Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீன Vs தைவான்: தீவுக்குள் பறந்த ட்ரோன்களை சுட்டு விரட்டிய படையினர்

Webdunia
புதன், 31 ஆகஸ்ட் 2022 (22:59 IST)
கின்மென் என்பது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீவுக்கூட்டங்களில் ஒரு பகுதி.

 
சீனாவுக்கு அருகில் உள்ள தமது தீவுகளுக்கு மேலே பறந்து சென்ற சீன ட்ரோன்களை எச்சரிக்கும் விதமாக தைவான் முதல் முறையாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.
 
 
இந்த நடவடிக்கைக்குப் பிறகு மூன்று ட்ரோன்களும் மீண்டும் சீன நிலப்பகுதியை நோக்கி திரும்பிப் பறந்ததை பார்க்க முடிந்ததாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
 
சமீபத்திய வாரங்களாகவே சீன ட்ரோன்கள் சீன நிலப்பகுதிக்கு அருகே உள்ள தமது தீவுக் கூட்டங்களுக்கு மேலே பறந்து வருவதாக தைவான் புகார் கூறி வந்தது.
 
 
இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அரசியல் தலைவர் நான்சி பெலோசி தைவானுக்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது முதல் சீன, தைவான் நீரிணை பகுதிகளில் பதற்றம் அதிகமாக உள்ளது.
 
 
பெலோசியின் வருகைக்குப் பிறகு, தைவானை ஒட்டிய கடல் பகுதிகளில் தமது படை பலத்தை பெருக்கிய சீனா மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சியிலும் ஈடுபட்டது. இதன் பின்பாக தைவான் கடல் பகுதியில் சீனா ட்ரோன்களை பறக்க விடுவதாக தைவான் கூறியது.

 
தைவான் தலைவர் சாய் யிங்-வென், "சில ட்ரோன்கள் ராணுவ புறக்காவல் சாவடிகளுக்கு மேல் பறந்தது - ஒரு வகை போர் நடவடிக்கை என்று அழைத்தார்.
 
 
சீன நகரமான ஜியாமெனில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள மூன்று கின்மென் தீவுகளான தாடன், எர்டான், ஷியு ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை மாலை மூன்று சிவிலியன் ட்ரோன்கள் காணப்பட்டதாக கின்மென் பாதுகாப்பு கட்டளை மையம் கூறியது.

 
 
இதையடுத்து ஆளில்லா விமானத்தை நேரடியாகச் சுடுவதற்கு முன், எச்சரிக்கும் விதமாக தீப்பொறிகளை பறக்கும் குண்டுகளை வானை நோக்கிச் சுட்டதாக தைவான் கூறியது. இதன் பிறகு அந்த ட்ரோன்கள் ஜியாமென்னை நோக்கித் திரும்பின

 
 
தைவானின் சமீபத்திய குற்றச்சாட்டு தொடர்பாக சீனா இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் சமீபத்திய வாரங்களாக சீன ட்ரோன்களை பயன்படுத்து துன்புறுத்துவதாக தைவான் சுமத்திய குற்றச்சாட்டுகளை சீனா நிராகரித்துள்ளது.

 
"சீனாவின் எல்லையில் பறக்கும் ட்ரோன்கள் அவை. இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது?" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் தெரிவித்தார்.
 
ஆனால், அவரது கருத்துக்கு தைவான் வெளியுறவு அமைச்சகம் கோபத்துடன் எதிர்வினையாற்றியது. "அழைக்கப்படாதவர்களை திருடர்கள் என்று அழைக்கிறார்கள்" என்று அவர் குறிப்பிட்டார்.
 
ஆகஸ்ட் மாத நடுப்பகுதியில், தைவான் வீரர்கள் ட்ரோன்களை விரட்டும் முயற்சியாக அவற்றை நோக்கி கற்களை வீசும் காட்சிகள் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பப்பட்டன. இந்த வீடியோ சீன சமூக ஊடகங்களில் பயனர்களால் பரவலான கேலிக்கும் ஆளானது.

 
கடந்த வாரம் நாட்டு மக்களுக்கு உறுதியளித்த தைவான் தலைவர் சாய் யிங்-வென், தீவின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று கூறினார். கடந்த வாரம், அவரது அரசாங்கம் T$586.3 பில்லியன் ($19 பில்லியன்; £16பில்லியன்) மதிப்பிலான பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட்டை வெளியிட்டது.
 
 
இந்த நிலையில், புதன்கிழமை எதிர்வினையாற்றிய தைவான், "எதிர்காலத்தில் சீன விமானங்களும் கப்பல்களும் எல்லைக்குள் நுழைந்தால் "எதிர் தாக்குதலுக்கு" தயார்," என்று கூறியது.
 
 
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் பெலோசியின் வருகைக்கு பதிலடியாக தைவானைச் சுற்றி சீனா தனது மிகப்பெரிய ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டது. அதன் ஒரு வாரத்துக்குள்ளாகவே தைவான் மீது உரிமை கோரும் இடங்களை நோக்கி ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை சீனா அனுப்பியது.
 
 
• சீனாவும் தைவானும் ஏன் மோசமான உறவுகளைக் கொண்டுள்ளன? சீனா சுயாதீன தீவை தனது பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதுகிறது. தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக அதை பிரதான நிலத்துடன் இணைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.

 
• தைவான் எவ்வாறு ஆளப்படுகிறது? தீவில் அதன் சொந்த அரசியலமைப்பு உள்ளது, ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் அங்கு ஆளுகை செய்கிறார்கள். தைவான் ஆயுதப்படைகளில் சுமார் 3,00,000 படையினர் உள்ளனர்.
 

 
தைவான் தென்கிழக்கு சீனாவின் கடற்கரையிலிருந்து சுமார் 100 மைல் தூரத்தில் உள்ள ஒரு தீவு."முதல் தீவுச் சங்கிலி" என்று அழைக்கப்படும் பகுதியில் தைவான் உள்ளது. அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு நெருக்கமான நட்பு பிரதேசங்களின் பட்டியலில் தைவான் உள்ளது.தைவானை சீனா கைப்பற்றினால், மேற்கு பசிஃபிக் பிராந்தியத்தில் தனது அதிகாரத்தை முன்னிறுத்துவதற்கு சுதந்திரமான சூழலை சீனாவுக்கு தரலாம் என்று சில மேற்கத்திய நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும் குவாம் ,ஹவாயீ வரை உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை அச்சுறுத்தவும் இந்த தீவு பயன்படுத்தப்படலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.ஆனால் சீனா தனது நோக்கங்கள் முற்றிலும் அமைதியானது என்று வலியுறுத்துகிறது.தைவான் எப்போதுமே சீனாவிலிருந்து பிரிந்து கிடந்ததா?

 
சியாங் காய் ஷெக், தைவானுக்கு சென்ற பிறகு கோமின்டாங் கட்சி தலைமையில் ஆளுகையை செலுத்தினார்.
 
17ஆம் நூற்றாண்டில் குயிங் வம்சத்தினர் தைவானை நிர்வகிக்கத் தொடங்கியபோது அந்தத் தீவு முதன்முதலில் முழு சீன கட்டுப்பாட்டின் கீழ் வந்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. பின்னர், 1895இல், குயிங் வம்சத்தினர், முதலாவதாக நடந்த சீன ஜப்பானிய போரில் தோல்வியடைந்த பிறகு தங்களுடைய தீவை ஜப்பானுக்கு விட்டுக் கொடுத்தனர்.இரண்டாம் உலக போரில் ஜப்பான் தோல்வியடைந்த பிறகு 1945இல் சீனா மீண்டும் தைவானைக் கைப்பற்றியது.ஆனால், சீனாவின் பிரதான நிலப்பரப்பில் சியாங் காய்-ஷேக் தலைமையிலான தேசியவாத அரசாங்க படைகளுக்கும் மாவோ சேதுங்கின் கம்யூனிஸ்ட் கட்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்தது.1949இல் கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்று சீனாவில் ஆட்சியைக் கைப்பற்றினர்.சியாங் காய்-ஷேக் மற்றும் தேசியவாதக் கட்சியில் எஞ்சியிருந்த - கோமின்டாங் என அழைக்கப்படும் கட்சியினர், தைவானுக்கு தப்பிச் சென்றனர். அங்கு அவர்கள் ஆட்சியமைக்கத் தொடங்கி அடுத்த பல பத்தாண்டுகளுக்கு ஆட்சி செய்தனர்.தைவான் அடிப்படையில் ஒரு சீன மாகாணம் என்று அதன் வரலாற்றை சீனா சுட்டிக்காட்டுகிறது. ஆனால் தைவானியர்கள் 1911இல் புரட்சிக்குப் பின்னர் முதன்முதலில் உருவாக்கப்பட்ட நவீன சீன அரசு அல்லது 1949இல் மாவோவின் கீழ் நிறுவப்பட்ட சீன மக்கள் குடியரசின் ஒரு பகுதியாக இல்லை என்று வாதிடுவதற்கு அதே வரலாற்றை சுட்டிக்காட்டுகின்றனர்.கோமிண்டாங், தைவானின் மிக முக்கியமான அரசியல் கட்சிகளில் ஒன்றாக இருந்து வருகிறது - அதன் வரலாற்றின் குறிப்பிடத்தக்க பகுதியாக அதன் ஆளுகை உள்ளது. தற்போது, ​​தைவானை இறையாண்மை கொண்ட நாடாக 13 நாடுகள் (வத்திக்கான் உள்பட) அங்கீகரிக்கின்றன.தைவானை அங்கீகரிக்கக் கூடாது அல்லது அங்கீகாரத்தைக் குறிக்கும் எதையும் செய்யக் கூடாது என்று சீனா, மற்ற நாடுகள் மீது கணிசமான ராஜீய அழுத்தங்களைச் செலுத்துகிறது.
 
தைவானால்சுயமாக தற்காத்துக் கொள்ள முடியுமா?
 
பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல் போன்ற ராணுவம் அல்லாத வழிகளில் "மறு ஒருங்கிணைப்பை" சீனா முயற்சிக்கலாம்.ஆனால், ராணுவ பலத்தில் ஒப்பிடும்போது சீனாவின் ஆயுதப்படைகளுக்கு நிகராகக் கூட தைவானின் படைகள் இல்லை.
 
அமெரிக்காவை நீங்கலாக உலகிலேயே வேறு எந்த நாட்டையும் விட சீனா பாதுகாப்புக்காக அதிகம் செலவழிக்கிறது. கடற்படை தளவாட பலம் முதல் ஏவுகணை தொழில்நுட்பம், விமானம் மற்றும் இணைய வழி தாக்குதல்கள் வரை என பெரிய அளவிலான திறன்களுக்காக அந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் ராணுவ பலத்தின் பெரும்பகுதி முக்கிய எல்லை பகுதிகளில் வீரர்களை நிலைநிறுத்த பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் தைவானுக்கும் சீனாவுக்கும் இடையிலான ராணுவ படை கட்டமைப்பு கூட ஒப்பிட முடியாத அளவுக்கு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments