Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜவுளிக் கடையாகும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு

ஜவுளிக் கடையாகும் மற்றுமொரு பழமையான மதுரை திரையரங்கு
, வெள்ளி, 21 அக்டோபர் 2016 (19:25 IST)
மதுரை நகரில் உள்ள கீழவெளி வீதியில் அமைந்துள்ள பழமையான திரையரங்கமான சிந்தாமணி திரையரங்கம் தற்போது இடிக்கப்பட்டுவருகிறது.
 

 
1930களின் இறுதியில் கட்டப்பட்ட இந்தத் திரையரங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பாக மூடப்பட்டது. அதற்குப் பிறகு ஜவுளி நிறுவனம் ஒன்றுக்கு விற்கப்பட்ட இந்த திரையரங்கம், சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
 
இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இந்தத் திரையரங்கத்தை இடிக்கும் பணிகள் தற்போது துவங்கியுள்ளன.
 
மதுரை நகரின் பல பழமையான திரையரங்குகள் இடிக்கப்பட்டோ அல்லது மூடப்பட்டுவிட்ட நிலையில், மேலும் ஒரு திரையரங்கு இடிக்கப்படுவது அந்நகரவாசிகளை சோகத்திற்குள்ளாக்கியிருக்கிறது.
 
`சிந்தாமணி` வசூலில் பிறந்த சிந்தாமணி திரையரங்கு:
 
மதுரையில் நூற்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த சிலர் 1930களில் சிடி சினிமா என்ற திரையரங்கையும் ராயல் டாக்கீஸ் டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் என்ற சினிமா நிறுவனத்தையும் நடத்திவந்தனர்.
 
ஒய்.வி. ராவ் இயக்கத்தில் அந்தக் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்த எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்த சிந்தாமணி என்ற படத்தை ராயல் டாக்கீஸ் தயாரித்தது. 1937 மார்ச் 12ஆம் தேதி வெளியான இந்தத் திரைப்படம் மிக வெற்றிகரமாக ஓடியது. சிடி சினிமாவிலும் பெரும் வசூலை இந்தப் படம் ஈட்டித்தந்தது.
 
இந்தப் படத்திலிருந்து கிடைத்த லாபத்தில் மதுரையில் தாங்கள் கட்டிய திரையரங்கத்திற்கு சிந்தாமணி என அந்த நிறுவனத்தினர் பெயர் சூட்டினர்.
 
ஜவுளிக் கடையாகும் சிந்தாமணி:
 
தியாகராஜ பாகவதர் நடித்த சிவகவி, சிவாஜி கணேசன் நடித்த பாகப் பிரிவினை, எம்.ஜி.ஆரின் அடிமைப் பெண், இதயக்கனி போன்ற படங்களில் துவங்கி, மாதவன் நடித்த ரன், கமல்ஹாசனின் விருமாண்டி வரையிலான படங்கள் இங்கு வெளியாகின.
 
இந்தத் திரையரங்கு திறக்கப்பட்ட காலகட்டத்தில் மதுரையின் பெரிய திரையரங்குகளில் இதுவும் ஒன்றாக இருந்தது. ஆனால், 90களின் இறுதியில் இந்தத் திரையரங்கில் வருவாய் குறைய ஆரம்பித்தது. மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இயங்கினாலும் வெற்றிகரமாக இயங்க முடியவில்லை.
 
இந்த நிலையில் இந்தத் திரையரங்கை வாங்கிய ஜவுளி நிறுவனம், அதனை சரக்குகளை வைக்கும் இடமாகப் பயன்படுத்திவந்தது. தற்போது அந்த இடத்தில் மிகப் பெரிய ஷோரூமைத் திறக்கத் திட்டமிட்டிருக்கும் அந்நிறுவனம் திரையரங்கை இடிக்க ஆரம்பித்துள்ளது.
 
மதுரை நகரில் ஏற்கனவே தேவி, நியூ சினிமா, தினமணி, சிடி சினிமா, இம்பீரியல், தங்கம் திரையரங்கம், சிவம், போத்திராஜா, வெள்ளைக்கண்ணு, ஜெயராஜ், தீபா - ரூபா, பரமேஸ்வரி என மறைந்துபோன திரையரங்குகளின் வரிசையில் தற்போது சிந்தாமணி திரையரங்கமும் இணைந்திருக்கிறது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் சகஜமாக பேசி வருகிறார் : அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை