்றது பாஜக.

 

பாஜகவால் இதை எப்படி செய்ய முடிந்தது?
 

மக்களவை தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது மகாயுதி கூட்டணி சட்டமன்ற தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்கும் என கருதப்பட்டது.

 

ஆனால், அதற்கு நேர்மாறாக, மாநிலத்தில் தனிப் பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜகவை சேர்ந்தவரே முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என்ற விவாதங்களும் நடக்கின்றன.

 

ஐந்து மாதங்களில் இந்த வெற்றியை பெறுவதற்கு பாஜக என்ன செய்தது என்பதுதான் இப்போது எல்லோர் மனதிலும் ஒடிக் கொண்டிருக்கிறது.

 

இந்தக் கேள்விக்கு பதிலளித்த மும்பையை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் சமர் காதாஸ், “மகாயுதி அரசின் உத்திதான் இதற்கு காரணம். லாட்லி பேஹன் யோஜனா திட்டம், இந்துத்வா, பல்வேறு சாதிகளை ஒன்றிணைக்கும் உத்தி ஆகியவைதான் பாஜகவுக்கு இந்த வெற்றியை கொடுத்துள்ளன” என்றார்.

 

அவர் கூறுகையில், “இந்த ஐந்து மாதங்களில் பல விஷயங்கள் நடந்துள்ளன. முதலாவதாக, லாட்லி பேஹன் யோஜனா எனும் திட்டம் தொடங்கப்பட்டு நான்கு மாதங்களாக சுமார் 2.5 கோடி பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளது. அதனுடன், 'இந்துக்கள் பிரிந்து கிடந்தால் தோற்றுவிடுவோம்' எனும் முழக்கம் முன்வைக்கப்பட்டது. இதன் மூலம் ஓரளவுக்கு இந்து வாக்குகள் ஒன்றிணைந்துள்ளன” என்றார்.

 

“மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வென்ற போது மராத்தா இடஒதுக்கீடு விவகாரம் ஒரு பிரச்னையாக இருந்தது. மராத்தாக்கள் அந்த சமயத்தில் ஒன்றிணைந்தனர். அப்போது பாஜக தலைவர்கள் சிலர் அரசமைப்பு சட்டத்தை மாற்றுவது குறித்து பேசினர். இது, பௌத்த மற்றும் தலித் வாக்குகளை பாதித்தது. 9-10% பௌத்த வாக்குகள் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கு சென்றன. மராத்தா-தலித் வாக்குகளுடன் முஸ்லிம்களின் வாக்குகளும் அந்த கூட்டணிக்கு வலுசேர்த்தன.” என்று அவர் கூறினார்.

 

“மக்களவை தேர்தலில் 70-80% முஸ்லிம்கள் வாக்களித்தனர். இந்த முறை வாக்களித்த முஸ்லிம்களின் சதவிகிதம் 35-40% என குறைந்தது. அரசமைப்பு குறித்த விவகாரம் பாஜகவால் நன்கு கையாளப்பட்டது. இதனால், தலித் வாக்குகள் மீண்டும் பாஜகவுக்கு கிடைத்துள்ளன. அதனுடன், இட ஒதுக்கீட்டில் துணை பிரிவுகள் உருவாக்கப்பட்டன. இதன்மூலம் பௌத்தர்களின் வாக்குகளும் பாஜகவுக்கு சென்றன.” என்றார் அவர்.

 

பிபிசி மராத்தி பிரிவின் ஆசிரியர் அபிஜித் கம்ப்ளே கூறுகையில், “மக்களவை தேர்தலில் செய்த தவறுகளிலிருந்து இம்முறை பாஜகவின் மகாயுதி கூட்டணி பாடங்களை கற்றுள்ளது” என தெரிவித்தார்.

 

அவர் கூறுகையில், “மகாயுதி கூட்டணி ஓபிசி (பிற பிற்படுத்தப்பட்டோர்) வாக்குகளை தங்களுக்கு சாதகமாக கொண்டு வர முயற்சித்தது. வெங்காயம் அதிகம் விளையும் வட மகாராஷ்டிராவில் விவசாயிகள், வெங்காயம் ஏற்றுமதி மீதான தடையால் கோபத்தில் இருந்தனர், அதற்காக பாஜக கொள்கை மாற்றங்களை செய்தது. அதேசமயம், இதுவரை தங்களுக்கு வராத வாக்குகள் மீதும் பாஜக கவனம் செலுத்தியது. ” என்றார்.

 

திருப்பத்தை ஏற்படுத்திய ‘லாட்லி பேஹன் யோஜனா’

 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் ‘லாட்லி பேஹன் யோஜனா’ திட்டம் ஒரு திருப்பமாக கருதப்படுகிறது.

 

 

அபிஜித் கம்ப்ளே கூறுகையில், இத்திட்டம் இந்த தேர்தலில் ஒரு திருப்புமுனையாக இருந்தது என்கிறார்.

 

அதன்படி, பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வழங்க வழிவகை செய்யப்பட்டது. ஆண்டு குடும்ப வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கும் குறைவாக உள்ள, 21 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பலன் பெற முடியும். இதன்மூலம் அதிகளவிலான பெண்கள் பயன்பெற்றனர்.

 

மூத்த பத்திரிகையாளர் ஜிதேந்திரா தீக்‌ஷித் பிபிசி செய்தியாளர் சுமேதா பாலிடம் கூறுகையில், “இரண்டரை மாதங்களுக்கு முன்பு கேட்டிருந்தால், மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கூறியிருப்பேன். ஆனால், இந்த முறை மகாராஷ்டிரா அரசியலில் பல விஷயங்கள் மாறியுள்ளன. லாட்லி பேஹன் யோஜனா மற்றும் மற்ற அரசு திட்டங்கள் திருப்புமுனை திட்டங்களாக உள்ளன. அதன் தாக்கம் ஊரகப்பகுதிகளிலும் நகர்ப்புறங்களில் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களிடத்திலும் கண்கூடாக தெரிந்தது” என்றார்.

 

“மராத்தா இயக்கம் மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியது. அத்துடன், பிரித்தாளும் அரசியலும் பாஜகவுக்கு சாதகமாக வேலை செய்துள்ளது. “நாம் பிரிந்திருந்தால், தோற்றுவிடுவோம், நாம் ஒன்றாக இருந்தால், பாதுகாப்பாக இருப்போம்’ என்ற முழக்கத்தை பாஜக முன்வைத்தது. ஆர்.எஸ்.எஸ் கடுமையாக வேலை செய்தது. குறிப்பாக விதர்பா போன்ற பகுதிகளில் மகாயுதி கூட்டணிக்காக ஆர்.எஸ்.எஸ். வேலை செய்தது. தேர்தல் நாளன்று வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதிலும் அது முக்கிய பங்கு வகித்தது.” என்று தீக்ஷித் கூறினார்.

 

பிரதமர் நரேந்திர மோதி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் குறைந்த அளவிலேயே பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றதாக அவர் கூறுகிறார். மக்களவை தேர்தலில் எங்கெல்லாம் பிரதமர் பொதுக்கூட்டம் நடத்தினாரோ அங்கெல்லாம் பாஜக தோற்றது என்றும் அதனால்தான் இம்முறை குறைவாகவே பேரணிகள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 

இம்முறை உள்ளூர் பிரச்னைகளை மையமாக வைத்து தேர்தலை எதிர்கொண்டதாகவும் உள்ளூர் தலைவர்களே பெரும்பாலான பொதுக்கூட்டங்களில் பேசியதாகவும் ஜிதேந்திர தீக்‌ஷித் கூறினார்.

 

ராகுல் காந்தி மற்றும் மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் உத்தியால் பின்னடைவா?

மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங்கிரஸ் 101 இடங்களில் போட்டியிட்டது. மக்களவை தேர்தலை போன்று இம்முறையும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

 

மகாவிகாஸ் அகாடி கூட்டணியின் உத்தியில் தவறு நிகழ்ந்தது எங்கே?

 

சமர் கதாஸ் இதுகுறித்து கூறுகையில், “லாட்லி பேஹன் யோஜனாவை மகாயுதி கூட்டணி அரசு தொடங்கியபோது, மகா விகாஸ் அகாடி கூட்டணி அதனை விமர்சித்தது. ஆனால், தங்கள் தேர்தல் வாக்குறுதியில் மாதம் ரூ.3,000 தருவதாக மகா விகாஸ் அகாடி கூட்டணியே தெரிவித்தது” என்றார்.

 

அவர் கூறுகையில், “மகாவிகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றாக இணைந்து பணியாற்றவில்லை. தங்களிடம் பெரும் வாக்கு சதவிகிதம் உள்ளதால், அதிகளவு இடங்களை கைப்பற்றுவோம் என காங்கிரஸ் தவறாக கணக்கு போட்டது. இதனால், காங்கிரஸ் மற்றும் சிவ சேனா (உத்தவ் தாக்கரே) கட்சிக்கிடையே பதற்றம் ஏற்பட்டது. மறுபுறம், அதானி, தாராவி மற்றும் பணவீக்கம் என்று உள்ளூர்ப் பிரச்னைகள் அல்லாத மற்ற விஷயங்களிலேயே ராகுல் காந்தி கவனம் செலுத்தினார். பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகிய பிரச்னைகளை மையப்படுத்தி தேர்தல் நடந்திருந்தால், இந்த நாட்டில் இடதுசாரி அரசாங்கம் இருந்திருக்கும். ஏனெனில், இடதுசாரி கட்சிகள் தான் அப்பிரச்னைகளில் கவனம் செலுத்துகின்றன.” என்றார்.

 

மூத்த பத்திரிகையாளர் ஜிதேந்திர தீக்‌ஷித் கூறுகையில், அதிருப்தி வேட்பாளர்களால் மகாவிகாஸ் அகாடி பெருமளவில் பாதிக்கப்பட்டது என்றார். அத்துடன், மக்களவைத் தேர்தலின் போது மக்களிடையே சரத் பவாருக்கு இருந்த அனுதாபம் தற்போது குறைந்துவிட்டதும் மிகப்பெரும் காரணமாக உள்ளது என்று அவர் கூறினார்.

 

இந்துத்துவா தாக்கம் செலுத்தியது எப்படி?

 

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் சமயத்தில், “நாம் பிரிந்துகிடந்தால், தோல்வியுறுவோம்,’ என்ற முழக்கம் மிகவும் பிரபலமானது. பிரதமர் நரேந்திர மோதி, “நாம் ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம்’ எனும் முழக்கத்தை முன்வைத்தார். இந்த முழக்கங்கள் இந்துத்துவாவுடனும் இந்து மதத்தைச் சேர்ந்த பல்வேறு சாதிகளை ஒன்றிணைப்பதுடனும் தொடர்புடையது.

 

இது மகாராஷ்டிராவில் பாஜகவின் இந்துத்துவா நோக்கத்தை வலுப்படுத்தியதா? பிரதமர் நரேந்திர மோதிக்கு இதில் பெரும் பங்கு உள்ளதா? இது இந்துத்வா அல்லது பிரதமர் மோதிக்கு கிடைத்த வெற்றி இல்லை என்றும் இது அவர்களின் உத்திக்கு கிடைத்த வெற்றி என்றும் சமர் கதாஸ் கூறுகிறார்.

 

அவர் கூறுகையில், “உத்திகளின் அடிப்படையில்தான் தேர்தல்கள் எதிர்கொள்ளப்படுகின்றன, யார், என்ன சொல்கிறார் என்பது முக்கியமல்ல. இந்துத்வா அரசியலை பொருத்தவரை இந்தியாவிலேயே பாஜக மட்டும்தான் இந்துத்வா அரசியலை மேற்கொள்கிறது. காங்கிரஸ் இதற்கான எதிர் விவாதத்தை முன்வைக்கவில்லை,” என்றார்.

 

“இந்த உத்தியை மகா விகாஸ் அகாடி எதிர்க்கவில்லை. ராகுல் காந்தியிடம் அதற்கான உத்தி இல்லை. ஓபிசி கணக்கெடுப்பு குறித்து அவர் பேசுகிறார், ஆனால், ஓபிசி பிரிவினர் பல முக்கியமான பொறுப்புகளில் உள்ளனர். அவர்களுள் இந்தியாவின் பிரதமரும் அடக்கம்,” என்றார் அவர்.

 

சமர் கதாஸ் கூறுகையில், “மகா விகாஸ் அகாடி வகுப்புவாதம் குறித்து வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும். இந்து வாக்குகள் பிரிந்துவிடுமோ என அவர்கள் பயப்படுகின்றனர். ஆனால் இந்துக்களின் வாக்குகள் இப்போது வரை பிரியவில்லை. அதானி விவகாரம் ஏன் இந்த நாட்டில் விவாதிக்கப்படுகிறது? காங்கிரஸ் ஆட்சியின் போது டாடா மற்றும் அம்பானி போன்ற பல தொழிலதிபர்கள் உருவாக்கியுள்ளனர். இப்போது பிரதமர் மோதியின் ஆட்சியில் அதானி உருவாக்கப்பட்டுள்ளார். சமூக கோட்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட நபரை மையப்படுத்தி இருக்கக்கூடாது." என்று கூறினார்.

 

தாக்கரே குடும்பத்தின் எதிர்காலம் என்ன?

 

இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, சிவசேனா கட்சியிலிருந்து பிரிந்து, பாஜகவுடன் சேர்ந்து ஏக்நாத் ஷிண்டே ஆட்சியமைத்தார். உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மீண்டு வந்து வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்போது உத்தவ் தாக்கரேவின் எதிர்காலம் குறித்து பல யூகங்கள் கிளம்புகின்றன.

 

இதுகுறித்து சமர் கதாஸ் கூறுகையில், “நீங்கள் எப்படி எதிர்த்து போராடுகிறீர்கள் என்பதை பொருத்துதான் அரசியலில் எதிர்காலம் தீர்மானிக்கப்படும். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் எதிர்காலம் என்ன? நடைபயணம் மேற்கொண்டே ஆந்திர பிரதேசத்தில் அவர் ஆட்சியை பிடித்தார். பின்னர், சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்தார். அதனால், அரசியலில் யாருடைய எதிர்காலம் குறித்தும் எதுவும் சொல்ல முடியாது” என்றார்.

 

மகாராஷ்டிராவில் சில காலமாக மனோஜ் ஜாரங்கே பட்டீல் என்ற பெயர் செய்திகளில் அடிக்கடி தோன்றுகிறது. அவர் மராத்தா பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கூறிவருகிறார். இத்தேர்தலில் அவருடைய பங்கு குறித்து சமர் கதாஸ் கூறுகையில், “அவர் மராத்தா சமூகத்தினரை ஒன்றிணைத்தார். ஆனால், மாநிலத்தில் மராத்தா சமூகத்தினர் 35% உள்ளனர். மராத்தாக்கள் ஒன்றிணைந்தால், சிறிய சாதிகளும் ஒன்றிணையும். அவர்களுள் தலித்துகள் மற்றும் முஸ்லிம்களும் அடங்குவர், இவர்களுள் அவர் அவர் யாரை ஆதரித்தாலும் அவர்களுக்கு இடம் கிடைக்கும்” என்றார்.

 

மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியுள்ளது. இப்போது அடுத்த முதலமைச்சர் யார் என்பதில்தான் கடும் போட்டி நிலவும்.

 

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம்.. ஜாமீன் பெற்று மீண்டும் அதே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை..!

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்......??? விஜய்க்கு கேள்வி எழுப்பிய தமிழிசை

அரசியல் கட்சித் தலைவர்கள் குறித்து பேசக்கூடாது: ரங்கராஜன் நரசிம்மனுக்கு, நிபந்தனை ஜாமீன்..!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments